tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் ஏன் - கே ஆறுமுகநயினார்

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் ஏன்?

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 18.8.2025ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிஐடியு, ஓய்வூதியர் நல அமைப்பு இணைந்து காத்திருப்பு போராட்டம் நடை பெற்று வருகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என சிஐடியுவும், ஓய்வுபெற்றோர் நல அமைப்பும் முடிவு செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சனை க்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் அடிப்படை நோக்கம்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம்

கடந்த 1998ஆம் ஆண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒப்பந்தம் மூலம் ஓய்வூதியத் திட்டம் உருவாக்கப்பட்டது.  இந்த ஓய்வூதிய த்திட்டம் உருவாக்கப்பட்டபோது, 1.9.1998க்கு முன்பு பணியில் சேந்தோர் விருப்புரிமை அடிப்ப டையில் ஓய்வூதியத் திட்டத்தில் இணைய லாம் எனவும், 1.9.1998க்கு பின் பணியில் சேரு பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் கட்டாயம் எனவும் ஒப்பந்தத்தில் இறுதிப்படுத்தப்பட்டது.  ஆனால், ஒப்பந்தத்திற்கு மாறாக, 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியத் திட்டம் பொருந்தாது என அதிமுக ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி யம் வழங்குவதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரு கிறது.  இதைப் போன்றதல்ல போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம்.  ஒரு தொழிலாளி பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறும் போது பணியில் சேரும் தொழிலாளியின் நிதி ஓய்வூதிய நம்பகத்திற்கு செல்லும்.  பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்கும் வருங்கால வைப்புநிதி தொகையே ஓய்வூதியத் திட்டத்திற்கான அடிப்படை நிதி ஆதாரம்.  1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோரை இத்திட்டத்தில் இருந்து விலக்கி யதால் ஓய்வூதிய நம்பகத்தில் உள்ள நிதி முழு வதும் தீர்ந்துவிட்டது.  எவ்வித ஆய்வும் இல்லா மல் அதிமுக அரசு 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோரை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு கொண்டு சென்றது மிகப்பெரிய தவறு.   1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்த வர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து விலக்கிவிட்டால் எப்படி ஓய்வூதியம் வழங்க முடியும் என சிஐடியு சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் சுட்டிக்காண்பிக்கப்பட்டது.  தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் இதை எழுப்பினோம்.  ஓய்வூதிய நம்பகத்தில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட அரசு நிதி வழங்கும் என 3 ஒப்பந்தங்களில் சரத்து உரு வாக்கப்பட்டது.  ஆனால், ஒப்பந்த அடிப்படை யில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு எவ்வித நிதி யும் வழங்கவில்லை.  ஓய்வூதியர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அடிப்படைக் கார ணமே இதுதான்.  எனவே, 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 2021 தேர்தலின்போது போக்குவரத்து ஊழியர் களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமுல் படுத்தப்படும் என தனியாக குறிப்பிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது திமுக.  தேர்தல்  வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது மட்டுமின்றி புதிய பென்சன் திட்டத்தை அமுல் படுத்தியதால் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் சரி செய்யவும் இது அவசியம் என்பது சிஐடியு நிலைபாடு.  ஆனால், அரசு இது பற்றி விவாதிக்க கூட தயாராக இல்லை.

தொழிலாளர் பணத்தை செலவு செய்யும் நிர்வாகங்கள்

வருமானம் இல்லாத வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் போக்குவரத்துக் கழகம் பேருந்தை இயக்குவதால் ஏற்படும் இழப்பை  அரசு ஏற்க வேண்டும் என்பது சிஐடியுவின் கோரிக்கை.  கடந்த 20 ஆண்டுகளாக அரசு இதற்கு எவ்வித நிதியும் ஒதுக்கவில்லை. பற்றாக்குறையை சரிக்கட்ட வங்கிகளில் கடன் பெறுவதுடன், வருங்கால வைப்புநிதி, பணிக் கொடை போன்ற தொழிலாளர்களின் சேமிப்பு பணம் நிர்வாக செலவினங்களுக்காக செலவு செய்யப்படுகிறது. போக்குவரத்துக் கழகங் களுக்கு இன்றுள்ள கடன் சுமார் ரூ. 60,000 கோடி.  அதில் தொழிலாளர்களின் பணம் மட்டும்  ரூ. 15,000 கோடி.  தொழிலாளர்களின் பணம்  செலவு செய்யப்படுவதால் பணி ஓய்வின் போது எவ்வித பணப்பலனும் பெற முடியவில்லை. 25 மாதங்களாக ஓய்வு பெற்றோருக்கு பணப் பலன் வழங்கப்படவில்லை. சிஐடியு காத்திருப்பு போராட்டத்திற்கு பின் 10 மாத ஓய்வுக்கால பலன் வழங்கப்பட்டது.  இன்னும் 15 மாதங் களுக்கு ஓய்வூதிய பலன் வழங்க வேண்டும்.  இப்பிரச்சனை கடந்த 2015ஆம் ஆண்டு துவங்கியது.  அதிமுக ஆட்சியில் 2017, 2018, 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வேலை நிறுத்தங்கள் போது இப்பிரச்சனை முக்கிய கோரிக்கையாக இருந்தது.  இறுதியாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற வேலை நிறுத்தத்தின்போது ஓய்வு பெற்றோரின் முழு நிலுவைத்தொகையையும் அதிமுக அரசு வழங்கியது.  தற்போது உள்ள நிலுவை முழு வதும் திமுக ஆட்சியில் ஏற்பட்டது.  அதிமுக ஆட்சிக்காலம் முடியும்போது கழகங்கள் செலவு செய்த தொழிலாளர் சேமிப்பு பணம் ரூ. 7000 கோடியாக இருந்தது.  தற்போது இது ரூ. 15000 கோடி.

