world

img

அமெரிக்கா: கொரோனா தொற்றால் 10ல் ஒரு குழந்தை பாதிப்பு

 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 10ல் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் வல்லரசு நாடாக கூறப்படும் அமெரிக்க நாட்டை கோவிட் 19 என்கிற கொரோனா வைரஸ் புரட்டி போட்டு வருகிறது. இந்நாட்டில் மட்டும் தற்போது வரை 5.4 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,42,000 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தகைய சூழலில் கடந்த சில தினங்களாக அந்நாட்டில் தினசரி தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தொற்று பாதிப்பாளர்களில் அண்மைகாலமாக குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கோவிட் 19 வைரஸ் தொற்று அமெரிக்காவில் பரவ துவங்கியதில் இருந்து தற்போது வரை 75 லட்சம் குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி அமெரிக்க நாட்டில் வசிக்கும் 10ல் ஒரு குழந்தை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளது.

மேலும், இந்த எண்ணிக்கை என்பது அண்மைகாலமாக மிக மிக வேகமாக அதிகரித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை மட்டும் 25 லட்சம் குழந்தைகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஒரு வாரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் குழந்தைகள் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை இரட்டிப்பாக துவங்கியுள்ளது. டிசம்பர் மாதத்தின் முடிவடைந்த இந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் மிக பதற்றமான சூழல் நிலவி வருகிறது.