அண்மையில் இரண்டு மைய அரசுத் துறைகள் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தை(ICMR) அணுகின. முதலாவது ‘ தூய்மை கங்கை தேசிய திட்ட’பொறுப்பு மந்திரி. அவர் கொரோனா வைரசுக்கு கங்கை நீரை மருந்தாகப் பயன்படுத்த முடியுமா என்று ஐசிஎம்ஆரை ஆய்வு நடத்த கேட்டுக்கொண்டார். இதுவரை கிடைத்துள்ள தரவுகள், இந்த ஆய்வினைச் செய்ய வலுவானதாக இல்லை என்று ஐசிஎம்ஆர் மரியாதையாக நகர்ந்துவிட்டது. 13000 அடிக்கு மேல் உள்ள கங்கோத்ரி பனிப்பாறையில் உருவாகி உத்தர்கண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் என வட சமவெளி மாநிலங்கள் வழியாக 2525 கிலோ மீட்டர் ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது கங்கை. இமயமலையில் உற்பத்தியாகி பல நீரோடைகளை சேர்த்துக்கொண்டு கங்கை எனும் பெயர் கொள்ளும் ஹரித்துவாரிலேயே பல ஆண்டுகளாக அது மாசுபடுத்தப்படுகிறது. மனிதக் கழிவுகள், வணிக தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றினால் இது ஏற்படுகிறது.
2016இல் வெளிவந்த ஒரு ஆய்வு (Assessment of Ganga River Eco system at Hardwar,uttarahand,India,with reference to Water Quality Index) என்பதைப் படித்தால் மனம் சங்கடப்படும் என்கிறார் கட்டுரையாளர் பாலசுப்ரமணியன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1.3 பில்லியன் லிட்டர் கழிவுகள் கங்கையில் கலக்கின்றனவாம். இதனுடன் ஆயிரக்கணக்கான கால்நடைகளின் உடல்களும் விடப்படுகின்றன. தில்லி ஐஐடி ஆய்வாளர்களின் ஆய்வுகளை தொகுத்து டிசம்பர் 2019இல் நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கட்டுரையில் நாட்டுக்குள் நுழையும் இடத்திலேயே கங்கை நீர் எவ்வளவு மாசுபட்டிருக்கிறது என்பதையும் அதில் உள்ள ஆபத்தான பாக்டீரியாக்கள் இப்பொழுதுள்ள ஆண்டிபயாடிக் மருந்துகளையே தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு எதிர்ப்புசக்தி கொண்டவையாக இருக்கின்றன என்பதையும் விளக்குகிறது. உள்நாட்டிற்குள் போகப்போக தொழிற்சாலை கழிவுகளும் சேர்ந்து அதன் மாசு இன்னும் அதிகரிக்கின்றது.
இப்பொழுது இந்த மாசுகளுடன் கொரோனாவும் சேர்ந்துகொண்டுள்ளது. கங்கை ஆற்றில் வாழும் பலவிதமான மீன்கள்,ஈரிட வாழ்விகள், ஊர்வன, பறப்பன, டால்பின்கள், முதலைகள் போன்றவை எப்படி இந்த மாசுகளை சமாளிக்கின்றன? அவற்றின் உடலில் சிறப்பு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கின்றதா அல்லது அவை தீ நுண்மிகளை எதிர்க்க ஆண்டிபாடிகளை உற்பத்தி செய்கின்றனவா? உலகின் வேறு இடங்களில் வேறு விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தி உத்திகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நோய் எதிர்ப்பு மண்டலங்கள் குறு நோய் எதிர்பொருட்களை (mini antibodies) உண்டாக்குகின்றனவாம். இவற்றை ஆய்வகங்களில் தயாரித்து வைரஸ்களை எதிர்க்க முடியுமா என்று ஆய்வு செய்யப்படுகிறது. நாமும் கங்கை ஆற்றில் உள்ள விலங்குகளின் நோய் எதிர்ப்பு பொருட்களை ஆய்வு செய்யலாம்.
ஐசிஎம்ஆரை அணுகிய இன்னொரு துறை ஆயுஷ்.(இந்திய மருத்துவ முறைகள்). அது அஸ்வகந்தா, ஆயுஷ்64 போன்ற மருந்துகள் கொரோனாவை குணப்படுத்துமா என்று பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஆய்வு செய்யப்படலாம். ஏனெனில் பாரம்பரிய மூலிகைகளில் உள்ள மூலக்கூறுகள் வியாதிகளை குணப்படுத்தும் தன்மை உடையவை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. மேலும் அவற்றில் உள்ள செயல்படும் மூலக்கூறுகள்(active molecules) கண்டுபிடிக்கப்பட்டு, பிரித்தெடுத்து மருந்துக் கம்பெனிகளால் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் புகழ் பெற்ற இதய நோய் மருத்துவர் எம்.எஸ்.வலியத்தன் கடந்த இருபதாண்டுகளாக இன்றைய அறிவியல் முறைகளை பயன்படுத்தி பாரம்பரிய மருந்துகளின் குணப்படுத்தும் தன்மைகளை ஆய்வு செய்து வருகிறார். ஆகவே இந்திய மருத்துவ முறைகள் கொரோனாவைப் எதிர்ப்பதற்கு உதவலாம். ஆனால் கங்கை நீர் கொரோனாவைப் பரப்புவதற்குதான் உதவும்.
தகவல் ஆதாரம் : இந்து ஆங்கில நாளிதழ் 17.05.2020- டி.பாலசுப்ரமணியன் அவர்கள் கட்டுரை