world

img

தீக்கதிர் உலக செய்திகள்

2025 மிகவும் வெப்பமான ஆண்டாக இருக்கும்  

ஐரோப்பிய ஒன்றிய காலநிலை மாற்றச் சேவை வெளியிட்ட அறிக்கையில், 2025 உலகிலேயே மிக அதிக வெப்பமான ஆண்டுகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டுடன் புவி வெப்பநிலை மூன்றாவது ஆண்டாக தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தின் சராசரியைவிட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகவும் வெப்பமான ஆண்டுகளாகும்.

ரஷ்யா-இந்தியா பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் : புடின்  

இந்தியாவும் ரஷ்யாவும்  ஒற்றுமை, பன்முகத்தன்மையை பாதுகாக்க வேண்டும் என புடின் பேசியுள்ளார். மேலும் அவர் பேசும்போது, இந்தியாவில் சுமார் 150 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் இந்தி பேசுவதில்லை. 50–60 கோடி பேர் அம்மொழி பேசுபவர்களாக இருக்கலாம். மீதமுள்ளவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள். இந்த ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை ரஷ்யா, இந்தியா போன்று பாதுகாக்க வேண்டிய ஒன்று என்று கூறினார்.

85 ஆயிரம் விசாக்கள் அமெரிக்காவில் ரத்து

 அமெரிக்காவில் குடியேற்ற விதிகள் கடுமையாக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி முதல் இதுவரை 85 ஆயிரம் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களும் அடங்கும். கடந்த ஆண்டை விட இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்றது முதல் பல்வேறு  கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விசா நடைமுறைகள் கடினமானதாக மாற்றப்பட்டுள்ளன.

 தேர்தலை நடத்த பாதுகாப்பு கேட்கும் ஜெலென்ஸ்கி

 அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்  பாதுகாப்பு கொடுத்தால் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இந்நாடுகள் இந்த உறுதியை கொடுக்கும் பட்சத்தில் உக்ரைன் 60 முதல் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய, அமெரிக்கா எனக்கு உதவ வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.  

ஜப்பான்  நிலநடுக்கம்: 52 பேர் காயம்

ஜப்பானில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 52 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு 11:15 மணிக்கு அயோமோரியின் பசிபிக் கடலோரப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. தற்போது அடுத்த ஒரு வாரத்திற்குள் 8 ரிக்டர் அல்லது அதற்கும் மேல் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 100 இல் ஒரு பங்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.