tamilnadu

img

10 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

நாடுமுழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம்
வெற்றியடைந்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

இந்திய தேசம் முழுவதும் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி
ஊழியர்களும், அதிகாரிகளும் டிசம்பர் 16, 17 ஆகிய இரண்டு நாட்கள் வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் வேலை நிறுத்தப்
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சிகர
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டபோது இரண்டு பொதுத்துறை வங்கிகளை மட்டும்
தனியார்மயமாக்குவோம் என்ற அறிவிப்பினை நிதியமைச்சர் வெளியிட்டார்.
ஆனால், தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், அனைத்து
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தற்போது உள்ளபடியான அரசின்
பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே குறைத்து, அதாவது அவைகளின்
பெரும்பான்மை பங்குகளை தனியாருக்கு வழங்குவதற்கான சட்டத்
திருத்தத்தை முன்மொழிவதாக பாஜக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் தொழில், விவசாயம், வர்த்தகம்,
வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு உட்பட இந்தியாவின் பொருளாதார சமூக
மேம்பாட்டுக்கான லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான கருவிகளாக
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று பாஜக
அரசு இந்த நோக்கங்களை சீர்குலைக்கும் நோக்குடன் வங்கிகள்
அனைத்தையும் மீண்டும் தனியார்மயமாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதன் மூலம் விவசாயிகள், சிறு
குறு தொழில் செய்வோர் உட்பட சாதாரண மக்களின் வங்கி தேவைகள்
புறக்கணிக்கப்பட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கான
கருவிகளாக இந்த வங்கிகள் மாற்றப்படும் அபாயமும் உள்ளது. இந்த
பின்னணியில், அனைத்து வங்கித்துறை அமைப்புகளின் சார்பாக
இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு, அது முழு வெற்றி
அடைந்திருப்பது பாஜக அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற கடுமையான
எச்சரிக்கையாகும்.

எனவே, மோடி அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும்
முயற்சியை கைவிட வேண்டுமெனவும், முன்மொழிய உள்ள சட்ட
மசோதாவை திரும்பப் பெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
கோருகிறது.
இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்திருக்கிற அனைத்து
ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.