what-they-told

img

இந்நாள் ஜன.09 இதற்கு முன்னால்

1992 - புறக்கோள்கள் என்றழைக்கப்படும், சூரியக் குடும்பத்திற்கு வெளியே, வேறு கோள் தொகுதிகளைச் சேர்ந்த கோள்கள் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டன. சூரியனிலிருந்து 2,300 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள, கன்னி ராசி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டத்தைச் சேர்ந்த, பிஎஸ்ஆர்-பி1257+12 என்ற நட்சத்திரத்தின் இரு கோள்களை, அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்திலுள்ள, ரேடியோ அலைகளைக்கொண்டு விண்பொருட்களை ஆய்வு செய்யும் மையத்திலிருந்து, டேல் பிரெய்ல், அலெக்சாண்டர் வோல்க்ஸ்ஸான் ஆகியோர் கண்டுபிடித்தனர். நமக்குத் தெரியும் நிலவின் ஒளி, சூரிய ஒளியின் பிரதிபலிப்பே. அதைப்போலவே, எல்லாக்கோள்களும் அத்தொகுதியின் நட்சத்திர (சூரியன்) ஒளியைப் பிரதிபலித்தாலும், நட்சத்திரத்தின் ஒளி அதைவிடப் பலகோடி மடங்கு அதிகம் என்பதால், கோள்களின் ஒளியைக் காண்பது மிகவும் சிரமம். இதனைக் கண்டுபிடிக்க பல்வேறு முறைகள் பயன்படுத்தப்பட்டாலும், நட்சத்திரத்தின் முன்பாக கோள் வரும்போது (கிரகணம்!), நட்சத்திரத்தின் ஒளி குறைவதைக்கொண்டு கண்டுபிடிக்கும் ட்ரான்சிட் போட்டோமெட்ரி, இரண்டும் அருகருகே வரும்போது ஏற்படும் அலைநீள மாறுபாட்டைக்கொண்டு கண்டுபிடிக்கும் டாப்ளர் ஸ்பெக்ட்ராஸ்கோப்பி ஆகிய இரு முறைகளே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் 85 சதவீத புறக்கோள்களைக் கண்டுபிடிக்க உதவியுள்ளன.  2020 ஜனவரி 1 வரை, சூரியக் குடும்பத்தைப்போன்ற 3,090 கோள் தொகுதிகளில், 4,160 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 676 தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோள்கள் உள்ளன. சூரியனைப்போன்ற நட்சத்திரங்களில் 5இல் ஒன்றில், உயிர்கள் வாழ்வதற்கேற்ற தொலைவில், புவியைப்போன்ற கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமது பால்வீதி மண்டலத்தில்மட்டும் 20,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளதால், அதில் உயிர்கள் வாழத்தக்க 1,100 கோடி கோள்கள் இருக்கலாம்! செங்குறுமீன்களையும் சேர்த்தால், இது 4,000 கோள்களாகும்! பால்வீதி மண்டலத்திற்கு அப்பாலுள்ள பிற கேலக்சிகளைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை கணக்கிலடங்காது. சுழலும் நேரமும், புவியைச் சுற்றும் நேரமும் ஒன்றாக இருப்பதால், நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நாம் காணமுடிகிறது. அவ்வாறே பல புறக்கோள்கள் இருப்பதால், ஒரு பாதியில் கடுங்குளிரும், மறுபாதியில் வெப்பமும் நிலவுவது உயிர்வாழ இடையூறாக இருக்குமென்றாலும், உயிர்களிருக்கும் கோள்களுக்கான சாத்தியம் மிகப்பெரியதாகவே உள்ளது.