what-they-told

img

கொரோனாவால் போட்டித் தேர்வாளர்களுக்கு உருவாகும் மன அழுத்தம்

கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுத் துறை மற்றும் ஒன்றிய அரசு துறைகளில் சரிவர அரசு பணிக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. யுபிஎஸ்சி தேர்வுகள் மற்றும் மாநில, ஒன்றிய அரசு துறைத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டன. கொரோனா குறைந்த காலத்தில் வங்கித்தேர்வுகள் நடத்தப்பட்டன.  இந்நிலையில் 2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனைத்து தேர்வுகளையும் உறுதியாக நடந்தும் முனைப்பில் அட்டவணை வெளியிட்டுள்ளது. கண்டிப்பாக நடப்பாண்டில் தேர்வு நடக்கும் என்ற எண்ணத்துடன் முழுவீச்சில் போட்டித் தேர்வுக்கு படித்து வருகின்றனர். ஆனால் கொரோனா மீண்டும் போட்டித் தேர்வர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒமைக்ரான் தொற்றால் உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டெல்டா வைரஸோடு இணைந்து ஒமைக்ரான் மிரட்டி வருவதால் தமிழ்நாடு அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் மினி ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. மீண்டும் ஆட்டத்தை தொடங்கிவிட்டதால் இந்த ஆண்டும் நமது அரசு வேலையின் கனவு கானல் நீராக போய்விடுமோ என்ற எண்ணத்தில் போட்டித் தேர்வர்கள் மனஅழுத்தத்துடன் படித்து வருகின்றனர்.

மனஅழுத்தம் ஏன்?

உறுதியாக அரசு பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்ற கனவுடன் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் வேறு எந்த தனியார் துறை வேலைகளுக்கு செல்ல மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் 10 மணிநேரம் படிக்கச் வேண்டும் என்பதால் வீடு மற்றும் தான் பயிலும் பயிற்சி மையத்தில் முடங்கி படித்துக் கொண்டே இருப்பார்கள். இந்த வருடமாவது அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என ஒற்றை கனவுடன் குடும்ப சூழ்நிலை என அனைத்தையும் புறந்தள்ளி படிப்பில் மட்டுமே கவனமாக இருப்பார்கள். ஒரு சில பெற்றோர்கள் தான் வருடக்கணக்கில் வாய்ப்பு தருவார்கள். சில பெற்றோர்கள்,”படித்தது போதும் வேறு வேலைக்கு சென்று உனது வாழ்க்கை மற்றும் நமது குடும்பத்தை கவனி” என்று கூறி பிரச்சனையை தொடங்குவார்கள். குடும்ப விவகாரம் ஏற்கெனவே அவர்களுக்கு மன அழுத்த சூழலை கண்டிப்பாக உருவாக்கும் என்ற நிலையில் தற்போது கொரோனா வேறு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் போட்டித் தேர்வாளர்களுக்கு இருக்கும் ஒரே மனஅழுத்தம் தேர்வு தள்ளிபோகுமா? மீண்டும் அடுத்தாண்டு தான் தேர்வு வைப்பார்கள் என்ற மனநிலை தொடர்பான பயம் தான்.

ஊரடங்கு விதித்தாலும் போட்டித் தேர்வு நடக்குமா?

ஊரடங்கு காலத்தில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு சற்று கடினமானது என்பதால் தேர்வாளர்கள் குறைந்த அளவில் தான் பங்கேற்றனர். அதனால் குரூப் 1 தேர்வை அரசு நடத்தியது. ஆனால் குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வுகள் நடத்துவது சற்று சிக்கலான விஷயம். இந்த தேர்வுகளில் அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக லட்சக் கணக்கில் பங்கேற்பார்கள். மேலும் சிறப்பு பேருந்து, புறநகர் ரயில் சேவை என சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கும் நிலை ஏற்படும் என்பதால் அதனால் தான் இந்த தேர்வை கொரோனா பரவும் காலம் மற்றும் ஊரடங்கு காலங்களில் நடத்த அரசு தயங்கி வருகிறது.  வரும் பிப்ரவரி மாதம் முதல் குரூப் 2, 2ஏ, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், கொரோனா வழிவிட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
 

;