கோவை குனியமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டப் பகுதியில், தனியாருக்குச் சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் சேமிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தக் குடோனில் சட்டவிரோதப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறையினர் இன்று அந்தக் குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கிலோ கஞ்சா மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் கோவையைச் சேர்ந்த அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த நவ்பில் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கும்பலுக்கு பின்னால் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா, ஆந்திரா அல்லது பிற மாநிலங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டதா என்பதையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
