tamilnadu

img

130ஆவது சட்டத் திருத்தம் என்ன சாதிக்க விரும்புகிறது - கே.சந்துரு

130ஆவது சட்டத் திருத்தம்  என்ன சாதிக்க விரும்புகிறது - கே.சந்துரு

அரசியல் அமைப்புச் சட்டரீதியாக சற்றும் கற்பனை செய்து கூடப் பார்த்திராத ஒன்றை நிகழ்த்திட, ஒன்றிய ஆட்சி யாளர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் முன்மொ ழிந்த 130ஆவது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதா முயல்கிறது. குற்றவாளிகளென குற்றம் சாட்டுவது; பதவிநீக்கம் செய்வதென்ற அபத்தமான ஒரு சுழலில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர் சளை அது சிக்கவைக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் ஒருபோதும்  உத்தேசித்திராத ஒன்று

1953ஆம் ஆண்டில் புரட்சிக்கு முந்தைய கியூபாவில் பாடிஸ்டா ஆட்சியைத் தூக்கியெறியும் ஒரு முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட பிடல் காஸ்ட்ரோ ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்!’ என்ற உலகப்புகழ்பெற்ற வாக்கி யத்தை முத்தாய்ப்பாகக் கூறினார். எந்தவித விசார ணையும் இன்றி, அல்லது தீர்ப்பு ஏதும் வழங்கப் படாமலே, கைதுகளின் மூலமும், அரசியல் அமைப்புச்சட்ட ரீதியான பதவிகளிலிருந்து அகற்றப் படுவதன் மூலமும், இத்தகைய தாக்குதல்களை எதிர்நோக்க நாம் கற்றுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாகவே தோன்றுகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, எவ்வித கூச்ச மும் இன்றி,  130ஆவது அரசியல் அமைப்புச்சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தினார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களை (பிரதமர் உள்ளிட்டு), முப்பது நாட்களுக்கு மேல் காவலில் வைக்கப்பட்ட ஒரே கார ணத்திற்காக, அவர்களது பதவிகளிலிருந்து தகுதி நீக்கம் செய்வதை நோக்கமாகக் கொண்டது. “ஒரு சட்டத்தில் அனைவருக்குமான ஒழுக்கம் பொதிந்தி ருப்பதில் என்ன தவறு?” என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சர் கிளிப்பிள்ளை போல் ஒப்பித்திருக்கிறார். தற்போதுள்ள நிலவரப்படி, பிரதமர்/முதல்வர் தலைமையில் அமைச்சரவை அமைக்கும் உரிமை, அது நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, மாநில சட்டமன்றங்களாக இருந்தாலும் சரி, இந்த அவைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. தேர்தலுக்குப் பிறகு, சபையில் அதிக ஆதரவாளர்களைக் கொண்ட கட்சிக்கு அமைச்சரவையை அமைப்பதற்கான சிறப்புரிமை உள்ளது. அமைச்சரவை, மக்களவைக்குக் கூட்டாகப் பொறுப்பேற்கும் என்று அரசியல் சட்டப்  பிரிவு 75(3) தெளிவாகக் கூறுகிறது. ஒரு அமைச்சர், ஏற்கெனவே அவையின் உறுப்பினராக இல்லாவிட்டாலும், பதவி யேற்ற ஆறு மாதங்களுக்குள் உறுப்பினராக ஆக வேண்டும் என்று பிரிவு 75 (5) கட்டளையிடுகிறது. அமைச்சரவையில் சேர்க்கப்படும் அமைச்சர்க ளுக்கென தனிப்பட்ட தகுதிகள் அல்லது தகுதியின்மை கள் எதையும் அரசியல் அமைப்புச் சட்டம் பரிந்துரைக்க வில்லை. ஏனெனில், அவையின் உறுப்பினருக்குப் பரிந்துரைக்கப்பட்ட தகுதிநீக்கம் குறித்த விதிகள், எந்தவொரு அமைச்சருக்கும் பொருந்துவதாகும். இன் னும் எளிமையாகச் சொல்வதானால், அவையின் உறுப்பினராக இல்லாமல் எவர் ஒருவரும் அமைச்ச ராக இருக்க முடியாது. அரசியல் அமைப்புச்சட்ட ரீதியாக, இத்தகைய தகுதிநீக்கம் குறித்து (நாடாளுமன்றத்தைப் பொறுத்த வரையில்) பிரிவு 102-உம், (சட்டமன்றத்தைப் பொறுத்த வரையில்) பிரிவு 191-உம் விவரிக்கின்றன. இதன்படி, ஒரு உறுப்பினர் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக் கூடாது; அவர் மனநலம் சரியில்லாதவராக இருக்கக் கூடாது; திவால் நிலையிலிருந்து விடு விக்கப்படாதவராக இருக்கக் கூடாது; அல்லது இந்திய குடிமகனாக இல்லாதவராக இருக்கக் கூடாது என்ற நிபந்தனைகள் உள்ளன. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவுகள் 102(உ) மற்றும் 191 (உ) பிரிவின் கீழ் நாடாளுமன்றம் இயற்றும் ஒரு சட்டத் தின்மூலம் வேறு எந்த தகுதியின்மையையும் பரிந்துரைக்க முடியும். இது மிகவும் விசித்திரமானது. ஏனெனில், இவ்வாறு ஒரு சட்டத்தை முன்வைப்பதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உண்மை யில் உத்தேசிக்கப்படாத எந்த ஒன்றையும் தகுதி யின்மைக்கு ஒரு அடிப்படையாக எடுத்துக் கொள்ள முடியும்.  

