world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா-உக்ரைன்  மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை 

ரஷ்யா-உக்ரைன் இடையிலான மூன்றாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தன. இந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனினும் கைதிகள் பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் ரஷ்யாவும் உக்ரைனும் தலா 1,200 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ரஷ்யாவில் கொல்லப்பட்ட மேலும் 3000 உக்ரைன் வீரர்களின் உடலை ரஷ்யா கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை  முன்மொழிந்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளது. மேலும் அவ்வொப்பந்தத்தை பேச்சுவார்த்தைக் குழு மூலமாக இஸ்ரேலுக்கும் கொடுத்துள்ளது. முன்மொழிவை பெற்றுள்ளதாகவும் அதை முழுமையாக மதிப்பாய்வு செய்து வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.  எனினும் ஹமாஸின் போர் நிறுத்த முன்மொழிவை இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவுடன் அர்த்தமுள்ள  பேச்சு நடத்த விரும்புகிறோம் - பாக்  

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். குறிப்பாக அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாத பிரச்சனை குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியா கூறிவருகிறது. இரு நாடுகளுக்கு இடையே உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் இன வெறி: கருப்பின இளைஞர் மீது தாக்குதல்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தனது காரில் அமர்ந்திருந்த கருப்பின இளைஞர் மீது இனவெறியுடன் காவலர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். நிராயுத பாணியாக இருந்த அந்த இளைஞரின் கார் கண்ணாடியை உடைத்து வெளியே இழுத்து தரையில் தள்ளி  தாக்கிய காணொலி ஒன்று வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் வேறு வழி இன்றி அந்த காவலரை தற்காலிகமாக பணி நீக்கம் மட்டும் செய்துள்ளது காவல்துறை. 

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்   கூடாது : டிரம்ப் மிரட்டல்

இனி இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்று கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (AI) மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளிலேயே அதிக முதலீட்டை செய்கின்றன. சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து அங்கு  இந்தியர்களை வேலைக்கு எடுக்கின்றன. இனி அதை செய்யக்கூடாது எனவும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.