tamilnadu

இஸ்ரேலை மட்டுமல்ல மதவெறி பிடித்த மோடி அரசையும் எதிர்ப்போம் - செந்திலதிபன்

சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப்படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடனான இந்திய அரசின் அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் கோரி புதனன்று (அக்.8) சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்தில் தலைவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:

“இஸ்ரேலை மட்டுமல்ல - மதவெறி பிடித்த மோடி அரசையும் எதிர்ப்போம்!”

 ஐரோப்பா கண்டம் முழுவதும் காசா இனப்படுகொலைக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்த னர். இதன் தாக்கத்தால் பல்வேறு நாடுகள் ஐ.நா. சபையில் நேதன்யாகு பேசும்போது வெளிநடப்பு செய்தன. காசா மண்ணைவிட்டு இஸ்ரேல் ராணுவம் வெளியேறினால்தான் அங்கு அமைதி திரும்பும். பாலஸ்தீனத்தை இந்தியா அங்கீகரித்தே வந்துள்ளது. மதவெறி பிடித்த இஸ்ரேலுக்கு இந்தியா நேரடியாகத் துணை போகிறது. கனடா, ஆஸ்திரேலியா  போன்ற நாடுகள் தடைவிதித்துள்ள இஸ்ரேல் நாட்டு நிதியமைச்சர் தில்லிக்கு வந்து ஒப்பந்தம்  போடுகிறார். இஸ்ரேலை மட்டுமல்ல, ஒன்றிய அரசையும் எதிர்த்துப் போராடுவோம்.

 “ஆயுத வியாபாரிகளின் பரிசோதனைக் கூடமாக மாறிய பாலஸ்தீனம்!”  

ஏகாதிபத்திய நாடுகளின் ஆயுத வியாபாரிகள் போரை நிறுத்தாமல் நடக்கச் சதி செய்கின்றனர். உலக ஏகாதிபத்தியம் கடும் நெருக்கடியில் உள்ளது. அதற்காக இரண்டு இடங்களில் இரண்டு ஆண்டுகளைக் கடந்து போர் நடத்திக் கொண்டிருக்கின்றன.  இஸ்ரேல் துணையுடன் ஈரானை அழிக்கவும் அமெரிக்கா திட்டமிடுகிறது. தற்போது, போர் நிறுத்தம் என்ற பெயரில் பாலஸ்தீனத்தில் பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா முயற்சிக்கிறது. ஒன்றிய அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவாக, கட்டுமானத் தொழிலாளர்களை அனுப்புகிறது. தொழிலாளிகளை மரணத்தின் பிடியில் தள்ளுகிறது. போர் ஆயுதங்களை மறைமுகமாக ஏற்றுமதி செய்கிறது. ஆயுத வியாபாரிகளின் பரிசோதனைக் கூடமாக நடக்கும் பாலஸ்தீன போரை நிறுத்தப் பொதுச் சமூகம் குரல் எழுப்ப வேண்டும்.  

“போரைத் தூண்டி சமாதானம் செய்கிறேன் என்று நாடகமாடும் டிரம்ப்!”  

உலகில் எங்கு போர் நடந்தாலும், அமைதி குலைந்தாலும் அதற்குக் காரணம் அமெரிக்கா. குறிப்பாக, டிரம்ப் பதவியேற்ற பிறகு உலக நாடுகள் தான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று செயல்படுகிறார். தனக்குத்தானே நோபல் பரிசு வேண்டும் என்று கேட்கிறார். போரைத் தூண்டிவிட்டு சமாதானம் செய்கிறேன் என்று நாடகம் நடத்துகிறார். மற்றொரு புறம் வர்த்தகப் போர் நடத்துகிறார். இவற்றையெல்லாம் நிறுத்தினால்தான்      உலக நாடுகளில் அமைதி உருவாகும்.