tamilnadu

img

நாங்குநேரி இரட்டைக்கொலை: பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்!

நாங்குநேரி இரட்டைக்கொலை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமெனத் தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மார்ச் 2 அன்று மாலை நாங்குநேரி அருகில் உள்ள தெற்கு நாங்குநேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பத்து இந்திரா நகர் காலனியில் 9 பேர் கொண்ட கும்பல் காட்டுமிராண்டித்தனமான கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். இதில் ஜான் மார்க் (45) எனும் மாற்றுத்திறனாளி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி திரிநாத் கட்டா (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும், டீக்கடை அருகில் நடத்திய தாக்குதலில் நெல்சன், பிரபாகரன், ராமசாமி (பெரும்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள்), சசிகுமார் (புளியங்குளம்), கணேசன் (வீராங்குளம்) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தக் கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.சுகந்தி, கே.ஜி.பாஸ்கரன், நெல்லை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சுடலைராஜ், நாங்குநேரி ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் சைலஸ் அருள்ராஜ் மற்றும் கணேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அக்குடும்பத்தினரின் வாழ்வாதார நிலையை அறிந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஜான் மார்க், ஒரு மாற்றுத்திறனாளி. அவரது மனைவி காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர். கன்னி மரியாள் (8-ம் வகுப்பு), நவீனா (5-ஆம் வகுப்பு) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். வயதான தாயாரும் உள்ளார். ஜான் மார்க்கின் வருமானத்தை நம்பியே கஷ்ட ஜீவனம் நடத்தி வந்துள்ளனர். இவரது குடும்பத்திற்கு அரசு வேலை, அரசு வீடு, குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றை ஏற்பதோடு, அக்குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும்.

கொலை செய்யப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திரிநாத் கட்டா குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கிட வேண்டும். படுகாயமடைந்த நபர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன் உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும். வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி நீதி கிடைக்கக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். இதில் இருவர் சின்னத்துரை மற்றும் வேறு பல வழக்குகளில் தொடர்புடையவர்கள். எனவே, குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்ற வகையில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் சாதி ரீதியிலான பிரச்சினைகள் குறித்தும், இதற்குப் பின்னணியில் உள்ள சமூக விரோத சக்திகள் மீதும் உரிய விசாரணை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.