world

img

தீக்கதிர் உலக செய்திகள்

1000 நாட்களை கடந்தது சூடான் உள்நாட்டுப் போர்  

சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஜனவரி 9 ஆம் தேதியுடன் 1,000 நாட்களைக் கடந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சுமார் 3.4 கோடி பேருக்கு உடனடி மனிதாபிமான உதவி தேவைப் படுகிறது. 2.1 கோடி மக்கள் அந்நாட்டில் போதிய உணவில்லாமல் கடும் பட்டினியிலும் தவித்து வருகின்றனர். குறிப்பாக எல் ஃபாஷர், கடுக்லி ஆகிய பகுதிகளில் கடுமையான பஞ்சம் நிலவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்ப் கருத்துக்கு டென்மார்க்கில் கடும் எதிர்ப்பு

கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதில் டிரம்ப் தீவிரமாக உள்ளார். கிரீன்லாந்து மக்க ளுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் சுமுகமான முறையிலோ அல்லது  ராணுவ நடவடிக்கை மூலமாக வோ அப்பகுதியை கைப்பற்றுவோம். இல்லையென்றால் ரஷ்யா அல்லது சீனா, கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் எனவும் கூறியுள்ளார். டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு கிரீன்லாந்தின் ஐந்து முக்கிய அரசியல் கட்சிகள் ஒன்றிணை ந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன், அமெரிக்காவின் இத்தகைய மிரட்டல்கள் நேட்டோ பாதுகாப்பு கூட்டணியையே உடைத்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ : 7 லட்சம் ஏக்கர் நிலம் அழிவு  

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் கடந்த சில நாட்க ளாக நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாகக் காட்டுத் தீ ஏற்பட்டு வேகமாகப் பரவி வருகிறது. விக்டோரியா மாகாணத்தில் மட்டும் சுமார் 7.4 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு தீயால் கருகியுள்ளது. 130-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகள் தீயில் அழிந்துள்ளன. அங்கு பேரிடர் மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. இது சாதாரண வெப்பநிலையை விட 17 டிகிரி அதிகமாகும்.

கிடங்கில் குப்பை சரிந்து விழுந்து 4 பேர் பலி, பலர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் உள்ள பினாலிவ் (Binaliw) குப்பைக் கிடங்கில்  20 மாடி உயரத்தி ற்கு மலைபோல் இருந்த  ராட்சத குப்பைக் குவியல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் குப்பைக் கிடங்கு ஊழியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  12 ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 34 பேர் காணாமல் போயுள்ளனர். தற்போது குப்பைகளுக்கு இடையே சுரங்கம் அமைத்தும், இயந்திரங்களைப் பயன்படுத்தி அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரான் தலைவர் கமேனி டிரம்ப்புக்கு கடும் எச்சரிக்கை

 அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளின் காரணமாக ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம்  கடும் பாதிப்பை சந்திக்க துவங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. இச்சூழலில்  50 ஆண்டுகளுக்கு முன்  நாடு கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு சென்ற  அந்நாட்டின் முன்னாள் இளவரசர்  ரேசா பஹ்லவி  மீண்டும் ஈரான் வர  திட்ட மிட்டுள்ளார். இந்த சூழலை ஆட்சிக்கவிழ்ப்புக்கு பயன்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார். மேலும் ஈரானை தாக்கு வேன் எனவும் மிரட்டி வருகிறார். இதற்கு அந்நாட்டின் மதத்தலைவர் அலி கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.