துக்கோட்டை ஒன்றியம் இச்சடி அண்ணாநகரில் தீண்டாமை சுவரை உடனே அகற்றுக
புதுக்கோட்டை, செப். 6- புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம், இச்சடி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசித்து வரும் அண்ணாநகரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர், தாங்கள் போட்டுள்ள வீட்டுமனைகள், பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் விற்பனை ஆகவில்லை என பட்டியல் சமூக மக்களின் வசிப்பிடங்களை மறைத்தும், சாலையை மறித்தும் நீண்ட சுவரை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து நேரடியாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் சிபிஐ(ம்) சார்பில் களத்தில் ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டும் சுவர் எழுப்பபட்டிருப்பது தெரியவந்தது. அப்பகுதி மக்கள் தீண்டாமை நோக்கத்தோடு, நாங்கள் வசிக்கும் பகுதி என்பதால், வீட்டுமனை விலை போகவில்லை என்று சொல்லி, ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு சுவர் எழுப்பியுள்ளதாகக் கூறினர். குளங்கள், கோவில்கள் ஆக்கிரமிப்பு அதோடு, பட்டியல் சமூக மக்கள் குளிக்கும் வணணான் குளம், முருகன் கோவில் குளம் உள்ளிட்ட வரத்து வாரிகள் அனைத்தும் வேறு ஒரு தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், காலம்காலமாக பட்டியல் சமூக மக்கள் வழிபட்டுவரும் ஸ்ரீ செந்தில்நாதன் கோவில், இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டு நிதியில் கிராமக் கோவில்கள் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இதனையும் சேர்த்து தனிநபர் சட்ட விரோதமாக லாரி லாரியாக மண்ணை நிரப்பி மூடிவருகிறார். இதனால் அக்கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய செல்லமுடியாமல் மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். இதன் மீது காவல் துறையிலும், வருவாய்த் துறையிலும் புகார் கொடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. களத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், எஸ்.சங்கர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சலோமி, மாவட்டத் தலைவர் சி. அன்புமணவாளன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. லட்சாதிபதி, மாவட்ட துணைத் தலைவர் எம். அசோகன், த.தீ.ஒ.மு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஏ. ரகுமான், தென்றல் கணேசன், கட்சியின் ஒன்றியச் செயலாளர் செந்தில்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கூறுப்பட்டி ராஜா ஆகியோர், மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் உடனடியாக தலையிட்டு இச்சடி அண்ணாநகர் பட்டியல் சமூக மக்களின் குடியிருப்பையும், சாலையையும் மறைத்து கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும். காலம் காலமாக பட்டியல் சமூக மக்களின் பயன்பாட்டில் இருந்த குளங்கள், வரத்து வாரிகள், கோவில் ஆகியவற்றை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் கட்சியின் சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மற்றும் அண்ணாநகர் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தெரிவித்துள்ளார்.