சென்னை,மார்ச் 12- நடிகர் விஜய் வீட்டில், சீலிடப்பட்ட லாக்கரில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி, பிகில் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழனன்று மீண்டும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிகில் படத்தின் வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புச் செழியன், நடிகர் விஜய் ஆகியோர் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து, மாஸ்டர் படம் தொடர்பாக பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழனன்று விசாரணை நடத்தி வருகின்றனர். எட்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த விசாரணையில் ஈடுபட்டனர். வருமானவரித்துறை சோதனையின்போது, பறிமுதல் செய்யப்படாத ஆவணங்கள் சீலிட்டு வைக்கப்படும் என்றும் பின்னர் விசாரணைக்காக சீல் அகற்றி, அந்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.