tamilnadu

img

ரமலான் நோன்பு - நாகை ஆசைத்தம்பி

ரமலான் நோன்பு -  நாகை ஆசைத்தம்பி

அக்பர்பாய்னா யாருக்கும் தெரியாது “ஐஸ்” அக்பருன்னா தான் தெரியும். பரம்பரை பரம்பரையாகவே ஐஸ்வியாபாரம்தான். அதிலையே குடும்பத்தை ஓரளவுக்கு ஓட்டமுடிந்தது. தொடர் மழைக்காலம் வந்தாதான் அக்பர் பாய் அல்லா பெயரைச்சொல்லி அக்கம்பக்கம் கடன் வாங்குவார். அடகு வைக்கக்கூட அவருக்கிட்ட எந்தப் பொருளும் கிடையாது, அவர் சம்சாரம் போட்டிருக்கும் கருகமணியை தவிர... அக்பர் பாய்க்கு ஒரு பொண்ணு ஒரு பையன். அதில அவரு கொஞ்சம் புத்திசாலிதனமாகவே இருந்தார். சூழ்நிலைகள்தானே ஒரு மனுசனை தெளிவாக்குது, அதே சமயம் கெட்டவனாகவும் மாற்றிவிடும் என்ன செய்வது? அவரு மகளை தஞ்சாவூருக்கு பக்கத்தில ஒரு கிராமத் தில் சொற்பமா ஒரு அஞ்சுபவுன் போட்டு நிக்காஹ் செய்துக்கொடுத்தார். அந்த கடனுக்கே இன்னும் வட்டிக்கட்டி முடியல. இதுல பள்ளி வாசலுக்கு சந்தா கட்டனும் .நோம்பு கஞ்சிக்கு டொனேசன் தரணும். இடையில பண்டிகை வேறு. பையன் பெரிசாயிட்டாக்கூட பாரம் குறையும். அவனுக்கு இப்பதான் ஆறு வயசாகுது. அவனதான் நேற்று திட்டிக்கொண்டிருந்தார் ஐஸ்பாய். அவன் சின்னப் பையன். ரம்ஜான் நோன்பு வைக்கணுமுன்னு ஒத்தக் காலில் நிக்கிறான். உனக்கு இது சரி வராதுடா. நீயோ சின்னப்பையன் என சொல்லிப்பார்த்தார். அவன் விடுவ தாக இல்லை. பக்கத்தில்பக்கிரிமுகமது, ஆயிஷா, தம்பி சரிபாபானு எல்லோரும் நோன்பு வைக்கிறாங்க. நோன்பு வச்சாதான் அல்லா நல்லது செய்வார். நானும் வைக்கிறேன்னு அடம்பிடித்தான். ஐஸ் பாய் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவங்க வசதியானவங்க. நேரா நேரத்துக்கு சத்தான ஆகாரம் கிடைக்கும். நாம ஏழைங்க. உன்னால எதுவும் செய்ய முடியாது. பேசாம ஸ்கூலுக்கு போயி படிடா. “நீயாவது படிச்சு இந்த ஐஸ் தொழிலுக்கு விடுதலை கொடு” என்றார். மகனோட இந்த சின்ன ஆசையைக்கூட நிறை வேற்ற முடியாத ஏக்கம் அவர் கண்களில் தெரிந்தது. ஆனாலும் பையன் விடுவதாக இல்லை. வாப்பா நோன்புன்னா பகல் நேரத்தில் எதுவும் சாப்பிடக்கூடாது. எச்சில் விழுங்கக்கூடாது. கெட்டக்காரியங்களில் ஈடுபடக் கூடாது. இவ்வளவுதானே. நான் இதைஎல்லாம் கடைப் பிடிக்கிறேன். ஐஸ்வியாபாரம் இல்லாத சமயங்களில் நாம எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கோம். அதுப் போல நினைச்சி இருந்துடுறேன். எனக்கு புதுத்துணி