வேட்டவலம் பகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, ஜன.12- திருவண்ணாமலை மாவட்டம் வேட்ட வலம் - திருக்கோவிலூர் சாலையில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்துள்ள மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் எஸ். அபிராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேட்டவலம் செய லாளர் திருமூர்த்தி, வேட்டவலம் கிறிஸ்தவ சமூக தலைவர் வேளாங்கண்ணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனி ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வாசுகி, எஸ். ராமதாஸ் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ. லட்சுமணன், மாவட்ட துணை தலைவர் ரஜினி ஏழுமலை, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேட்டவலம் - திருக்கோவிலூர் சாலையில் 45 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வசித்து வரும் வீடுகளை சாலை விரிவாக்கத்திற்காக அகற்ற உள்ள நிலையில், 2025 நவம்பர் 17ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள நாயுடு, வன்னியர், முஸ்லிம், கிறிஸ்தவர், கோனார் போன்ற மக்களுக்கு வேட்டவலம் கிராமத்தில் 50 ஏக்கருக்கு மேல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், பட்டா வழங்கி சமத்துவபுரமாக அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தியும், வேட்டவலத்தில் போலியாக அரசு முத்திரை (கோபுரம்) செய்து பட்டா வழங்கிள்ளது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத வருவாய்த்துறையை கண்டித்தும் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். நிறைவாக கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.
