articles

img

மரணமும் வாழ்வும் மயிரிழையிலே.. - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

மரணமும் வாழ்வும் மயிரிழையிலே..

சினிமாவை பார்ப்பது வேறு. அனுபவிப்பது வேறு.இரண்டும் ஒருசேரக் கிடைப்பது அரிது. ஆனால்,”சிராத்”திரைப்படத்தின் இசையும் அதன் காட்சியமைப்பில்இழையோடும் கருத்தமைதியும் பேரனுபவத்தை தருகிறது; 2025இல் உலகமெங்கும் ஒரு பேரதிர்வை உருவாக்கிய திரைப்படமாகவும் சினிமா விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது. “சிராத்”என்றால் நரகத்தின் மேலுள்ள மயிரிழை யளவிலான பாதை.இறுதி தீர்ப்பு நாளில், மாண்புள்ள மனிதர்களே, இப்பாதையை கடந்து சொர்க்கத்தை அடையலாம்,என்பது இஸ்லாமிய மத நம்பிக்கை. மனித குலத்திற்கு எதிரானது போர். இப்போரில் செத்து மடிவது இனம்,மதம்,நாடு கடந்த உழைக்கும் மக்களே. போரற்ற உலகமென்பதே சொர்க்கம்.நரகமென்பது போரே. ரேவ்(Rave Music)என்பது மின்னணு நடன இசை. அதிர்வை உண்டாக்கும் சப் வூபர்(Sub Woofer), இந்த இசையின் உயிர்நாடி திறந்த பெரு வெளியில், பிரமாண்டமான மின்னணு சப்வூபர் களால் உருவாகும் அதிர்வின் தாளலயத்திற் கேற்ப, தங்களது உடம்பையும் அதிர்வுணர்வுக்கு உள்ளாக்குவது. இரவு முழுவதும் மின்னொளி வெள்ளத்தில் தங்களை மறந்து நடனமாடுவது இதன் தனித்துவம்.இக்கலாச்சாரத்தை தங்களது வாழ்வின் பகுதியாக கொண்டவர்கள் ரேவர்கள்(Ravers). பிஎல்யுஆர் (PLUR-Peace,Love,Unity,Respect)அமைதி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகிய கொள்கை மீது பற்றுள்ள சுதந்திர விரும்பிகள். தெற்கு மொராக்கோவின் பிரமிக்க வைக்கும் செம் மண் அடுக்குகள் நிறைந்த,பரந்து விரிந்த மலையடி வாரத்தில், ஐரோப்பியர்கள் கூடுகின்றனர். மாலையில் இவர்களின் ரேவ் நடன விருந்து தொடங்குகிறது. லூயிஸ் என்பவரின் இருபது வயது மகள் மார்.பல மாதங்களுக்கு முன்னர் ரேவ் நடனத்திற்கு சென்றவள், வீடு திரும்பவில்லை. லூயிஸ் அவனது சிறுவயது மகன் எஸ்டேபன் மற்றும் அவர்களின் செல்ல நாய் பிபாவுடன் இந்நடன கூட்டத்தில் அவளை தேடுகின்றனர்; பலரையும் தனியே பார்த்து விசாரிக்கின்றனர்.ஆனால் எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை.  அப்போது,ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் அங்கு வருகின்றனர். நாட்டில் அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளதை குறிப்பிட்டு,அங்கிருந்து உடன் வெளி யேறச் சொல்லி,நடன விருந்தைக் கலைக்கின்றனர்.  இந்த களேபரத்தில்,தெற்கே மாரிரித்தானிய எல்லைக்கு அருகில் மற்றொரு ரேவ் நடன நிகழ்வு நடக்க இருப்பதை அறிந்து,ஒரு ரேவர் குழு,அங்கு செல்லத் தயாராகிறது. ஐவர் அடங்கிய அக்குழுவில் ஒரு நாயும் உள்ளது.பிகுய் என்பவனுக்கு ஒரு முன்கை கிடையாது. டோன் என்பவன் ஒரு செயற்கைக் காலோடு வாழ்பவன். மிக ஆபத்தான சகாராப் பாலைவனத்தில் பயணித்தே அவ்விடத்தை அடையலாம். இக்குழு,ஒரு டிரக் மற்றும் பெரிய வேனில் ரேவிசைக் கருவிகளோடு புறப்படுகிறது.இவர்களின் பயணத் திட்டத்தை அறிந்த லூயிஸ், தன் மகளைத் தேடி, தனது சிறிய வேனில், அவர்களை பின் தொடர்கிறான். இதனையறிந்த குழு,லூயிஸை உடன் அழைத்துச் செல்ல முதலில் மறுக்கிறது.