அமெரிக்க அரசு தொடர் முடக்கம் விமானங்கள் ரத்து
நிதி ஒதுக்கீடுக்கான பட்ஜெட்டிற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறமுடியாமல் அமெரிக்க அரசு தோல்வியடைந்துள்ளது. இதனால் அக்.1 முதல் 40 நாட்களுக்கு மேலாக பல துறைகளில் லட்சக்கணக்கான ஊழியர்கள் ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். விமானப் போக்குவரத்துத் துறையில் ஊழியர்கள் இல்லாத நிலையில் விமான பயணப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நவம்பர் 9 ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 2000 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 8,000-க்கும் அதிகமான விமானப் பயணங்கள் தாமதமாகியுள்ளன.
பிலிப்பைன்ஸில்`பங்வோங்’ புயல் 14 லட்சம் பேர் வெளியேற்றம்
பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸில் மோசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ‘பங்வோங்’ என்ற புயல் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இப்புயல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்க உள்ள நிலையில் சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு அவசரகால முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
போருக்குத் தயார் : ஆப்கன் அறிவிப்பு
பாகிஸ்தானுடன் போருக்குத் தயாராக இருப்பதாக தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இரு நாட்டு எல்லைப்பகுதி மாநிலங்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் சமீபத்தில் மோதல் உருவானது. இந்த மோதல் போராக மாறாமல் இருக்க தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி யடைந்துள்ளது. இந்நிலையில் ஆப்கனின் அறிவிப்பு தெற்காசியாவில் மீண்டும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
கடலில் மூழ்கியது படகு : 100 பேரைக் காணவில்லை
மியான்மரில் இருந்து ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு தாய்லாந்து - மலேசிய கடல் எல்லைப் பகுதியான லங்காவி அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து குறித்தான முதற்கட்ட தகவலில் படகில் பயணித்த 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள் என 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 100 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
44 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் அகதிகள் முகாம்களில் படுகொலை
2023 அக்டோபர் மாதம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 254 பத்திரிகையாளர்களை படுகொலை செய்துள்ளது. இதில் 44 பத்திரிகையாளர்கள் காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களுக்குள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்படக்கூடாது என அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், ஐ.நா அகதிகள் முகாம்களில் அவர்கள் கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
