சமூகநீதி போராட்டங்களுக்கு வலிமை சேர்த்தவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் அளித்துள்ள அறிக்கை வருமாறு:
2007 ல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துவக்கப்பட்ட காலத்தில் இருந்து அதன் பணிகளில் ஆகச்சிறந்த பங்களிப்புகள் செய்து வந்தவர் வழக்கறிஞர் உ.நிர்மலாராணி அவர்கள்.
தமிழ்நாட்டின் சமூகநீதி போராட்டக்களத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மிக முக்கியமான பங்களிப்பு தலித் அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு ஆகும். 2009இல் தலித் அருந்ததியர் மக்களின் உள் இட ஒதுக்கீடு சட்டமானது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பலர் வழக்கை தொடர்தனர். இதற்கு எதிராக உள் இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வழக்கை நடத்தி முத்திரை பதித்த தீர்ப்பினை பெற்றுத் தந்தவர்.
2009 ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் உத்தப்புரம் தீண்டாமை சுவர் அகற்றம் என்கிற வரலாற்று சிறப்பு மிக்க போராட்டத்திற்கு பிறகு உத்தபுரம் பட்டியலின மக்கள் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக களத்தில் நின்று போராடியது. இக்கொடூரமான தாக்குதலை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் ரூ.1 கோடிக்கும் மேலாக நிவாரணத்தொகை பெறுவதற்கு திறம்பட வழக்கை நடத்தியவர் தோழர் உ.நிர்மலாராணி அவர்கள். தற்போது வரை உத்தப்புரத்தில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமைக்கான வழக்கை நடத்தி வந்தவர்.
உசிலம்பட்டி விமலாதேவி வழக்கில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை பாதுகாக்க அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நீதிமன்ற உத்தரவுகளாக பெற்றுத் தந்தவர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவை வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து தயாரித்து வழங்கியதில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர். சமூகநீதி மற்றும் பெண்ணுரிமைக்கான வழக்குகளில் வழிகாட்டுதல்களை வழங்கியதோடு பல முக்கிய வழக்குகளில் வழக்கறிஞர்களாக செயல்பட்டவர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய அன்புத் தோழர் நிர்மலா ராணி அவர்களின் மறைவு என்பது சமூகநீதி இயக்கங்களுக்கு பேரிழப்பு! என்று மாநில தலைவர் த.செல்லக்கண்ணு பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
