விஜய்யின் 10 நிமிட பேச்சு பேரிழப்பை உண்டாக்கியது!
செந்தில் பாலாஜி விளக்கம் கரூர், அக். 2 - கரூரில் நடந்த விபத்துக்கு தவெக தலைவர் விஜய்யின் அலட்சியமே காரணம் என முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். புதன்கிழமை கரூர் திமுக அலுவலகத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “செப் 27ஆம் தேதி நடந்த சம்பவம் துயரமானது. 41 பேர் உயிரிழந்துள்ளனர். 110 பேர் காயமடைந்த நிலையில் 108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்றார். முக்கிய குற்றச்சாட்டுகள் தாமதமான வருகை: “மதியம் 12 மணிக்கு வருவதாகக் கூறிய நிலையில், மக்கள் காலை 10 மணி முதலே காத்திருந்தனர். மாலை 4 மணியளவில் 5,000 பேர் குவிந்தனர். குறித்த நேரத்தில் வந்திருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது” என்றார். கட்டுப்பாடற்ற நடவடிக்கை: “காவல்துறை 500 மீட்டருக்கு முன்பே நிறுத்தச் சொல்லியும் கேட்காமல், கேரவனுக்குள் சென்று திரையை போட்டு விளக்கை அணைத்து விட்டார். 19 நிமிடம் மட்டுமே அங்கு இருந்தார், அதில் 10 நிமிடம் பேசினார். இது கட்டுப்பாடற்ற கூட்டம்” என்று செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார். இடம் தேர்வு: “கரூரில் லைட்ஹவுஸ் கார்னரில் 7,000 பேர், உழவர் சந்தையில் 3,000-5,000 பேர் பங்கேற்கலாம். பொதுநிகழ்ச்சிகளுக்கு 11 இடங்கள் உள்ளன. போதுமான இடத்தை தேர்வு செய்வது கட்சியின் பொறுப்பு” என்றார். மேலும் செருப்பு வீச்சு, ஜெனரேட்டர் நிறுத்தப்பட்ட காட்சிகளை எல்இடி திரையில் காட்டி செந்தில்பாலாஜி விளக்கமளித்தார். “தவறுக்கு பொறுப்பேற்காமல் மடைமாற்றம் செய்கின்றனர்” என்று தவெக தரப்பை கண்டித்தார். பாஜக உண்மை கண்டறியும் குழுவை விமர்சித்த அவர், “மணிப்பூர், கும்பமேளா, குஜராத் சம்பவங்களுக்கு சென்றிருக்கலாம்” என்றார்.