கோவை, திருப்பூர் மாவட்ட த்தில் விசைத்தறி நெசவு கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் விசைத்தறியாளர் கள் கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்ற னர். அதே சமயம் விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் கூலி உயர்வு வழங்க முன்வராமல் இழுத்தடித்து வருகின்ற னர். இந்த இரண்டு வார காலத்தில் இந்த தொழிலை நம்பி உழைத்து வரும் விசைத்தறி தொழிலாளர்கள் இரண்டு லட்சம் பேரின் வாழ்க்கை எப்படி போய்க் கொண்டிருக்கிறது? அவர்களே சொல்கிறார்கள்.....
வாங்கிய கடனை கட்டமுடியவில்லை…
நான் 10 ஆண்டுகளாக விசைத்தறி தார் ஓட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு ரூ.250 கூலி கிடைக்கும். வாரம் முழு வதும் வேலை செய்தால் ரூ.1500 கிடைக் கும். கணவர் கூலி வேலைக்கு செல் கிறார். இரண்டு பேர் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். கடந்த 9ஆம் தேதி முதல் விசைத்தறி வேலை நிறுத்தம் நடப்பதால் இரண்டு வாரங்களாக வேலை இல்லை. வாரந் தோறும் குழு கடன் கட்ட வேண்டும். இப்போது வேலை இல்லாததால் அந்த கடனைக் கட்ட முடியவில்லை. வேலை நிறுத்தம் தொடர்ந்தால் எங்களுக்கு கஷ்டம்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை என மங்கலம் நீலி பகுதி யைச் சேர்ந்த கலைமணி வேதனை தெரிவித்தார்.
விசைத்தறியை ஓட்டுவதை தவிர வேற தெரியாது
முப்பது ஆண்டுகளாக விசைத்தறி தார் ஓட்டும் தொழிலாளியாக வேலை செய்து வரும் கே.வளர்மதி கூறுகை யில், வயதான அப்பா உடன் வாழ்ந்து வருகிறேன். அவரையும் கவனித்துக் கொண்டு தான் வேலைக்கு சென்று வருகிறேன். எனக்கு வாரம் ரூ.1,500 கிடைக்கும். ஆனால் வாரந்தோறும் மாத்திரை வாங்கவே ரூ.1000 தேவை. வேலை செய்து கொண்டிருக்கும் போதே சம்பளம் போதாமல் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். இப்போது இரண்டு வாரமாக வேலை நிறுத்தம் காரணமாக வேலை இல்லாத நிலையில் ரொம்பவும் கஷ்டமாக இருக் கிறது. தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். 11 வயதிலிருந்து வேலை செய்யும் நிலை யில் எனக்கு விசைத்தறி தார் ஓட்டுவதை விட்டால் வேறு வேலையும் தெரியாது. வேலையில்லாமல் இதே நிலை நீடிக்கு மானால் நாங்கள் தற்கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என குமுறினார்.
குழந்தைகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது
20 வயதில் இருந்து, கடந்த 22 வருட மாக விசைத்தறி வேலை செய்து வரும் சிவக்குமார், இரண்டு வாரம் வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில் எனக்கு வேலை இல்லை, வருமானமும் இல்லை. எனது மனைவி கடந்த சில ஆண்டுகளாக பனியன் கம்பெனிக்கு பேக்கிங் வேலைக்குச் சென்று வரு கிறார். ஆனால் நூல் விலை பிரச்சனை யினால் அவருக்கும் கம்பெனியில் தொடர்ச்சியாக வேலை இல்லை. ஏற்கெனவே பொங்கல் பண்டிகை சமயத்தில் பனியன் கம்பெனியில் விடு முறை விட்டதுடன், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடந்ததால் தொடர்ந்து அவருக்கும் வேலை இல்லை. எனக்கும் வருமானம் இல்லாமல், எனது மனைவிக்கும் வேலை குறைந்து இருப்பதால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அடுத்த மாதம் எப்படி வாடகை கொடு க்கப் போகிறோம் என்று தெரியவில்லை. 9ஆம் வகுப்பு படிக்கும் எனது மகனு க்கும் பள்ளிக்கூடம் விடுமுறை என்ப தால் படிப்பு பாதிக்கிறது. டியூசனுக்கு அனுப்பலாம் என்றால் அதற்கும் பணம் இல்லை என்கிறார்.
