ஆப்கனில் கனமழை - வெள்ளம்; 17 பேர் பலி
ஆப்கன் நாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய, வடக்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் வெள்ளம் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 1,800 குடும்பங்கள் வெள்ளத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த பேரிடரில் 274 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 1,550-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
தென் கொரியாவுடன் உறவை வலுப்படுத்தும் சீனா
தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் ஜப்பான் செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்னதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக நடைபெறும் சந்திப்பாக இது உள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சியின் போர் வெறி காரணமாக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சீனா-தென்கொரியா ஜனாதிபதிகளின் தலைவர்கள் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புலம்பெயர்ந்தோர் சென்ற படகு விபத்து : 7 பேர் பலி
200-க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் பயணித்த படகு ஒன்று காம்பியா நாட்டின் கடற்கரைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 96 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 57 பேருக்கு கடற்படை தளத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், பூடானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் பூட்டானில் தனித்தனியாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூட்டானில் வியாழன் இரவு 9.52 மணியளவில் 5 கி.மீ. ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் இவாடே மாகாணத்தில் கடல் பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இரு நாட்டிலும் நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
42 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்தது
2025 இல் 8 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 42 பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது என பாலஸ்தீன பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேற்குக்கரை, ஜெருசலேம் உள்ளிட்டப் பகுதிகளில் இந்தப் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதைத் தடுக்கவும், உண்மையான கள நிலவரங்களை உலகுக்குத் தெரியாமல் மறைக்கவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
