ஜெனீவா:
பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது. சமீபத்தில் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், பிரிட்டனில் இருந்து வேறு நாடுகள் வழியாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் தற்போது 60 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவும்தன்மை கொண்டதால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தனிமனித இடைவெளியை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.