எதிர்க்கட்சிகளை மிரட்டும் விளையாட்டு

அரசியல் அமைப்பில் இல்லாத இத்தகைய தந்திரங்களை நாடாளுமன்றத்தால் செய்ய முடியும் என்பதை வேறு சில நாடுகளின் உதாரணத்துடன் விளக்க முடியும். அங்கே இத்தகைய தந்திரங்கள், ஜன நாயக ரீதியான அமைப்புக்குள் ராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வழிவகுத்தன. உதார ணமாக, பாகிஸ்தானில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியபோது, தற்போதுள்ள அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளும் பழைய பதவிப் பிரமா ணத்தை மீண்டும் எடுக்க வேண்டும் என்ற வகையில் அரசியல் அமைப்பு திருத்தப்பட்டது. ராணுவ சட்ட ஆட்சியை புனிதப்படுத்தும்படியான புதிய உறுதிமொழியை ஏற்க மறுத்த ஒரே காரணத்திற்காக, உயர் நீதித்துறையின் பல நீதிபதிகள் இந்தச் செயல்முறையின் மூலம் ஓரங்கட்டப்பட்டனர். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1963ஆம் ஆண்டில் பல்வேறு அரசியல் அமைப்புச்சட்ட ரீதியான பதவிகளை ஏற்பவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட சத்தியப் பிரமாணங்களில் அப்பாவித்தனமான ஒரு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இது நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் எடுக்க வேண்டிய சத்தியப் பிரமாணத்தின் வடிவத்தைப் பரிந்துரைக்கும் அட்டவணை 3 உள்ளிட்டு பொருத்தமான விதிகளைத் திருத்தியது.  16ஆவது அரசியல் அமைப்புச்சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, சத்தியப் பிரமாணம் எடுப்ப வர்கள், அரசியல் அமைப்பிற்கு விசுவாசமாக இருப்ப தைத் தவிர, “இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவோம்” என்றும் கூறினார்கள். இந்தத் திருத்தம், சில தென் இந்திய அரசியல் கட்சிகளை, குறிப்பாக தனி திராவிட நாடு என்று கூறி வந்த திமுகவை, மிரட்டுவதை நோக்க மாகக் கொண்டிருந்தது. இதிலிருந்து பெறப்பட்ட செய்தி மிகத் தெளிவாகவே இருந்தது. எவர் ஒருவரும் புதிய சத்தியப் பிரமாணத்தை எடுக்க வேண்டும் என்றால், அவர் பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிட வேண்டும். எனவே, திமுக தன் தனிநாடு கோ ரிக்கையை அமைதியாகக் கைவிட்டு விட்டு, நாடாளு மன்றத்திலும் சட்டமன்றத்திலும் நுழையக்கூடிய கட்சியாக மாறியது. பிரிவு 102 (உ) மற்றும் 191 (உ) ஆகியவற்றின் கீழ் உள்ள விதிமுறையைப் பயன்படுத்தி, நாடாளு மன்றம் தகுதியிழப்பிற்காக மேலும் விரிவாகப் பரிந்து ரைக்க முடியும். இதற்கிடையே 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு, சபை உறுப்பினர்களின் தகுதியிழப்பு குறித்து விவாதிக்கிறது. பிரிவு 8(1), இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள குற்றங் கள் முதல் வரதட்சணை தடுப்புச் சட்டம் வரையிலான பல்வேறு சட்டவிதிகளின் கீழ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவதை கையாண்டது. பிரிவு 8(2) குறிப்பிடுகையில், ஒருவர் ஆறுமாத காலத்திற்குத் தண்டிக்கப்பட்டால், அந்த நபர் தகுதிநீக்கம் செய்யப்படுவார் என்றும், அவர் சிறை யிலிருந்து விடுதலையான பிறகு, அந்தத் தகுதிநீக்கம் மேலும் ஆறு ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் குறிப்பிடுகிறது. பிரிவு 9 முதல் 10(அ) வரையிலான பிற விதிகள் தேர்தலில் ஊழல் நடைமுறைகளால் எழும் இதர தகுதிநீக்க வழிமுறைகள் பற்றிப் பேசுகின்றன.

