2030க்குள் நிலவின் தெற்குத் துருவத்தில் 100 கிலோவாட்டுத் திறன் கொண்ட அணுமின் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்துள்ளது.
ஆர்டமிஸ் (Artemis) திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகும் இந்த ‘Fission Surface Power’ அமைப்பு, நிலவின் நீண்ட இரவுகளிலும், சூரிய ஒளி செல்லாத பகுதிகளிலும் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும். சுமார் 10 ஆண்டுகள் பராமரிப்பு தேவையில்லாமல் இயங்கக்கூடிய இந்த ரியாக்டர், நிலவில் மனிதர்கள் வாழும் நிலையங்களுக்கும், அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கும் சக்தி வழங்கும்.
நாசா, அமெரிக்க ஆற்றல் துறையுடன் (DOE) இணைந்து, 2022ஆம் ஆண்டில் 40 கிலோவாட்டு அணுமின் அமைப்பிற்கான முதற்கட்ட வடிவமைப்புகளை லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin), வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse) உள்ளிட்ட நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. தற்போது அதனை விரிவாக்கி 100 கிலோவாட்டாக மாற்றும் முயற்சி நடைபெறுகிறது.
நிலவில் நீண்ட இரவுகள், கடுமையான வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் நிழல்படு குழிகளில் (shadowed craters) உள்ள நீர்மண் (ice) ஆதாரங்களைப் பயன்படுத்தும் ஆராய்ச்சிகளுக்கு அணுமின் நிலையம் முக்கிய ஆதாரமாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது