உங்களுடைய தவறுக்கு மக்களுக்கு தண்டனையா?
அசாமுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறி வைத்து நடத்தும் இந்த எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்குத் தொடுத்துள்ளன. கால அவகாசம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் திங்களன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், டிசம்பர் 4-க்குப் பின் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று கூறியுள்ளார். இதற்காக வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. கேரளம், மேற்குவங்க மாநிலங்களில், வாக்குச் சாவடி அலுவலர்கள் தற்கொலை செய்திருப்பது கொடுமை.
மேற்கு வங்கத்தில் திங்களன்று நடந்த போராட்டத்தில் 2 ஆண்டுகள் மேற்கொள்ள வேண்டிய பணியை ஒரு மாதத்தில் மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது. கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையிலும் கூட எஸ்ஐஆர் பணி நடத்தப்படுகிறது.
தகுதியான எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படமாட்டாது என்றும் 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே நீக்கப்படுவார்கள் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். அதில் ஒன்று படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது திருப்பித் தராதவர்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் அவர் 96 சதவீத படிவங்கள் வாக்காளர் களிடம் வழங்கப்பட்டுள்ளன என்கிறார். அப்படி யானால் 4 சதவீத வாக்காளர்களின் கதி என்ன? இவர்களது தவறுக்கு வாக்காளர்களுக்குத் தண்டனையா?
அவரது கூற்றுப்படியே 50 சதவீத படிவங்கள் தான் வந்து சேர்ந்துள்ளன. 68,470 பிஎல்ஓ-க்களில் 327 பிஎல்ஓ-க்கள் தான் 100 சதவீத பணியை நிறைவு செய்துள்ளனர் என்றும் ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறுகிறார். இருக்கிற 8 நாட்களில் இன்னும் 50 சதவீத படிவங்கள் வந்து சேர்ந்திடுமா? இவர்களால் கொடுக்கப்படாத 4 சதவீத படிவங்களின் வாக்காளர்கள் நீக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஒவ்வொரு தொகுதியிலும் 20 ஆயிரம் முதல் 40 வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டிய சூழல் உள்ளது என்கிறார் அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி. எப்படி இவ்வளவு துல்லியமாகச் சொல்கிறார்? பாஜக தலைவர்கள் பலரும் இதுபோல் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? தமிழகத்தில் புயல் மழை தாக்குதல்களிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட வேண்டியவர்கள் எப்படி எஸ்ஐஆர் பணியில் கவனம் செலுத்த முடியும்? எனவே கட்டாயம் கால நீட்டிப்பு அவசியம்!
