world

img

தீக்கதிர் உலக செய்திகள்

சார்க் கூட்டமைப்புக்கு மாறாக  சீனா-பாகிஸ்தான் புதிய கூட்டணி 

தெற்காசியாவில் ஒத்துழைப்பை மேம்படுத்த சார்க் அமைப்பிற்கு மாற்றாக புதிய கூட்டமைப்பை உருவாக்க பாகிஸ்தான்- சீனா பேச்சுவார்த்தையில் ஈடு பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் வங்கதேசமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பதற்றங்கள் காரணமாக சார்க் எனப்படும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயலற்ற நிலையில் இருக்கும் நிலையில் இந்த முயற்சி நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எலான் மஸ்க் மீது   டிரம்ப் கடும் விமர்சனம் 

ஜனாதிபதி தேர்தலில் என்னை ஆதரிப்பதற்கு  முன்பே நான் மின்சார வாகனங்கள் தொடர் பான ஆணையை கடுமையாக எதிர்க்கிறேன் என்பதை எலான் மஸ்க் அறிந்திருந்தார். அனை வரும் ஒரு மின்சார வாகனத்தை சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. வரலாற்றில் எந்த மனிதனையும் விட மஸ்க் தான் அதிக சலுகைகளை அனுபவிக்கும் நபராக இருப்பார். மானியங்கள் இல்லை என்றால் அவர் கடையை மூடிவிட்டு தென் ஆப்பிரிக்காவுக்கு போயிருப்பார் என டிரம்ப் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிரியா மீதான தடைகளை  அமெரிக்கா நீக்கியது

சிரியா மீதான தடைகளை நீக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சில பொருட்களின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிரியாவிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகள் மீது  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களுக்கும் உரிமை மாலியில் புதிய சட்டம்

புலம்பெயர்ந்தவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் நிலைமை யை மேம்படுத்தும் சட்டத்தை மாலி உருவாக்கி யுள்ளது. இச்சட்டம் மாலி குடிமக்களுக்கு இணை யாக புலம்பெயர் மக்களுக்கும் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, சட்ட உரிமை களை உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்வது மாலி அரசின் மனித உரிமைகள் பாதுகாப்பில் உள்ள முன்னேற்றத்தை காட்டு கிறது என அந்நாட்டுக்கான ஐ.நா அகதிகள் நிறுவன பிரதிநிதி ஜார்ஜஸ் பேட்ரிக் மென்ஸே பாராட்டு தெரிவித்துள்ளார். 

காசாவில் தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல்

காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடற்கரை பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 58க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசாவில் போர் நிறுத்தம் அமலாகும் என டிரம்ப் கூறியுள்ள நிலையில் தினந்தோறும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.  இந்த தாக்குதலில் பத்திரிகையாளர்கள், பெண்கள், குழந்தைகள் படுகொலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 கோடி  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்வு 

பெய்ஜிங், ஜூலை 1 - சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 104 ஆவது அமைப்பு தினத்திற்கு முன்பாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024 இறுதியில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 கோடியே 27 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 2023 உடன் ஒப்பிடும்போது 10.9 லட்சம் உறுப்பினர்கள் அதிகரித்துள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை நிலையாக வளர்ந்து வருவதுடன், அதன் கட்டமைப்பும், கட்சி அமைப்புகளின் அடித்தளமும் மேம்படுத்தப்பட்டு வலுப்பெற்று வருவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை நிலை அமைப்புகள் என்று அக்கட்சியால் வரையறுக்கப்பட்டுள்ள சீன மக்களுடன் இணைந்து பள்ளிகள், கிராமங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் செயல்படும் கிளைகளின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரித்து, 2024 இறுதியில் 52.5 லட்சம் ஆக உயர்ந்துள்ளன. இந்த வளர்ச்சியானது சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து தனது அடிப்படை நிலை அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது என்பதை காட்டுகிறது.   சீன கம்யூனிஸ்ட் கட்சி, கட்சிக்குள்ளும் நாட்டிலும் சீர்திருத்த முயற்சிகள் எடுத்து வருவதுடன் சுய மேற்பார்வை, சுய விமர்சனம் என தொடர்ந்து தங்கள் பணியை பரிசீலனை செய்து உறுதியான தரநிலைகளைப் பின்பற்றுவதன் மூலமும் தன்னைத் தானே கண்காணித்து நிர்வகித்து வருகிறது.  2024 இல் 21.3 லட்சத்திற்கும் அதிகமானோர் கட்சியில் இணைந்தனர். இவர்களில் 52.6 சதவீதமானவர்கள் உற்பத்தித்துறை உள்ளிட்ட முன்னணி தொழில்களில் ஈடுபடுபவர்கள்.  இதில் 54.4 சதவீதமானவர்கள் இளநிலை அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற்றவர்கள் ஆவர். மேலும் இதில் 83.7 சதவீதமானவர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள். 2024 இறுதியில், சுமார் 5.77 கோடி கட்சி உறுப்பினர்கள் அதாவது மொத்த உறுப்பினர்களில் 57.6 சதவீதமானவர்கள் இளநிலை பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களைப் பெற்றவர்களாக உள்ளனர். இது 2023 உடன் ஒப்பிடும்போது 1.4 சதவீதம் அதிகமாகும். மேலும் பெண் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மொத்த கட்சி உறுப்பினர்களில் 30.9 சதவீதமாகும். மேலும் 2023 ஐ விட 0.5 சதவீதம்  அதிகரித்துள்ளது. அதே போல சிறுபான்மை இன குழுக்களைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களின் விகிதம் 7.7 சதவீதமாக தொடர்கிறது.  மொத்த கட்சி உறுப்பினர்களில் தொழிலாளர்கள் மற்றும் விவசாய வர்க்கத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக உள்ளது.  கட்சிக் கல்வி மற்றும் மேலாண்மை பயிற்சி பெற்ற கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 16.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அடிப்படை நிலை கட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் முயற்சியின் வெளிப்பாடாக 2024 இறுதியில், நாடு முழுவதும் அடிப்படை நிலை கட்சி கமிட்டிகள் எண்ணிக்கை 3.06 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 9,000 அதிகமாகும். அடிப்படை நிலை கட்சிக் கிளைகள் மற்றும் கட்சிக் கிளைகளின் எண்ணிக்கை முறையே 3.3 லட்சம் மற்றும் 46.1 லட்சமாக உயர்ந்துள்ளது.