ஒன்றிய அரசின் சதி அம்பலம்!
பீமா கோரேகான் வழக்கில் டிஜிட்டல் தடயவியல் நிபுணர் ராபர்ட் ஜான் மோராவின் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. ரோனா வில்சன், ஸ்டான் சுவாமி ஆகியோரின் கணினி களில் காணப்பட்ட ஆதாரங்கள் வைரஸ் (மால்வேர்) மூலம் வேண்டுமென்றே ஊடுருவச் செய்யப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் பொருள் அரசே போலி ஆதாரங்களை உருவாக்கி நிரபராதிகளைச் சிறையில் அடைத்துள்ளது என்பதுதான்.
மேற்கண்ட வழக்கு வெறும் சட்டப் பிரச்சனை அல்ல. இது ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு இயந்திரங்களின் துணை யோடு மாற்றுக்குரல்களை நசுக்கும் நவீன பாசிசத்தின் செயல்முறை ஆகும். இந்துத்துவா கருத்தியலுக்கு எதிரான மாற்றுச் சிந்தனைகள் கொண்டோரை, குறிப்பாகத் தலித், பழங்குடி மற்றும் உழைக்கும் மக்களுக்காகப் போராடு பவர்களை, எவ்வாறு திட்டமிட்டு வேட்டையாடு கிறது என்பதை இது அப்பட்டமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
புனே காவல்துறை, என்ஐஏ (NIA) மற்றும் அரசின் தடயவியல் ஆய்வகங்கள் போன்ற நிறுவனங்கள், ஒரு எளிய வைரஸ் ஸ்கேனரால் கண்டறியக்கூடிய மால்வேரை “கண்டறியத் தவறியதன்”மூலம், இந்தச் சதித் திட்டத்திற்கு மறைமுகமாகவோ அல்லது வெளிப்படை யாகவோ துணை போயுள்ளன. அரசின் விசார ணை அமைப்புகள், அரசியல் எஜமானர் களுக்குச் சேவை செய்யும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரத்தின்படி 2018 முதல் 2021 வரை சுமார் 7,656 பேர் உபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீதத் திற்கும் மேற்பட்டவர்கள் விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் உள்ளனர். ஆனால் இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட வழக்குகள் 1 சதவீதத்திற்கும் குறைவு.
மும்பை உயர்நீதிமன்றம் ரோனா வில்சனுக்கு ஜாமீன் வழங்கியபோது, “விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் அடைப்பது அரசிய லமைப்பின் 21வது பிரிவை (வாழும் உரிமை) மீறுவதாகும்”என்று தெளிவாகக் கூறியது. இதன் மூலம், நீதி வழங்கும் கடமையில் அரசு இயந்திரங்கள் தோல்வியடைந்துள்ளன என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
மக்கள் உரிமைகள் மற்றும் இடதுசாரிச் சிந்தனைகள் கொண்ட செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை “நகர்ப்புற நக்சல்கள்”என முத்திரை குத்தி, அவர்களைச் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த ஒன்றிய மோடி அரசு முயல்கிறது.
பீமா கோரேகான் வழக்கு, யாருக்கோ நடக்கும் அநீதி அல்ல. நாளை ஒன்றிய பாஜக அரசு விரும்பினால், அதன் சித்தாந்தத்திற்குச் சவால் விடும் எந்தவொரு சாதாரணக் குடிமக்களுக்கும் இது நடக்கலாம். இதுஇந்திய ஜனநாயகத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
