விரக்தியில் இருந்து நம்பிக்கைக்கு திரும்பிய கேரள மக்கள் 10 ஆண்டுகளில் சாதித்துக் காட்டிய எல்டிஎப் அரசு!
ஆலப்புழா, மார்ச் 11 - ஆழ்ந்த விரக்தியில் இருந்த கேரள மக்கள், கடந்த பத்தாண்டுகளில் நம்பிக்கை பெற்றனர்; ஐம்பது முதல் நூறு ஆண்டுகளில் முடிக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு கடந்த பத்து ஆண்டுகளில் முடித்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பினராயி விஜயன் மேலும் கூறியிருப்பதாவது: எந்த அரசு ஆட்சி செய்தாலும் இதெல்லாம் செயல்படுத்தப்படுமே என்று சிலர் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் கேரளத்தின் அனுபவத்தில் அப்படி இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு பாழடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் இருந்தன. கேரளத்தில் செயல்படுத்தப்படாத பல திட்டங்களின் பட்டியல் இருந்தது. 2016-க்கு முன்பு கேரளத்தில் பெரிய அளவிலான பேரழிவு கள் ஏற்பட்டன. அனைத்து முக்கிய வளர்ச்சித் திட்டங்களும் முடங்கிப் போன காலம் அது. நாடு இப்படி ஆகிவிட்டதே எனறும், இங்கு எந்த திட்டமும் வராது என்றும் மக்கள் புலம்பினர். ஆனால், 2016-இல் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தது. பின்னர் அந்த சாபக்கேடு சூழல் மாறியது. ஆழ்ந்த விரக்தி யில் இருந்த மக்கள் நம்பிக்கை கொண்டனர். நம் நாட்டில் சாத்தியமற்றது என்று கருதப்பட்ட பெரிய திட்டங்கள் இப்போது செயல்படுத்தப்படுகின்றன. 2016-இல் கேரளத்தில் தேசிய நெடுஞ்சாலை நிஜமாகி விடும் என்று யாராவது நினைத்தார்களா? தேசிய நெடுஞ்சாலை அலுவலகத்தையே மூடிவிட்டு ஊழியர்கள் வெளியேறி விட்டனர். தற்போது தேசிய நெடுஞ்சாலை பணிகள் வேகமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளன. இது எப்படி நிறைவேறியது? கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட இடது ஜனநாயக முன்னணி அரசு, நாட்டிற்கு வளர்ச்சித் திட்டங்கள் அவசியம் என்பதில் போதுமான உறுதிப்பாட்டைக் கொண்டிருந்தது. கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மட்டுமல்ல, கெயில் குழாய் திட்டம் மற்றும் இடமன் மின் பாதை அனைத்தையும் சாத்தியப்படுத்தியது. இன்று, எரிவாயு மற்றும் மின்சாரம் அதன் வழியாக பாய்கிறது. இவை அனைத்தும் சாத்தியமானது எதிரிகள் நாட்டை விட்டு வெளியேறியதால் அல்ல. அவர்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறார்கள். ஒரு அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு திட்டங்களை செயல்படுத்துவதுதான். திட்டங்களை எதிர்ப்பவர்கள் இருப்பார்கள். அந்த எதிரிகளுடன் நிற்பதற்கான அரசாங்கம் இங்கே இல்லை. இந்த விஷயம் எதிரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டபோது, சிலர் எதிர்ப்பை கைவிட்டனர். சிலர் ஒத்துழைத்தனர். எதிர்த்தவர்கள் திட்டங்களை நிறுத்த முடியாதவர்களாக மாறினர். அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அனைத்தும் இன்று சாத்தியமாகி விட்டன. இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.
