அமெரிக்காவும், சில மேற்கத்திய நாடுகளும் சமீபத்தில் சீனாவுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. கோவிட்-19 என்னும் கொரானா வைரஸ் தொற்று காரணமாகப் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டது என்று குற்றஞ்சாட்டுவதுடன், சீனாவிலிருந்து மேற்கத்திய நாடு களுக்கு வரும் மருந்துப் பொருள்களும் தரமற்றவைகளாக இருக்கின்றன என்றும், கூறி சீனாவின் மீது சேற்றை அள்ளி வீசுகின்றன. மேலும் இப்போது கொரானா வைரஸ் பரவியிருப்பதற்கு சீனாதான் பொறுப்பு என்றும் கூறி வசைபாடிக்கொண்டிருக்கின்றன.
இவ்வாறு இவை ஒப்பாரி வைப்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு. முதலாவது, அவர்கள் மத்தியில் சீனாவுக்கு எதிராக இருந்துவரும் உள்ளார்ந்த சித்தபிரமை நிலைப்பாடு. இரண்டாவது, கொரானா வைரஸ் தொற்றால், அமெரிக்காவும் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அதே சமயத்தில், சீனா அதனைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதைக் கண்டு ஏற்பட்டுள்ள விரக்தி. மூன்றாவது, மேலை நாடுகளில் ஆள்வோரும் அவர்களின் தத்துவார்த்த மேட்டுக்குடியினரும் தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா அவலநிலைக்கான காரணங்களை மக்கள் மத்தியில் விளக்குவதில் தோல்வியடைந்துள்ளதும் அதன்மூலம் மக்களிடேயே தங்கள்மீது ஏற்பட்டுள்ள கோபத்தைத் திசை திருப்புவதற்காக, சீனாவைப் பலிகடாவாகப் பயன்படுத்த முயல்வது.
இவையே இவர்கள் ஒப்பாரி வைப்பதற்கான காரணங்களாகும். எதிர்காலத்திலும் இதுபோன்று மேலும் தாக்குதல்கள் சீனாமீது மேற்கொள்ளப்படலாம். ஆனால், அவர்கள் சீனாவைக் குறைகூறுவதோடு நின்றுவிடுவார்கள் என்று நாம் நினைக்கக்கூடாது. சீனா, தன் தடுப்பு முயற்சி களைத் தொடர வேண்டும். இத்தொற்றைச் சமாளித்திட இதர நாடுகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்திட வேண்டும். இவர்கள் அவிழ்த்துவிடும் பொய்கள் மறைந்து உண்மை இறுதியில் வெளியாகும். அதன்மூலம் இந்தத் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை உலகம் புரிந்துகொள்வதை அவர்களால் தடுத்திட முடியாது.
சீன மக்களின் மாபெரும் ஒற்றுமை
இதுதொடர்பாக மூன்று முக்கிய உண்மைகளை அடிக்கோடிட்டுக் கூறிட வேண்டும். முதலாவது, இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சீனா மிகப்பெரும் வேலையைச் செய்திருக்கிறது. இரண்டே மாதங்களில் நிலைமைகளைச் சரிசெய்திருக்கிறது. நூறு கோடி மக்கள்தொகைக்கும் அதிகமாகவுள்ள ஒரு பிரம்மாண்டமான சமூகத்தில் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள மக்கள் மற்றும் அதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது, குறைந்த மக்கள்தொகை உள்ள நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைவிட மிகவும் குறைவு. இது சீன அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் இடையே யான வியத்தகு ஒற்றுமையை உலகில் உள்ள ஒவ்வொருவர் மத்தியிலும் எடுத்துச்சென்றிருக்கிறது. எனவே இது சீனா மீது வாரிஇறைக்கப்படும் எவ்வித அரசியல் சேற்றையும் துடைத்தெறியப் போதுமான அளவிற்கு இருக்கிறது.
வார்த்தைகளை விட உரத்த செயல்
இரண்டாவது, சீனா, அதன் ஆரம்ப இக்கட்டான நிலையைக் கடந்த பின்னர், உலக அளவிலான தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அதற்கு ஆதரவு அளித்திடும் சக்தியாக மாறியிருக்கிறது. அது, இதர நாடுகளுக்குத் தன் நாட்டிலிருந்து மருத்துவ வல்லுநர்களையும், மருந்துப் பொருள்களையும் அனுப்பியிருக்கிறது. உலகில் சில நாடுகள் சீனாவின் மீது குறைகூறுவதற்காக என்னதான் பிரச்சாரம் செய்துவந்தபோதிலும், சர்வதேச சமூகத்திற்கு அது ஆற்றிவரும் பங்களிப்பினை எவராலும் மறுக்க முடியாது. தங்களுக்கு எதிராக அவதூறை வீசுபவர்களுக்கு, சிரமத்திற்கு ஆளாகியிருக்கிற நாடுகளுக்கு மேலும் அதிக அளவில் ஆதரவினை அளிப்பதன் மூலம், சீனா மிகவும் வலுவான விதத்தில் பதில் அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அதன் செயல்பாடுகள், வார்த்தைகளை விட உரக்கப் பேசுகிறது.
