அமெரிக்கா-உக்ரைன் பேச்சுவார்த்தை : ரஷ்யாவின் ஒப்புதல் அவசியம்
உக்ரைன்-ரஷ்ய போர் நிறுத்தம் தொடர்பாக புடினுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அமெரிக்க அதிகாரிகள் உக்ரைன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் மியாமி நகரில் மூன்றாவது நாளாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அது ரஷ்யாவின் விருப்பத்தைப் பொறுத்தே இருக்கும் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மீண்டும் மோதல்
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே எல்லையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் இரு நாட்டு அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் மோதலுக்கு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். சுமார் இரண்டு மணி நேரம் மோதல் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
தேசத் துரோகிகளுக்கு மரணதண்டனை : புர்கினா பாசோவில் சட்டம்
புர்கினா பாசோவின் ராணுவ அரசு தேசத்துரோகம், பயங்கரவாதம், நாட்டை உளவு பார்க்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவர உள்ளது. அந்நாட்டின் ஆட்சியை கவிழ்க்க பிரான்ஸ் உளவுத்துறை ரகசிய திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் புர்கினா பாசோ இறையாண்மை, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான ஆட்சியை பாதுகாக்க இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக அந்நாட்டின் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை டிட்வா புயல் : பலி எண்ணிக்கை 607
இலங்கையில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட புயல் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 607 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவுகளால் பல இடங்களில் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் மத்திய மலைத்தொடர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் மீண்டும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 214 ஆக உள்ளது. அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. 2004 சுனாமிக்கு பிறகு அந்நாடு மிக மோசமான பேரழிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கியது நெட்பிளிக்ஸ்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு மேலாக உலக அளவில் திரைப்பட தயாரிப்பு, விநியோகத்தில் முன்னணி நிறுவனமாக வார்னர் பிரதர்ஸ் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தை அதன் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.7.44 லட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. தற்போது வார்னர் பிரதர்ஸின் ஸ்டுடியோக்கள், திரைப்படங்கள், ஹெச்.பி.ஓ. ஓடிடி தளம், இணைய தொடர்கள் அனைத்தும் நெட்பிளக்ஸ் கைவசமாகியுள்ளது.
