what-they-told

img

5லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

சென்னை, அக். 21 - மத்திய அரசின் “10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக சுருக்கும்” முயற்சியைக் கண்டித்து அக்டோபர் 22 (இன்று) ஏஐபிஇஏ மற்றும் பிஇஎப்ஐ சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நாடு முழுவதும்  ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைப்பதை எதிர்த்து; பொதுத்துறை வங்கிகளை சீர்திருத்தம் என்ற பெயரில் நலிவடையச் செய்வதை எதிர்த்து; பெருமுதலாளிகள் தர  வேண்டிய வராக் கடனை கறாராக வசூல் செய்ய வேண்டி; பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவை கட்டணத்தை குறைக்கக் கோரி, அவர்களின் வைப்பு நிதிக்கு அதிக வட்டி தரக் கோரி; வங்கி வேலை வாய்ப்பை பாதுகாக்கக் கோரி; வேலை நியமனத்தை அதிகரிக்கக் கோரி; இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

முன்னதாக ஞாயிறன்று தில்லியில் மத்திய தொழிலாளர் துறை ஆணையர் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசிடமிருந்து எந்தவிதமான சாதகமான பதிலும் வராததால் இந்த  வேலை நிறுத்தம் உறுதியானது. இந்த இரு சங்கங்களின் 5 லட்சம் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் 40 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதிலும் மாநில மற்றும் மாவட்ட மையங்களில் செவ்வாயன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பு என்பது நாட்டின் நலனிற்கு எதிரானது என்பதாலும், இதனால் ஏழை எளிய  மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, சிறு தொழில் முனைவோருக் கோ, மாணவர்களுக்கோ கடன் கிடைக்காமல் போகும் சூழல் உருவாகும் என்பதாலும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறு கிறது என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (பெபி) மாநிலத் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் என்.ராஜகோபால் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

;