tamilnadu

img

போராட்டக் களத்தில் புடம்போட்ட அமைப்பாக மிளிரும் மாதர் சங்கம்!

போராட்டக் களத்தில் புடம்போட்ட அமைப்பாக மிளிரும் மாதர் சங்கம்!

1990 களின் முற்பகுதி யில் சிதம்பரம், வாச்சாத்தி வழக்குகள் தமிழகத்தை உலுக்கியவை. அதிகார வர்க்கத்தின் கோரத் தாண்டவங்களை அம்பலப்படுத்திய வழக்குகள் இவை. தமிழகம் முழுவதும் இதுபோன்ற அத்து மீறல்கள் பெருமளவு நடந்த காலகட்டமும் இது.  இவற்றில் பாதிக்கப்பட்டவர்களுடன் களத்தில் நின்று போராடி நீதியும் நிவாரணமும் கிடைக்கச் செய்த அமைப்புதான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். அத்தகைய போராட்டங்கள் மக்களின் மனச்சாட்சியை தட்டியெழுப்பின.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 9 ஆவது மாநில மாநாடு அந்த நூற்றாண்டின் கடைசியில் 1999 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. விடுதலைப் போர்ப்படைத் தளபதி கேப்டன் லட்சுமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத், சமூகப்போராளியான மைதிலி சிவராமன் உள்ளிட்ட தலைவர்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர். பாலினச் சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக போராடிய வீராங்கனைகள் மற்றும் சாதனையாளர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டனர். அந்த 9 ஆவது மாநாடு குறித்து சங்கத்தின் தற்போதைய மாநிலப் பொதுச் செயலாளர் அ.ராதிகா நினைவு கூர்கையில், அந்த மாநாட்டின் மேடையில் தோன்றிய ஒரு முகம், ஆயிரக்கணக்கான பெண்களின் மனதில் தீப்பிழம்பை ஏற்படுத்தியது. — அது சுதந்திரப் போராட்டத்தின் வீராங்கனை கேப்டன் லட்சுமி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் “இந்திய தேசிய  ராணுவத்தின்” (INA) “ஜான்சி ராணி படை”க்கு தலைமை தாங்கியவர் கேப்டன் லட்சுமி. 1999இல் அவர் 80 வயது, உடல் நிலை பலவீனமாக இருந்தது. ஆனால் மாநாட்டில் போராட்டத்  தளபதியாக மேடையில் அவர் அமர்ந்திருந்தார். நாகர்கோவில் மாநாட்டில் அவர் நீண்ட உரை நிகழ்த்தவில்லை. ஆனால் அந்த சிற்றுரை வரலாற்றின் பக்கங்களில் வழிந்தோடிய தியாகத்தை நினைவுபடுத்தியது. அவரது வருகையே பெண்கள் இயக்கத்திற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மாநாட்டில் கலந்து  கொண்ட பிரதிநிதிகள்“சுதந்திரப் போராட்டத் தளபதி யுடன் நாம் இருக்கிறோம். அவர் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்த போராட்டத்தை நாமும் தொடர வேண்டும்” என்ற  உறுதியை ஏற்க வைத்தது. அவர் சொன்ன சில வரிகள், பெண்களின் இதயத்தில் இன்னும் ஒலிக்கின்றன: “பெண்கள் ஒன்றுபட்டால் சமூகத்தை மாற்ற முடியும்; உங்கள் சக்தியை யாரும் தடுக்க முடியாது.” கேப்டன் லட்சுமி தனது மெல்லிய குரலில் அனைவரின் மனங்களிலும் பதிய வைத்த முழக்கம் வர்க்க அடக்குமுறையும், பெண்கள் மீதான பாலின ஒடுக்குமுறையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். அதை எதிர்த்த போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் சமரசமின்றி நடத்திட வேண்டும். அதற்கான நீண்டதொரு திட்டமிடலை இம்மாநாடு செய்திட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். நாகர் கோவில் மாநாட்டில் அவரது பங்கேற்பு,  மூத்த முன்னோடிகளின் தியாகத்தையும், புதிய தலைமுறை யினரின் எதிர்காலப் போராட்டத்தையும் இணைக்கும் பாலமாக இருந்தது. அந்தக் கணத்தில் கேப்டன் லட்சுமி ஒரு முதிய போராட்ட வீராங்கனையாக அல்ல, போராட்ட வீராங்கனைகளின் உயிரோட்டமான வரலாற்றுச் சின்னமாக மாநாட்டில் இருந்தார். அவரது இருப்பு, விடுதலைப்போராட்ட பாரம்பரியத்தையும் பெண் விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியையும் வெளிப்படுத்தியது. “மனிதகுல மேம்பாட்டுக்கான போராட்டங்கள் நிறைவடைவதில்லை; தலைமுறைகள் மாறினாலும் அது தொடரும்” என்றார். கால் நூற்றாண்டுக்குப் பிறகு மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது. 2025 செப்டம்பர் 24 (இன்று) பேரணி பொதுக்கூட்டத்துடன் தொடங்கி 27 வரை இம்மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. மாவட்டம் முழுவதும் கண்கவர் சுவரெழுத்துகள், விளம்பர பதாகைகள், குழித்துறையில் பிரம்மாண்டமான சிற்பம், வரலாற்று கண்காட்சி என அனைவரையும் வியக்க வைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாதர் சங்கத்தின் முதல் தலைமுறை தலைவர்கள் பலரும் மறைந்துவிட்டாலும் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் ஆற்றலும் பெற்ற வீரியம் மிக்க ஒரு புதிய தலைமுறையினர் பல்லாயிரம்பேர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகப் பெண்ணுரிமை இயக்கத்தின் மைல்கல்லாக 17 ஆவது மாநில மாநாடு அமையும் என மாதர் சங்க தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர். - சி.முருகேசன்