headlines

img

உடன்பட முடியாத உடன்பாடுகள்!

உடன்பட முடியாத உடன்பாடுகள்!

பாலஸ்தீன மக்களின் தாயகத்தை அநியாய மாக ஆக்கிரமித்த இனவெறி இஸ்ரேல் அரசு தொடர்ந்து அந்த மக்களை அழித்து வரு கிறது. அமெரிக்காவின் ஆசியுடன் செயல்படும் இஸ்ரேல் அரசு இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறது. பெண்கள், குழந்தைகள் கொத்துக் கொத்தாக பலியாவது குறித்து யூத இனவெறி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. காசா பகுதியில் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த  ஒப்பந்தத்தைக் கூட இஸ்ரேல் அரசு மதிக்க வில்லை. குண்டுகளை வீசி கொலைசெய்கிறது. 

இந்தப் பின்னணியில் இஸ்ரேல் குறித்த தன்னுடைய கொள்கையை ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் பெரும் பரிவாரத்தோடு இஸ்ரேல் சென்று இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். 

இரண்டு தவணைகளாக இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி யுள்ளார். இஸ்ரேலுடன் ஒன்றிய அரசு செய்து கொண்டுள்ள உடன்பாடுகள் அனைத்தும் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமானவை. உதாரணமாக ரூ.4லட்சம் கோடி செலவில் 300 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ பணிகள் மேற் கொள்வதற்கு இந்திய கார்ப்பரேட் நிறுவனங்  கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுபுறத்தில் இஸ்ரேலிடமிருந்து ராணுவத் தளவாடங்களையும், உளவு மென்பொருள் களையும் ஒன்றிய அரசு வாங்கிக் குவிக்கிறது. இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட  பெகாசஸ் மென்பொருள் எதிர்க்கட்சிகளை வேவுபார்க்க பயன்படுத்தப்பட்டது பெரும் அதிர்வலைகளை இந்தியாவில் ஏற்படுத்தியது. இன்னும் எத்தனை உளவு மென்பொருள்களை வாங்கத் திட்டமிட்டுள் ளன என்பதை ஒரு உளவு நிறுவனம் வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். 

இனவெறிப் போக்கை கடைப்பிடிப்பதால் இஸ்ரேலுடன் எத்தகைய தூதரக உறவையும் 1992 வரை இந்திய அரசு மேற்கொள்ளாமல் இருந்தது. ஆனால் 2000ஆம் ஆண்டில் துவங்கிய இருதரப்பு உடன்பாடுகள் தற்போது உச்சத்தை அடைந்துள்ளன.

பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து வரும் இஸ்ரேலுடன் மேலும் மேலும் வர்த்தக, பாதுகாப்புத்துறை உறவுகளை வலுப்படுத்துவது அந்த அரசின் இரக்கமற்ற இனவெறி அழிவுக்கு மறைமுகமாக துணை நிற்பதாகும். அமெரிக்காவிடமிருந்து ஏராள மான ராணுவத் தளவாடங்களை வாங்குவதற் கான ஒப்பந்தமும் மறுபுறத்தில் இஸ்ரேலுடன் வர்த்தக ஒப்பந்தமும் இந்தியா பின்பற்றி வந்த அயல்துறை கொள்கைக்கு எதிரானதாகும். இஸ்ரேல் அரசுக்கு ஆதரவான நிலைபாடு காரண மாக இந்தியா பின்பற்றி வந்த கூட்டுச்சேராக் கொள்கையும் கைகழுவப்பட்டு வருகிறது. இஸ்ரேல் அரசு பின்பற்றும் கொள்கைகள் பாஜக வின் இந்துத்துவா கொள்கைக்கு இணக்கமாக இருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்திய மக்கள் இஸ்ரேலின் இன வெறிக்கு எதிராகவே எப்போதும் இருப்பார்கள்.