சீனாவின் அனுபவம் முக்கியமானது
மூன்றாவது, சீனா தொற்றுக்குப் பிந்தைய மறுகட்டுமானத்தைத் தொடங்கியிருக்கும் முதல் நாடாகும். சீனாவில் கொரானா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்ட போதிலும், அது முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படவில்லை. களைய வேண்டிய இடர்ப்பாடுகள் இன்னும் இருக்கின்றன. இந்த முக்கியமான தருணத்தில், மீண்டும் பழைய
படி வேலை மற்றும் உற்பத்தியைத் தொடங்குவதும், நுகர்தலை மீண்டும் தொடங்குவதும், தொற்றுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்வதும் மிகவும் கடினம். சீனாவின் ஆய்வு, அது எவ்வளவுதான் மென்மையானதாக இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், மிகவும் மதிப்புவாய்ந்ததாகும்.
சீனாவிற்கு எதிராக, முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீனா, தாக்குபவர்களின் தவறான வாதங்களையும், தவறுகளையும் சுட்டிக்காட்டி, உறுதியுடன் அடித்துவீழ்த்திவிடும். இத்துடன், உண்மைகள் மூலமாக அபத்தமான குற்றச்சாட்டுகள், அதற்கு எதிரான ஆதாரங்களை அளிப்பதன் மூலமாக, அடித்து நொறுக்கப்பட்டுவிடும் என்பதில் சீனா முழு நம்பிக்கை கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்தத்தொற்று பரவியதற்கு சீனாதான் காரணம் என்று அவிழ்த்துவிடப்பட்ட சரடு, சில முக்கியமான ஆதாரங்களை வெளி யிட்டிருப்பதன் மூலம் அமெரிக்க மக்களால் கோபத்துடன் நிராகரிக்கப்படும். அமெரிக்க தொற்று நோய் வல்லுநர் அந்தோணி ஃபவுசி (Anthony Fauci) மதிப்பீட்டின்படி, அமெரிக்க இந்தத் தொற்றுக்கு எதிராகக் கவனம் செலுத்திடவில்லை என்றால், இறப்பு என்பது 1 லட்சத்திற்கும் 2 லட்சத்திற்கும் இடையிலானதாக இருந்திடும் என்று கூறியிருப்பதாலும், அதே சமயத்தில் இதனை சீனா சமாளித்திருப்பதாலும், இவர்கள் அவிழ்த்துவிடும் சரடுகள் நிலைத்து நிற்க முடியவில்லை.
சீனாவின் கட்டமைப்பும் இத்தனை பெரிய துயரத்தை எதிர்கொள்வதில் குறைபாடு உடையது என்றபோதிலும், அது மக்களுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது; நெருக்கடி காலங்களில் அது எப்போதும் மக்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறது. இவை இப்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கோவிட்-19 மரணங்களை ஒரு லட்சத்திற்குள் வைத்திருப்பது “மிகவும் நல்ல வேலை” (“very good job”) யாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு சீனத் தலைவர் எவரேனும் வார்த்தைகளை உதிர்த்திருந்தார்களானால் இந்நேரம் அவர் சாபங்களால் சபிக்கப்பட்டிருப்பார். நிச்சயமற்ற நிலைமைகள் பல எதிர்நோக்கி இருக்கின்றன. சீனா அவற்றை, மக்களின் ஒருமைப்பாட்டுடனும், நம்பிக்கையுடனும் கையாள வேண்டும். உலகில் நாம் மிக அதிகமான மக்களைக் கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விடாமுயற்சி உடையவர்கள், நல்லிதயம் படைத்தவர்கள், சக்திமிக்கவர்கள் மற்றும் ஆக்கப்பூர்வமானவர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் நன்றாகக் கையாண்டு மற்றோரை அன்புடன் அரவணைக்கும் வரையிலும், எந்த சக்தியாலும் நம்மை கட்டாயப்படுத்தவோ அல்லது காயப்படுத்தவோ முடியாது. (குளோபல் டைம்ஸ் தலையங்கம், 30.3.2020)
தமிழில்: ச.வீரமணி