லில்லி தாமஸின் பொது நல வழக்கு

உச்சநீதிமன்றம் 2013இல், லில்லி தாமஸ் வழக்கில் இவ்வாறு குறிப்பிட்டது: “மக்கள் பிரதி நிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(4) அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டது.”

இந்த முடிவின் முக்கியத்துவம்: நாடாளுமன்றம்  அல்லது மாநில சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை தகுதிநீக்கம் செய்வது குறித்து நாடாளு மன்றம் ஒரு சட்டத்தை இயற்ற விரும்பினாலும், அத்த கைய சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்தால் பரிந்து ரைக்கப்பட்ட வரம்புகளைத் தாண்டிச் செல்ல முடியாது என்பது தான்.

ஜாமீன் கிடைக்காவிட்டால்,  ரிமாண்ட் நீடிக்கப்பட்டால்...

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள 130ஆவது திருத்த மசோதாவின் சாரம்: எந்தவொரு காரணத்தி னாலும் ஒரு நபருக்கு ஜாமீன் கிடைக்காமல், ரிமாண்ட் நீதிபதி அவரது காவலை மேலும் நீடிப்பாரேயானால், அந்த நபர் தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். இந்த முப்பது நாள் சிறைவாசத்தின் பின்னணி யில் உள்ள தர்க்கம் நியாயமற்ற ஒன்றாகவே உள்ளது. குறைந்தபட்சம் போலீசார் விசாரணை நடத்தி, நீதிபதியை வைத்து விசாரணை நடத்தி, அந்த நபரை  குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே, சபை உறுப்பினர் ஒருவ ரின் தகுதியிழப்பு பற்றிய கேள்வியே எழுகிறது.

சட்ட ஆணையத்தின் நிராகரிப்பும் போலீசாருக்கு வழங்கும் அதிகாரமும்

நீதிபதி ஏ.பி. ஷா தலைமையிலான சட்ட ஆணையம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் கட்டத்திலேயே தகுதிநீக்கம் செய்யலாம் என்ற முன்மொழிவை முற்றிலுமாக நிராகரித்தது. ஒரு நபரை வெறுமனே தகுதிநீக்கம் செய்வது இயற்கை நியதியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று அது கூறியது. ஆனால், இப்போது முன்மொழியப்பட்டுள்ள மசோதா, ஒரு அமைச்சரை தகுதிநீக்கம் செய்யும் அதிகாரத்தை ஒரு போலீஸ்காரருக்கு வழங்க முற்படு வதன் மூலம், மேற்குறித்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது.

உண்மையான நோக்கம்தான் என்ன?

