சென்னை:
அரபிக் கடலில் உருவாகியிருக் கும் புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி, கோவை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும். குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.மீனவர்கள் குமரிக்கடல் மன்னார் வளைகுடா தென்கிழக்கு அரபிக் கடல் கேரள, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளது. தாக்டே எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது தற்போது கர்நாடகா கரையிலிருந்து மேற்கே சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர்
அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின்இயக்குனர் பாலச்சந்திரன் பங்கேற்று பேசுகையில், “புயல் சின்னத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும் மழையின் சாத்தியக்கூறுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.இந்தப் புயலால் மிக கனமழை மிக மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து முடிக்க சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். மேலும் நிலச்சரிவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவேண்டும் என்றும் குமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாமல் உள்ள 162 மீன்பிடி படகுகளையும் உடனடியாக கரை திரும்பவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த ஆய்வு கூட்டத்தின்போது அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, வருவாய் பேரிடர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.