ஈரான் போர்க்கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கை கடற்படையால் மீட்பு
கொழும்பு, மார்ச் 4- இந்திய பெருங்கடலில் மூழ்கிக்கொண்டிருந்த ஈரானின் போர்க்கப்பலில் இருந்த 30 க்கும் மேற்பட்ட மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் புதன்கிழமை தெரிவித்தார். ஈரானின் ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’ (IRIS Dena) போர்க்கப்பல், இலங்கையின் தென்மேற்கு நகரமான காலியில் (Galle) இருந்து சுமார் 40 கடல் மைல் தொலை வில் இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியில் இந்தியப் பெருங்கடலில் புதன்கிழமை அதிகாலை கடலில் மூழ்கத் தொடங்கியது. அந்தப் போர்க்கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தொடர் மீட்பு பணி கள் நடைபெற்று வரும் நிலையில் யாரேனும் பலியாகி யுள்ளனரா என உடனடியாகத் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஈரான் போர்க்கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்க லாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற் கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் என்ற கூற்றை இலங்கை பாதுகாப்புத்துறை மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் தரும் பதிலடி ஆகியவற்றால் மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் சர்வதேச கடல் பகுதிகளுக்கும் பரவியுள்ள சூழலில் இந்தச் சம்பவம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
