tamilnadu

img

விவசாயம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன “ஹெல்ப்லைனில்” தெரிந்து கொள்ளலாம்...

கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படும் இந்த சமயத்தில் விவசாயிகள் வல்லுனர்களை நேரில் அணுகி விவசாயம் தொடர்பான தகவல்களை பெற சிரமப்படுவார்கள்.
எனவே விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வீட்டிலிருந்தே பெறுவதற்கு வசதியாக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் விவசாயிகளுக்கான ஹெல்ப் லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகள் தங்களின் பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய் மற்றும் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை உள்ளிட்ட விவசாயம் தொடர்பான அனைத்து விதமான தகவல்களையும் இந்த “ஹெல்ப் லைன்” எண்ணில் உடனுக்குடன் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் விவசாயிகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகளுக்கு தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகளை துல்லியமாக வழங்குவதற்காக பூச்சியியல், நோயியல், உழவியல், மண்ணியல், விதை தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அடங்கிய 10 வல்லுநர்களை கொண்ட வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு விவசாயி “ஹெல்ப் லைன்” எண்ணில் தொடர்பு கொண்டால், சம்பந்தப்பட்ட விவசாயியின் கேள்வி எது தொடர்பாக உள்ளதோ அந்த நிபுணருடன் இணைக்கப்பட்டு அவருக்கு தேவையான பதில்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 9942211044, 7299935538 மற்றும் 7299935543 “ஹெல்ப்லைன்” எண்களில் தொடர்பு கொண்டு விவசாயம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தேவையான நேரத்தில் பெற்று பயனடையுமாறு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

;