நைஜிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 30 பயணிகள் உயிரிழந்தனர்.
நைஜிரியா நாட்டில் போகோ ஹாரம் என்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவினர் அவ்வப்போது வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தீவிரவாத அமைப்பினரின் தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருவது தொடர்கதையாக மாறியுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் வடமேற்கு மாகாணமான சொகோடா மாகாணத்தில் வியாழனன்று பயணிகள் பேருந்து ஒன்றை தீவிரவாத குழுவினர் திடீரென வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதன்பின் அப்பேருந்திற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.