நீ எடுத்து தரவேண்டாம். எல்லாம் அல்லா தருவார். “ஈமான் இருந்தால் போதும் வாப்பா” என்றான். “சரி எப்படியோ தொலஞ்சிப் போடா”என்று கத்தி னார் ஐஸ் பாய். பையன் துள்ளிக்குதித்து ஓடினான். நோன்பு வைக்க ஆரமித்துவிட்டான். நோன்பு தொறக்குறத்துக்கு ஒவ்வொரு நாளும் ஐஸ் பாய் கொஞ்சம் சிரமமெடுத்து பழம், சிப்ஸ், பேரிச்சை போன்ற அயிட்டங்களை வாங்கிவந்தார் . ஆனாலும் இவனுக்கு புதுத்துணிஎடுத்து கொடுக்கணுமே என்ற சிந்தனையிலே இருந்தார். துணி இல்லாவிட்டாலும் ஒரு பிரியாணியோகுஸ்காவோ செய்யலன்னா பையன் முகம் வாடிப்போகுமே என்ன செய்வது? நீடூர் சர்புதீன் மரைக்கரை பார்த்தார். அவரிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். அவரோ கடனுக்கு பதிலாக அவரின் கஷ்டத்தையே காணிக்கையாக தந்தார். பிறகு பாலக்குறிச்சி சாகுல் பாயிடம் சென்றார். அவரு “உங்களுக்கு கொடுக்க அல்லா எனக்கு நிறைய தரலியே. அல்லாவை நாடுங்கள் கிடைக்கும்” என கைகழுவி விட்டார். “இல்லாதவங்களுக்கு இருப்பவன் ஜகாத் கொடுக்க வேண்டுமென இஸ்லாத்தில் கடமையாக்கப் பட்டிருந் தாலும் எவனும் கடன்கூட கொடுக்க மாட்றானுங்கயென நொந்து போன ஐஸ் பாய் நாளைக்கு காலையில் நோன்பு என்ன செய்வதென்று அல்லாடிப்போனார். நடப்பது நடக்கட்டும். நம்ம கையில் என்ன இருக்கு தென்று தூங்கிப்போனார். காலையில் எழுந்து மனசுக்கு கஷ்டமாயிருந்தாலும் மகனுக்கு சமாதானம் சொல்லி குளித்துவிட்டுதுவைத்து வைத்திருந்த பழைய துணியில் ஜவ்வாது தடவி அணிந்துக்கொண்டு பள்ளிவாசலுக்கு புறப்படும்போது, வாசலில் கையில் பையும் தூக்குவாளியுமாய் நின்றிருந்தார் அவருடைய மருமகன். “அஸ்லாம் அலைக்கும் வ அலைக்கும் சலாம்”. வாங்க உட்காருங்க தம்பி” “என்ன மாமு நல்லா இருக்கீங்களா .ரகமத் நோன்பு இருக்கான்னு கேள்விப்பட்டேன் .அதான் புதுத்துணியும்  பிரியாணியும் கொண்டுவந்தேன். நான் இங்கேயே தொழுதுவிட்டு போய்டுறேன்”என்றார். ரகமத் துள்ளிக்குதித்தான்.”பாருங்க வாப்பா. அல்லா கொடுப்பாருன்னு சொன்னேனே பாத்தீங்களா! கொடுத் திட்டார் என்றான் சந்தோசமாய். ஐஸ் பாய் இயலாமையின் கோபத்தில் சொன்னார், “தப்புடா கொடுத்தது அக்கா வீட்டுக்காரரு” “என்ன மாமு நீங்க சின்னப்பையன் கிட்டப்போயி இப்படி பேசுறீங்க.அல்லா எல்லாருக்கும் நேரிடையாக வந்தா கொடுக்க முடியும்?! ஏதோ ஒரு வடிவத்தில வந்துதான் உதவி செய்வார்.வாங்க தொழுகப் போகலாம்.”