நான் வாழ விரும்பும் உலகம் - நவோமி ஷிஹாப் நை
என் விமானம் நான்கு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்ற செய்தியைத் தொடர்ந்து; “4-A வாயிலுக்கருகில் இருக்கும் யாருக்காவது அரபி மொழி புரியுமானால் உடனே இங்கு வரவும்,” என்ற அறிவிப்பைக் கேட்டேன். அது நான் செல்ல வேண்டிய வாயிற்கதவும் கூட. சின்ன யோசனைக்குப் பின் அங்கு சென்றேன். ஒரு வயதான பெண்மணி, பாரம்பரிய பாலஸ்தீன உடையில் - என் பாட்டி உடுத்துவது போன்றே - சத்த மாக ஓலமிட்டபடி தரையில் சுருண்டு கிடந்தார். “அவருக்கு உதவுங்கள். அவரிடம் பேசி என்ன பிரச் சனை என்று கேளுங்கள், நாங்கள் விமானம் நாலு மணி நேரம் தாமதாமாக புறப்படும் என்று சொன்ன மாத்திரத் திலிருந்து இவர் இப்படி இருக்கிறார்” என்றார் விமான சிப்பந்தி. நான் அவரை லேசாக அணைத்தவாறே, ஒரு தயக் கத்துடன் பேசினேன். “ஷூ டோவா ஷூ பிடுக் ஹபீப்ட்டி. ஸ்டானி ஸ்டானி ஸ்வாய், மின் ஃபத்லிக், ஷோ பிட் சேவீ” தன்மொழியைக் கேட்டதும்... அத்தனை மோசமாக நான் பேசினாலும், அவர் தன் மொழியைக் கேட்டதும், அந்த நொடியே அழுகையை நிறுத்தினார். அவருடைய விமானம் முழுவதுமாக ரத்தாகி விட்டது என்று தவறாக புரிந்து கொண்டிருந்திருக்கிறார். மறுநாள் எல் பாசோவில் ஒரு மிக முக்கியமான மருத் துவ சிகிச்சைக்கு அவர் இருந்தாக வேண்டும். நான் அவரிடம் சொன்னேன், “ஒன்றும் பிரச்சனை இல்லை, போய்விடலாம். கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேர் வீர்கள், அவ்வளவு தான்.” “அங்கே உங்களை யார் அழைத்துச் செல்லப் போகி றார்கள்? அவர்களிடம் தொலைபேசியில் அழைத்து, சொல்லிவிடலாம்.” அவர் மகனை தொடர்பு கொண்டு அவரிடம் ஆங்கி லத்தில் பேசினேன். உங்கள் அம்மா விமானம் ஏறும் வரை அவருடனே இருப்பேன், அவருக்கு அருகிலேயே பயணிப்பேன் என்றேன். அவரும் தன் மகனுடன் பேசினார். அடுத்தடுத்து அவரின் மற்ற மகன்களுக்கும் பேசினோம். அது அவரை உற்சாகப்படுத்தியது. பின்னர் என் தந்தையை அழைத்தேன். அவர்களி ருவரும் அரபியில் சிறிது நேரம் பேசினார்கள். அதற் குள் அவர்களிருவருக்கும் பொதுவாக பத்து நண்பர் கள் இருப்பதை கண்டுபிடித்திருந்தார்கள். அதன்பின் எனக்கொரு யோசனை தோன்றி, என் பாலஸ்தீன கவி நண்பர்களை அழைத்தேன். அக்கவிஞர் களோடும் அவர் அளவளாவினார். இரண்டு மணி நேரம் இப்படியே கழிந்தது. அதுசமயம் அவர் சிரித்தபடி மகிழ் வான மனநிலைக்கு மாறியிருந்தார். அவர் வாழ்க்கை குறித்து நிறையப் பேசினார். கேள்விகளுக்கு பதிலளித் தார். மம்முல் பிஸ்கட்டுகள்... அவர் பையிலிருந்து, வீட்டில் தயாரிக்கப்பட்ட மம்மூல் பிஸ்கட்களை வெளியே எடுத்தார். மேலே பொடித்த சர்க் கரை தூவப்பட்டு, மொறுமொறுப்புடன், பாதாம், பிஸ்தா போன்றவற்றோடு பேரீச்சையும் அதில் சேர்ந்திருந்தது. அந்த வாயிலில் காத்திருந்த அனைத்து பெண்களுக்கும் ஒன்றை சுவைத்துப் பார்க்குமாறு நீட்டினார். என்ன ஆச்சர்யம்...! ஒரு பெண் கூட அவர் அளித் ததை மறுக்கவில்லை. அது ஒரு புனிதச்சடங்கு போல் நிகழ்ந்தது. அர்ஜெண்டினாவிலிருந்து வந்த பயணி, கலிஃபோர்னியாவிலிருந்து வந்தவர், லாரேடோவைச் சேர்ந்த அந்த அழகிய பெண் என, எங்கள் அனை வரது முகத்திலும் பொடித்த சர்க்கரை அப்பியிருந்தது.. அதனோடு அம்முகங்களில் புன்னகையும் அப்பியி ருந்தது. அது போன்று சிறந்த பிஸ்கட்டுகள் இருந்திருக் கவில்லை.. விமானச்சேவை, பெரிய குளிர்பதன பெட்டிகளி லிருந்து தங்கள் இலவச குளிர்பானங்களை விநியோ கிக்கத் தொடங்கியிருந்தது. எங்கள் விமானத்தைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் - ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர் மற்றவர் மெக்சிக்க அமெரிக்கர் - ஆப்பிள் மற்றும் எலுமிச்சை பழச்சாறுகளை அனைவருக்கும் கொடுத்தவாறு இருந்தார்கள். அவர்கள் முகத்திலும் அந்த பொடித்த சர்க்கரை பூத்திருந்தது. பையிலிருந்த சிறிய செடி... அப்போது தான் என் புதிய தோழியை கவனித் தேன். அச்சமயம், நாங்கள் இருவரும் கைகள் கோர்த் தபடி இருந்தோம். அவர் பையிலிருந்து சிறிய செடி அடங் கிய ஜாடி ஒன்று எட்டிப் பார்த்தது. ஏதோ மருத்துவ குணம் கொண்டதாம். அடர்ந்த பச்சைப் பசும் இலை களைக் கொண்டிருந்தது. பழமையான நாட்டு வழக்கம் அது. “பயணம் செய்கை யில் எப்போதும் ஒரு செடியை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் எப்போதும் தங்கள் வேர்களோடு இணைந்திருக்க வேண்டும்.” அந்த வாயில் முழுவதும் என் பார்வையை வீசினேன். களைத்திருக்கும் முகங்களைக் கண்டேன். எனக் குள் சொல்லிக்கொண்டேன், “இது தான் நான் வாழ விரும்பும் உலகம். பகிர்ந்து கொள்ளும் உலகம்.” முதலில் இருந்த அழுகுரல்கள் நின்றிருந்தன. இந்த வாயிலில் இருக்கும் ஒருவர் கூட இப்போது அந்நியர்களில்லை. மற்றெந்த ஒருவரைக் குறித்தும் ஒருவருக்கும் அச்சமோ, சந்தேகமோ இல்லை. அவர்கள் அந்த பிஸ்கட்டுகளை எடுத்துக் கொண் டார்கள். எனக்கு அங்கிருந்த ஒவ்வொரு பெண்ணையும் அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. இது இனியும், எங்கும் நடக்கலாம். எல்லாமும் தொலைந்து விடவில்லை... தமிழில்: அனிதா என்.ஜெயராம் .
