அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமாவளவன் கோரிக்கை
வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம்
சென்னை, ஆக.3 - வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக விரிவான விவாதம் நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், “தமிழகத்தை சனாதனமயமாக்க பாஜக முயன்று வருவதாகவும், இதற்கு தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் உறுதுணையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பாஜக தமிழக கட்சிகளுடன் இணைந்து செயல்பட தொடங்கிய பின்னர் ஆணவ கொலைகள் அதிகரித்திருப்பதாக அவர் கூறினார். கவின் ஆணவ கொலை தொடர்பாக உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். தமிழக அரசு சாதி ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டத்தை இயற்ற வேண்டும். மாநில அரசுக்கு இதற்கான அதிகாரம் உள்ளதாகவும், ஆணவ கொலைகள் தடுப்புச் சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றும் வரை காத்திருக்காமல் மாநில அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார். பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம் 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த 80 லட்சம் பேர் தமிழகத்தில் குடியேறியுள்ளதாகவும், அவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாகவும்” அவர் கூறினார்.