பின்னர் தயக்கத்தோடு சம்மதிக்கிறது. வழியில் ஒருவருக்கொருவர் உதவி களையும் அன்பையும் பரிமாறிக் கொள்கின்றனர் . அபாயகரமான செங்குத்து மலைப்பாதையில் டிரக் டயர் சிக்க, அதனை மீட்கின்ற பணியில் அனை வரும் மும்முரமாக ஈடுபடுகின்றனர். அதே நேரத்தில் லூயிஸ் மகனும்,நாய் பிபாவும் அவர்களின் வேனுக் குள்ளே விளையாடுகின்றனர். அப்போது எதிர்பாராமல் கை பிரேக் மீது இவர்கள் விழ, பிரேக் ரிலீஸாகி மலைச் சரிவில் நிற்கும் வேன், அதல பாதாளத்தில் விழுந்து நொறுங்குகிறது. லூயிஸ் கண் முன்னே மகனும் நாயும் இறக்கின்றனர்.செய்வதறியாது துடிக்கிறான். கூட்டமே பதறுகின்றது.ஒரு வழியாக லூயிஸைத் தேற்றி, பயணத்தை தொடர்கின்றனர். பயணத்தின் நடுவே மலைக்குன்று குறுக்கிடுகிறது. அதற்கு முன்பாகவே,நூறு அடி தூரத்தில் இரு வேன் களையும் நிறுத்துகின்றனர்.லூயிஸூக்கு நிகழ்ந்த சோகத்தை மறக்க,ரேவ் நடனம் ஆடுகின்றனர்.அம்மண் பரப்பில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருப்பது தெரி யாமல் ஆடும்போது செயற்கை கால் பொருத்திய வனும், அவனது தோழியும் கண்ணி வெடியில் சிக்கிச் சிதறுகின்றனர். லூயிஸ், ஜேட், பிகுய், ஸ்டெஃப், நாய் ஆகிய ஐவரும் தாங்கள் நிற்பது,கண்ணி வெடிகள் பாவிய மண்ணில் என்பதை அறிந்து பதறுகின்றனர். நூறு அடி தூரத்திலுள்ள பாறைக்குன்றில், கண்ணி வெடிகள் புதைக்க நிச்சயமாக வாய்ப்பு இல்லை. அங்கு செல்ல வேண்டுமென்றால் புதைக் கப்பட்டுள்ள கண்ணி வெடிகளைக் கடக்க வேண்டும். இப்போது இவர்களுக்கு முன் இருக்கும் பாதை தான் “சிராத்”.  கீழ் தாளக்கட்டில் அதிரக் கூடிய ஒலியில் மகிழ்ந்து ஆடுவோர் உடல்கள்,கண்ணி வெடியின் பேரொ லியில் சிதறுகின்றன. இங்குபெரும் கூக்குரல், மகிழ்ச்சி, துக்கம் இரண்டுக்குமானதாக உள்ளது.  மனித இருப்பின், ஒவ்வொரு கணமும், வாழ் வுக்கும், மரணத்திற்குமான தருணங்களே. இதன் குறியீடே கண்ணிவெடிகள். மரணத்தை தவிர்த்து,வாழவே அனைத்து யிர்களும் போராடுகின்றன. நெருக்கமான உறவு களை இழந்தாலும், சோகம் துடைத்து, தொடர்ந்து வாழவே மனிதகுலம் விரும்புகிறது.இக் கருத் தமையின் படிமமாகவே ரேவ் இசை நடன உத்தி கையாளப்பட்டுள்ளது. நம்பிக்கையே வாழ்வின் ஆதாரப் புள்ளி.இறுதி ரயில் பயணக்காட்சி இந்த நம்பிக்கையின் குறியீடாக முன்னிறுத்தப் பட்டுள்ளது.  ஸ்பானிஷ் இயக்குனர் ஒலிவர் லேக்ஸி, வியக்க வைக்கும் வகையில் படமாக்கி, பார்வையாளர் களை அதிர வைத்துள்ளார்.  படத்தின் தனித்துவமே, லையா கசனோவாஸின் ஒலி வடிவமைப்பு. இசையமைப்பாளர் ஹாங்டிங் ரே, பார்வையாளர்களையும் மனதளவில் ரேவர்களாக நடன மாடவும் வைத்து, மிரட்டியுள்ளார். மொராக்கோவின் பரந்து விரிந்த பாலைவனப்பரப்பு, இருட்டில் செங்குத் தான மலைகளில் வாகனங்கள் நகர்வின் தொலை தூரக் காட்சி, பாலை வனத்தில் புழுதி பறக்கும் வேன்களின் பந்தய ஓட்டம் ஆகிய காட்சிகளை மிக அற்புதமாக ஒளிப் பதிவு செய்துள்ளார் மௌரோ ஹெர்ஸ். படத்தொகுப்பு,  திரைக் கதை சிறப்பு.  நடிகர்களில் லூயிஸாக நடித்துள்ள ஷெர்ஜி லோபஸ் தவிர்த்து, மற்ற அனைவரும் தொழில் முறை ரேவர் களையே நடிக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் தனித்தன்மையான நடிப்பை தந்துள்ளனர். “தி வேஜஸ் ஆஃப் பியர்”(The Wages of Fear”)என்ற தென் அமெரிக்க நாட்டுப் படம் நினவில் வந்தது;ரோடு மூவி சினிமா பிரியர்களுக்கு இப்படம் ஒரு சிறப்பு பொனான்ஸா(Bonanza).  2025, 2026ல், உலகம் முழுவதும் நடைபெற்ற அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.கேன்ஸ்,வெனிஸ் திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் குவித் துள்ளது. சமீபத்தில் முபியில் வெளியாகியுள்ளது.