ஆளும் கட்சியின் நேர்மையை நிலைநாட்டும் வகையில், இந்தப் புதிய மசோதா பிரதமர் பதவி யையும் பொறுப்பேற்க வைக்கிறது என்று கூறிக்கொள்கிறார்கள். இது வெறும் கண்துடைப்பு அன்றி வேறல்ல என்பது வெளிப்படை. சிபிஐ, அம லாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மீது பிரதமருக்கு முழு அதிகாரம் இருக்கும் நிலையில், பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக, இந்த அரசு முகமைகள் எப்போதாவது வழக்குப் பதிவு செய்யும்  என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாத்தியமா னதா?  மேலும், துரதிர்ஷ்டவசமாக, இந்திய அரசியலில், குடியரசுத் தலைவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்ற அதிகாரத்தைப் பெற்றவராகத்தான் இருக்கிறார் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இத்தகைய நிலையில், (பிரதமரின் தலைமையிலான) அமைச்ச ரவையின் ஆலோசனையின் பேரில் வழக்குத் தொடர அனுமதி வழங்க குடியரசுத் தலைவருக்கு ஏதேனும் பயனுள்ள அதிகாரம் இருக்கும் என்று எதிர்பார்ப்ப தும் நடைமுறை சாத்தியமற்ற ஒன்றே ஆகும். அவ்வாறெனில், இந்தச் சட்டத்திருத்தத்திற்கான யோசனையின் மூலம் ஆளும் கட்சியின் உண்மை யான நோக்கம் என்னவாக உள்ளது? இங்கே சாத்தி யமான ஓர் எதிர்பார்ப்பு நிலவுகிறது: மிக நீண்ட காலமாகவே, இந்த ஆட்சி கேசவானந்த பாரதி வழக்கின் மீதான முடிவில் சிக்கிக் கொண்டுள்ளது. (அந்த முடிவு அடிப்படை கட்டமைப்புக் கோட்பாட்டை 7க்கு 6 என்ற மிக மெல்லிய பெரும்பான்மையின் மூலம் அறிமுகப்படுத்தியது.) இந்த ஆட்சி, அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய விரும்புகிறது என்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன. ஒருவேளை, இத்தகைய ஒரு திருத்த மசோதா உச்ச நீதிமன்றத்தை எட்டுமானால், கடந்த பல தசாப்தங்களிலேயே முதன்முறையாக, ‘நாடாளுமன்ற ஜனநாயகம்’ என்பது அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியா என்ற கேள்வியை நீதிமன்றத்தின் முன் எடுத்து வீசுவதற்கான துணிச்சல் இந்த அரசுக்கு கிடைக்கக் கூடும். இவ்வாறு அடிப்படைக் கட்டமைப்பு கோட் பாட்டையே சவால் செய்யும் நோக்கத்துடன், ஜனநாயக நிறுவனங்களை கைப்பற்றும் ஒரு பெரிய அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த மசோதா இருக்கலாம்.

வரலாற்றின் தீர்ப்பை எதிர்நோக்கி...

960களில் மொரார்ஜி தேசாய் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட ஜனதா அரசு ஆட்சிக்கு  வந்தபோது, ஜார்ஜ் பெர்னாண்டஸை தொழில்துறை அமைச்சராக நியமிக்க கோரப்பட்டபோது, அவர் மீது சுமத்தப்பட்டிருந்த பரோடா டைனமைட் வழக்கு நிலுவையில் உள்ளதன் அடிப்படையில் ஆட்சேபணை எழுப்பப்பட்டது. கடுமையானதொரு குற்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவரை அமைச்சரவையில் சேர்ப்பதை கேள்விக்குள்ளாக்கி நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்டன. தி இந்து நாளிதழில் சி.ஜி.கே. ரெட்டி ‘கவலைக்குதவாத சட்டத்தின் ஆட்சி’ என்று  தலையங்கம் எழுதினார். இத்தகைய கடிதங்களை  எழுதியவர்களை விமர்சித்த ரெட்டி, நெருக்கடி நிலை யின்போது, ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, சட்டத்தின் ஆட்சி தற்கா லிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, இவர்களும் இவர்களது பேனாக்களும் எங்கே போயிருந்தன என்று கேள்வி எழுப்பினார்.

மிகவும் அபாயகரமான 130ஆவது அரசியல மைப்புச் சட்டத்திருத்த  மசோதா, என்றாவது ஒருநாள் சட்டமாக மாறினால், அதன் பிடிவாதத்திற்கு இரையா கக் கூடியவர்களை வரலாறுதான் விடுவிக்க வேண்டும். ஏனெனில், நீதிமன்றமோ அல்லது அரசியல் அமைப்புச் சட்டமோ அதைச் செய்ய முடியுமா என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது.