கோவையில் செம்மொழிப் பூங்கா: தமிழக முதல்வர் திறந்து வைத்தார்!
கோயம்புத்தூர், நவ. 25 - கோவை காந்திபுரம் மத்தியச் சிறைச் சாலை வளாகத்தில் 45 ஏக்கர் பரப்பளவில், 208.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 2010-ஆம் ஆண்டு உலக செம்மொழி மாநாட்டின்போது அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அறிவித்த இத்திட்டம் ஆட்சி மாற்றத்தால் கிடப்பில் போடப்பட்டது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2023 டிசம்பரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு, ஒரே ஆண்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், செம்மொழிப் பூங்காவை, செவ்வாய்க்கிழமையன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துத் தோட்டங் களையும் நேரில் சென்று பார்வையிட் டார். பள்ளிக் குழந்தைகள், மாற்றுத்திற னாளிகளுடன் உருக்கமாகக் கலந்துரையாடினார். கோவையைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட முக்கியப் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேசினார். திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார். முன்னதாக, கோவை வந்திறங்கிய முதலமைச்சருக்கு தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர்கள் கே.என். நேரு, மு.பெ. சாமிநாதன், டி.ஆர்.பி. ராஜா, கயல்விழி செல்வராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
