what-they-told

இந்நாள் ஜன.27 இதற்கு முன்னால்

98-ரோமப் பேரரசர்களிலேயே மிகச்சிறந்தவராகக் குறிப்பிடப்படும் ட்ராஜான்(இவருக்கும் ட்ரோஜான்களுக்கும் தொடர்பில்லை), முந்தைய பேரரசர் நெர்வா-வின் மறைவையடுத்து பதவியேற்றார். ரோமப்பேரரசின் வரலாற்றிலேயே மிகப்பெரிய விரிவாக்கத்தைச் செய்த ட்ராஜானின் ஆட்சிக்காலத்தில்தான் அது மிகஅதிகப் பரப்பிற்கு விரிவடைந்தது.  தற்போதைய ரோமானியா, மால்டோவா ஆகிய நாடுகளையும், பல்கேரியா, செர்பியா, ஹங்கேரி, போலந்து, உக்ரைன், ஸ்லோவேக்கியா ஆகியவற்றின் சிறு பகுதிகளையும் உள்ளடக்கிய டேஷியா-வையும், துருக்கி, இரான் ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கிய பார்த்தியன் பேரரசையும் வென்று, சுமார் 50 லட்சம் ச.கி.மீ. பரப்புக்கு விரிவாக்கினார். சுமார் 6 கோடி மக்கள்தொகையுடன், கிட்டத்தட்ட உலகின் கால்பங்கு மக்கள்தொகையைக் கொண்டதாக ரோமப்பேரரசை இவ்விரிவாக்கம் மாற்றியது. எல்லைப்புற மாநிலங்களில் டேஷியாவுடனான மோதல்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டாலும், டேஷியாமீதான படையெடுப்பு, அங்கிருந்த (இரும்பு, செம்பு) கனிம வளங்கள் உள்ளிட்ட வளங்கள் ரோமப் பேரரசின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவைப்பட்டதாலேயே செய்யப்பட்டதாகப் பின்னாளைய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பார்த்தியப் பேரரசும்கூட, இந்திய வணிகத்திற்கான பட்டுப்பாதையில் அமைந்திருந்தாலேயே கைப்பற்றப்பட்டது. அரேபியாவைக் கைப்பற்றியபின் ட்ராஜான் உருவாக்கிய ‘வயா ட்ரேயானியா நோவா’வுக்குப்பின், இது மட்டுமே ரோமப் பேரரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வணிக வழியாக இருந்தது. இறக்குமதியின் விலை உயராமலிருக்கவும், தூரக்கிழக்கு நாடுகளுடனான வணிகத்தில் ரோமப் பேரரசுக்கிருந்த ஏற்றுமதிப் பற்றாக்குறையால் தங்கம், வெள்ளி ஆகியவை தீர்ந்துவிடும் அபாயத்தைத் தடுக்கவும், இவ்வழி மீதான  கட்டுப்பாடு அவசியமாக இருந்ததால் பார்த்தியப் பேரரசு கைப்பற்றப்பட்டது. டேஷியாவை வென்றதும், போர்க்காட்சிகளைச் சித்தரிக்கும் சிற்பங்களுடன் ட்ராஜான் உருவாக்கிய ‘ட்ராஜான் தூண்’, அக்காலத்தில் மட்டுமின்றி, பல நவீன வெற்றித்தூண்களுக்கும் முன்மாதிரியாக விளங்குகிறது. ‘ட்ராஜான் அரங்கம்’ உட்பட ஏராளமான கட்டுமானங்களை மேற்கொண்டு, ரோமின் வடிவத்தையே மாற்றியமைத்தவரான, ட்ராஜானால் கட்டப்பட்ட ‘ட்ராஜான் சந்தை’ உலகின் முதல் ‘ஷாப்பிங் மால்’ என்று புகழப்படுகிறது. ரோமில் ஏழைகளுக்கு உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றை (ரேஷன்). வழங்குவது கிறித்துவுக்கு முன்பே தொடங்கியிருந்தாலும், அவற்றை விரிவாக்கியதுடன், விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன்கள், அனாதைக் குழந்தைகளுக்கான காப்பகங்கள் உள்ளிட்ட ஏராளமான சமூகநலப் பணிகளை மேற்கொண்டதால், படைவீரராக இருந்து பேரரசரான ட்ராஜான், ரோமின் ‘தலைசிறந்த பேரரசர்’ என்று புகழப்படுகிறார்.