ஏழு, எட்டு ஆண்டாக கூலி உயர்வு இல்ல…
மங்கலம் நீலி பிரிவைச் சேர்ந்த இப்ராஹிம் பேசுகையில், நான் கடந்த 25 ஆண்டுகளாக தறி வேலை செய்து வருகிறேன். 14 தறிகள் ஓட்டுகிறேன். என் வயதுக்கு 14 தறிகளை எட்டு மணி நேரம் ஓட்டினால் உடல் மிகவும் சோர்வ டைந்து விடுகிறது. 10 மணி நேரத்துக்கு மேல் ஓய்வெடுத்தால்தான் அடுத்து வேலை செய்ய முடியும். 25 ஆண்டு களுக்கு முன்பு வாரம் ரூ.300 கூலி கிடை க்கும். ஆனால் அதில் எல்லா செலவும் போக பத்து, இருபது ரூபாய் மிச்சம் பிடிக்க முடியும். ஆனால் இப்போது வாரம் ரூ.2000 சம்பளம் வாங்கினாலும் போதாமல், கூடுதலாக வெளியே ரூ.500 கடன் வாங்க வேண்டியிருக்கிறது. 55 வயதாகியும் இன்னும் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறேன். விசைத்தறி வேலை நிறுத்தம் நடக்கும் நிலையில் வருமானம் இல்லா மல் தெரிந்தவர்கள், உறவினர்கள் உத வியில் சமாளித்துக் கொண்டிருக்கி றோம். கடன் கொடுப்பதற்கு யாரும் இல்லை. தறி உரிமையாளர்களிடம் கேட்டாலும் ஒரு முறை ரூ.500 கொடுப் பார்கள். அதற்கு மேல் அவர்களுக்கும் வழியில்லை என்கிறார்கள். இந்நிலை யில் மாற்றம் வேண்டும். சங்கம் கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூப்பிடு வார்கள். நானும் போய் கலந்து கொள் கிறேன். விசைத்தறி தொழிலாளர் களுக்கு கூலி உயர்வு வேண்டும். கடந்த ஏழெட்டு ஆண்டாக கூலி உயர்வு இல்லா மல் எப்படி வாழ்வது? என்கிறார்.
கேள்வி கேட்கும் கடன் கொடுத்தவர்கள்…
தறி ஓட்டுவோர் வாழ்க்கை தடுமாற்ற மாகத்தான் இருக்கிறது என அவிநாசி செட்டிபாளையத்தை சேர்ந்த பட்டான் வேதனையுடன் பேச்சை தொடங்குகிறார். ஒவ்வொருவருக்கும் இந்த 15 நாள் சமாளிக்க மட்டும் ரூ.5000 வரை கடன் வாங்கி யிருக்கிறோம். மூன்று குழுக் கடன் வாங்கியிருக்கிறோம். குழு கடன் கட்ட முடியாமல் ரொம்பவும் சிரமம். ஆனால் எல்லோருக்கும் கிடைக்காது. விசைத் தறி வேலை இல்லாமல் தொடர்ந்தால் மிகவும் சிரமம்தான் என்கிறார்.
சோத்துக்கும் சிரமம் தான்….
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவர் கூறுகையில், ஸ்டிரைக் ஆயிருச்சுன்னு அட்வான்ஸ் வாங்கிய ரூ.1லட்சம், 3 குழுக் கடன், பஜாஜ் கடன் என வாங்கிய கடனை கட்ட சிரமமாகத்தான் இருக்கிறது. அத னால்தான் ஒரு நாள் லீவு போட்டால் குழுக்கு கடன் கட்டணும் என லீவு போட முடியாது. குழுவுக்கு ரூ.2500 வீதம் நான்கு வாரத்துக்கு 10 ஆயிரம் பைன் போடுவார்கள். இரண்டு வாரத்துக்கு கட்டினால் ரூ.500, ரூ.1000 என வட்டி போடுவார்கள். இல்லாவிட்டால் அதி கம்தான். சோத்துக்கு வழியில்லாமல் எல்லாரும் கூப்பன் அரிசியை வாங்கிப் போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். அதுதான் சமயத்துக்கு உதவி பண்ணுகிறது. தறி வேலைக்குப் போக முடியாத நிலையில் கிராம சக்தி என்ற குழு ஒருவருக்கு மூன்று மாதம் கட்டாத தற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.30 ஆயிரம் வட்டி போட்டிருக்கிறார்கள். எப்படி சமாளிக்கிறது என தெரியவில்லை என்று குமுறுகிறார். செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் கூறுகையில், எங்கள் ஊரில் இருந்து தறிக்கு எட்டு ஒன்பது பேர் போவோம். கடந்த 15 நாட்களாக வேலை நிறுத்தம் காரண மாக என்ன செய்வதென்று தெரிய வில்லை. ரேசன் அரிசி வாங்கி சமாளிக்கிறோம். குழு கடன் தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். வாரம் ரூ.600, வாரம் ரூ.1200 என குழு கடன் கட்ட வேண்டும். மகளிர் குழுவும், வெளியில் இருந்து இரண்டு குழுவும் என கடன் வாங்கி இருக்கிறோம். அரையும், குறையுமாக கிடைக்கும் வேலைக்குச் சென்று சமாளிக் கிறோம். குழந்தைகளுக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றார்.
என்ன பண்றதுனு தெரியலை.
கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஜோதிமணி என்பவர் கூறுகையில், நானும் எனது கணவரும் 10 வருட மாக தறிக்குப் போகிறோம். 20 தறி ஓட்டுகிறோம். இரண்டு பேருக்கும் சேர்த்து வாரம் ரூ.4500, ரூ.5000 கிடை க்கும். 15 நாளாக தறி ஓடலை. கஷ்டமாகத்தான் இருக்கிறது. நான்கு குழு கடன் இருக்கிறது. பசங்க பள்ளிக்கூடம், காலேஜ் செலவு இருக்குது. சாப்பாட்டு செலவு எல்லாம் சிரமமாகத்தான் இருக் கிறது. குடும்பம் நடத்துவதற்கு வீட்டுச் செலவுக்கு வாரம் ரூ.2000 குறைந்தது வேண்டும். தனியார் குழு கடன் கட்ட வேண்டியிருக்கு. குழு கடன் ஒரு வாரம் கட்டாவிட்டால் ரூ.100, ரூ.200 என அபராதம் போடுவார்கள். எனவே எதாவது செய்து கட்டித்தான் ஆகனும். 5 ரூபாய் வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருக்கிறோம். சிரமமாகத்தான் இருக்கிறது என்று பரிதவித்தார். இதேபோல், துலுக்கமுத்தூரைச் சேர்ந்த மாறன் கூறுகையில், 13 நாள் தறி நின்னுபோச்சு, கட்டட வேலை க்குப் போய்க் கொண்டிருக்கிறேன். கடனை சமாளிக்கத்தான் மண்ணு வளிக்கிறேன். கடன் நிறைய இருக் கிறது. வீட்டுக் கடன், சீட்டு கடன் இருக்கிறது. ஊர்ப்பட்ட நெருக்கடி இருக்கிறது. கடன் கட்டலைன்னா விட மாட்டாங்க. தறி வேலைக்கு போகிற வர்கள், இப்போது வெளி வேலைக் குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் எனக் கலங்கினார்.
நிலைமை இன்னும் மோசமடையும்
வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த பண்ணாரி என்பவர் கூறுகை யில், எங்கள் ஊரில் 15, 20 பேர் இருக்கிறோம். வேலை இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறோம். பிள்ளைக்கு கல்யாணம் முடிக்க வட்டிக்கு வாங்கியது, மூன்று குழுக் கடன் என ரொம்ப கஷ்டம்தான். வட்டி மாசம் ரூ.4000 இன்னொரு பக்கம் மாசம் ரூ.8000 வட்டி என கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். வேலை இல்லாமல் எப்படி இதை கட்டுவது, எப்படி சாப்பிடுவது. ரேஷன் அரிசி வாங்கி பயன்படுத்து கிறோம் என்று கவலை தோய்ந்த முகத்துடன் கூறினார். திருப்பூர், மங்கலம், அவிநாசி, பல்லடம், சோமனூர் என எல்லா பகுதிகளிலும் விசைத்தறி தொழி லாளர்களின் நிலைமை ஒரே மாதிரி தான் இருக்கிறது. வேலை இருந்தா லும் பற்றாக்குறையான வருமானம் தான். ஏற்கெனவே கொடுக்கும் ஊதி யம் பற்றாக்குறையான நிலையில் குழுக் கடன் எனப்படும் மைக்ரோ பைனான்ஸ் நுண் கடன் வாங்கித் தான் பெரும்பான்மையான தொழி லாளர்கள் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். இதில் கடந்த 14 நாட்கள் வேலை நிறுத்தத்தில் வேலை இல்லா மல், வருமானம் இல்லாமல் பலர் வீடு களில் முடங்கி இருக்கும் நிலை. சிலர் தோட்ட வேலை, கட்டட வேலை, சுமைப்பணி என அன்றாட கூலி வேலைக்குப் போகின்றனர். அந்த வேலையும் சீராக இல்லை. கடன் வலையில் சிக்காத தொழிலாளி யாருமே இல்லை. இவ்வாறு இரண்டு புறமும் அடி விழும் மத்தாளம் போல சிக்கி இருக்கின்றனர். ரேசன் அரிசி பட்டினிச் சாவை தடுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் விசைத்தறி வேலைநிறுத்தத்துக்குத் தீர்வு ஏற்படாவிட்டால் வரக்கூடிய நாட்களில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் கடினமான சூழ்நிலைக்கு தள்ளப்படும்.
வாழ்வாதாரம் காக்க அரசு தலையிட வேண்டும்
எனவே இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலை யிட வேண்டியது அவசர அவசிய மாகும். விசைத்தறி ஜவுளி வியாபாரி களை, அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்குவதற்கு உரிய நட வடிக்கையை அரசு எடுக்கவேண்டும். அதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்ட கிராமப்புற உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரம் காக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்.