சிஐடியு சொன்ன தீர்வு

திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போக்கு வரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழிற் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.  தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி செலவு செய்யப்படுவது சம்பந்தமாகவும், பணிக் கொடை ஒதுக்கீடு செய்யப்படாதது சம்பந்தமாக வும் சுட்டிக்காண்பித்தோம்.  ஓய்வு வயது 60  ஆக உயர்த்தப்பட்டதால், 2022 மே மாதம் தான்  தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறுவர்;  இப்போது முதல் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் 2022 மே மாதம் பணி ஓய்வின் போதே பணப்பலன் வழங்கிவிட லாம்; அதிமுக ஆட்சியில் செய்த தவறு சரி செய்யப்படும் என கூறினோம்.  அமைச்சரும் ஒப்புக்கொண்டார்.  போக்குவரத்து செயலா ளர் தயானந்த கட்டாரியா அனைத்து நிர்வாக  இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதினார்.  ஆனால், அரசு ஒப்புக்கொண்ட அடிப்படையில் எதுவும் செய்யவில்லை.   கடந்த 4 ஆண்டுகளாக பல பேச்சு வார்த்தையில் இதை சுட்டிக்காண்பித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  ஓய்வுகால பலன் பெற பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.  வருங்கால வைப்புநிதி பணத்தை மாதா மாதம் கணக்கில் செலுத்தாவிட்டால் அது  தண்டனைக்குரிய செயல் என சட்டம் வரையறை  செய்துள்ளது.  தனியார் முதலாளிகள் பலர் இந்த தவறை செய்கின்றனர்.  சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அரசே இந்த தவறை 10 ஆண்டுகளாக செய்து வருகின்றது.  

அரசு போட்ட கமிட்டியின் நிலை என்ன?

1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்தோ ருக்கான ஓய்வூதியம், ஓய்வூதியர்களுக்கு அக விலைப்படி உயர்வு, மருத்துவக் காப்பீடு, ஒப்பந்த பலன்களை வழங்குவது சம்பந்தமாக முடிவு செய்ய வேண்டும் என 2022 ஒப்பந்த  பேச்சு வார்த்தையின்போது வலியுறுத்தினோம்.  இது சம்பந்தமாக கமிட்டி அழைத்து  விவாதிப்ப தாக அமைச்சர் கூறினார்.  அதற்கான கமிட்டி அமைத்து அரசாணையும் வெளியிட்டது.  2 முறை கமிட்டி கூட்டப்பட்டது.  அதற்கு  பின்  கடந்த 2 ஆண்டுகளாக கமிட்டி எதுவும் கூட்டப்படவில்லை.  

ஒப்பந்தமும் அமுலாகவில்லை

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்டில் முடிவடைந்தது.  2023  செப்டம்பரில் புதிய ஊதிய ஒப்பந்தம் உருவாக்கி யிருக்க வேண்டும்.  பலகட்ட போராட்டங்களுக்கு பின்பு 2025 மே மாதத்தில்தான் ஒப்பந்தம் இறுதிப் படுத்தப்பட்டது.  ஒப்பந்தம் காலதாம தம் ஆனதற்கு அரசே முழு பொறுப்பு.  ஆனால்,  தாமதமாக ஒப்பந்தம் போட்ட அரசு, 12 மாதகாலத்திற்கு எவ்வித அரியர்சும் இல்லை என்று கூறியது. இத னால் தொழிலாளர்களுக்கு இழப்பு ரூ. 500 கோடி.  சிஐடியு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாத தற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.  8 மாத நிலுவைத்தொகை மட்டும் வழங்குவதாக ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்பட்டது.  ஒப்பந்த அடிப்படையில் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கூட இது வரை வழங்கவில்லை.  ஒப்பந்தப்படி பல்வேறுநிலுவைகளும் தொழிலாளிக்கு வழங்க வேண்டியுள்ளது. சட்டம், ஒப்பந்தம் எதையும் அமுல்படுத்தாததால் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஓய்வுபெற்ற 2 லட்சம் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவற்றிற்கு தீர்வுகாண வேண்டும் என்பதே இக்காத்திருப்பு போராட்டத்தில் மிக முக்கிய கோரிக்கை.  இத்துடன் அரசின் தனியார்மய நடவடிக்கை, காண்ட்ராக்ட் அடிப்படையில் தொழிலாளர்கள் நியமனம், வாரிசு வேலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் உள்ளன. நீடிக்கும் போக்கு வரத்து ஊழியர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய நோக்கம்.