தான்சானியாவில் வலுவான விவசாயிகள் இயக்கம்
2025 டிசம்பர் 4-5 தேதிகளில் தான்சானியாவின் மொரோகோரோ நகரில் தேசிய விவசாயிகள் அமைப்புகளின் 30-ஆவது ஆண்டு பொதுப் பேரவை நடைபெற்றது. 670 பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் “விவசாயிகளை விவசாயிகள்தான் காப்பாற்றுவர்” என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது. கார்ப்பரேட்டுகள் விவசாயத்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பது மற்றும் இடைத்தரகர்களின் லாப வேட்டையை முறியடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. காபி, முந்திரி பயிரிடும் விவசாயிகள் வறுமையில் வாடும் நிலையில், விவசாய வர்த்தக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுப்பதாகக் கவலை தெரிவிக்கப்பட்டது. தங்கள் உரிமைகளுக்காக 2000 கி.மீ பயணம் செய்து வந்த விவசாயிகள், சொந்தமாக நிதி நிறுவனம் மற்றும் வானொலி நிலையத்தை நடத்திச் சுயசார்புடன் இயங்குவது உலக விவசாயிகளுக்கே முன்னுதாரணம்...
2025-ல் மக்கள் அடைந்த வெற்றிகளும் நம்பிக்கை கீற்றுகளும்
கடந்து போன 2025-ஆம் ஆண்டு தோல்விகளைச் சந்தித்த ஆண்டாக மட்டுமில்லை; தீவிர வலதுசாரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகம் மற்றும் அதன் கூட்டாளிகள், உலக மக்களின் மீது தொடுத்த இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியிலும், மக்கள் உறுதியுடன் போராடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டிய ஆண்டாகும். வெனிசுலா: அமெரிக்க ஏகாதிபத்தியம் வெனிசுலாவின் படகுகளை வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தது, எண்ணெய் கப்பல்களைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றியது மற்றும் பலரைக் கொன்றது. இத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி, வெனிசுலா மக்கள் அமெரிக்கா விற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். கேரளா (இந்தியா): 2025 நவம்பரில், இந்தியாவில் முதன்முறையாகத் தீவிர வறுமையை ஒழித்துக் கட்டிய மாநிலமாக கேரளா உருவெடுத்தது. இடது ஜனநாயக முன்னணி அரசின் பல ஆண்டுகாலத் திட்டமிடலுக்குக் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனம்: இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிரான இயக்கம் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது. காசா மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கடல் மார்க்கமாக கொண்டு சேர்க்கக் கப்பல் குழுக்கள் பயணித்தன. தொழிலாளர்கள் பல நாடுகளில் பாலஸ்தீன ஆதரவு வேலைநிறுத்தங்களை நடத்தினர். சாகெல் கூட்டணி (ஆப்பிரிக்கா): மாலி, புர்கினோ பாசோ, நைஜர் ஆகிய நாடுகள் இணைந்து ‘சாகெல் கூட்டணியை’ அமைத்தன. இவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறி, தமக்கான சொந்த நீதிமன்றத்தை நிறுவின. மேற்கத்திய நவீன காலனி ஆதிக்கத்தை எதிர்த்துச் சுயசார்பு பொருளாதார வளர்ச்சியை இவை முன்னெடுக்கின்றன. நேபாளம்: நேபாளத்தின் 10 இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை’ உருவாக்கியுள்ளன. மீண்டும் மக்களிடையே தீவிரமாக பணியாற்றத் துவங்கியுள்ளனர் கம்யூனிஸ்டுகள். லத்தீன் அமெரிக்கா: மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் முற்போக்கு அரசுகளால், லத்தீன் அமெரிக்காவில் வறுமை வரலாற்று ரீதியாக மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. “உலகம் முழுவதும் முதலாளித்துவம் வெற்றி யடைந்துள்ளது; ஆனால் இந்த வெற்றி, உழைப்பு சக்தி வெற்றி பெறுவதற்கான முன்னோட்டம் ஆகும்” என்ற மாமேதை லெனின் வரிகளுக்கேற்ப இறுதி வெற்றி உழைக்கும் வர்க்கத்திற்கே!
ஹோண்டுராஸ் தேர்தல் முறைகேடுகள்
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரு மாதத் தாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டன. அமெரிக்க ஆதரவு பெற்ற தீவிர வலதுசாரி வேட்பாளர் அஸ்புரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது அமெரிக்காவின் நெருக்கடியால் செய்யப்பட்ட முறைகேடு என்று தேர்தல் கமிஷன் ஆலோசகர் மார்லோ ஓக்கோ குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளும் தேர்தல் மோசடி குறித்துப் புகார் அளித்துள்ளன.
காசா நிலைமை - 2025
2025 அக்டோபர் 10ல் போர் நிறுத்தம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இஸ்ரேல் அதை 265 முறை மீறியுள்ளது. காசாவின் 81% பகுதி இப்போதும் இஸ்ரேல் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. 92% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 21 லட்சம் மக்கள் கூடாரங்களில் தங்கியுள்ளனர். 77% மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். போர் நிறுத்த உடன்பாடு அமலில் இருந்த காலத்திலேயே பல பாலஸ்தீனத் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. டிசம்பர் 29-ல், ஹமாஸின் அல்-கஸாம் பிரிகேட்ஸ் தனது ஐந்து தளபதிகளை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளதாக அறிவித்தது. இஸ்ரேலை ஆயுதங்கள் அற்ற நாடாக மாற்றினால் மட்டுமே இனப்படுகொலை முடிவுக்கு வரும் என்று ஹமாஸின் புதிய செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
சூடான் உள்நாட்டு யுத்தம்
சூடான் யுத்தம் என்பது வெறும் இரண்டு ஜெனரல்களுக்கு இடையிலான மோதல் அல்ல; இது நிலம் மற்றும் இயற்கை வளங்களைக் கைப்பற்றத் துடிக்கும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டி எனச் சூடான் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. இதில் 1.5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சூடானின் உள்விவகாரங்களில் 1958 முதலே அமெரிக்கா தலையிட்டு வருவதையும், வளைகுடா நாடுகளைக் கண்காணிக்கச் சூடானைப் பயன்படுத்துவதையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது.
தைவானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்குச் சீனா தடை
சீனா என்பது ‘மக்கள் சீன குடியரசு’ மட்டுமே என்பதைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்று வருகிறது. இதற்குப் பதிலடியாக, டிசம்பர் 26-ல் சீனா 20 அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் மீது (போயிங், நார்த்ராப் குருமன் உட்பட) பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. மேலும், அந்த நிறுவனங்களின் 10 மூத்த அதிகாரிகள் சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் தீவு களுக்குப் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
