தான்தோனிமலை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் வாலிபர் சங்க கரூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
கரூர், ஆக. 10- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட 13 ஆவது மாநாடு அரசு ஊழியர் சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சதீஸ் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ரஞ்சிதா வரவேற்று பேசினார். அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் ப. தயாநிதி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வாலிபர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.அர்ஜூன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் மு.சிவக்குமார் வேலை அறிக்கையை முன் வைத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன் ஜெயராம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சசிகலா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.ஆர்.பாலாஜி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ரா.ராஜேந்திர பிரசாத் நன்றி கூறினார். கரூர் மாவட்டத்தின் புதிய தலைவராக பி.சதீஸ், செயலாளராக மு.சிவக்குமார், பொருளாளராக எஸ்.ரஞ்சிதா, துணைத் தலைவராக ரா. ராஜேந்திர பிரசாத், மாவட்ட துணைச் செயலாளராக ப.தயாநிதி உட்பட 15 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள தான்தோனிமலை டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும். கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் நகராட்சி பகுதிகளில் வார்டு தோறும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.