tamilnadu

img

இரு சகோதரர்கள் குடும்ப ஒற்றுமைக் கதையின் முன்னோடி சினிமா

அண்ணன் - தம்பி ஒற்றுமையை வலியுறுத்தும் வலிமையான கதையமைப்பொன்றை முயன்றுபார்த்ததில் ஒரு முன்னோடித் திரைப்படமாகவே அறியப்படும் தமிழ் சினிமாதான் கோயமுத்தூர் பரமேஸ்வர் சௌண்ட் பிக்சர்ஸ் தயாரித்த இரு சகோதரர்கள். 1936ல் வெளிவந்த படம் அது. அமெரிக்கத் திரைக்கலைஞர் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய இரண்டாவது தமிழ்ப் படம் இரு சகோதரர்கள். டங்கன் இயக்கிய முதல் படம் சதிலீலாவதி (1934).  எம்.ஜி.ஆருக்கும் சதிலீலாவதிதான் முதல் படம். இந்த இரு சகோதரர்கள் இரண்டாவது படம். அவருக்கு அப்போது ஜி.ராமச்சந்திரா என்பதுதான் பெயர். கே.பி.கேசவன், கே.கே.பெருமாள், டி.எங்.பாலையா, பி.ஜி.வெங்கடேஷ், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.எம்.ராதாபாய், டி.எஸ்.கிருஷ்ணவேணி, எஸ்.என்.கண்ணாமணி முதலானவர்கள் நடித்திருந்தார்கள். மரணப்படுக்கையில் தன் இரு மகன்களையும் அழைத்து மகாதேவர் எனும் பெரியவர் அவர்களுக்குப் புத்தி சொல்கிறார்.

அதன்படி அவர்களின் வாழ்வில் எப்போதும் இணை பிரியாத சகோதரர்களாய் வாழும்படி வேண்டுகிறார். மூத்த சகோதரன் சபாபதியின் மனைவி சரசா பொறாமையும் அகம்பாவ குணமும் கொண்டவள். இளைய சகோதரன் பசுபதியின் மனைவி சாந்தா அமைதியான குணம் படைத்தவள்.  சரசா தனது தீய குணத்தால் சாந்தாவையும் அவளது குழந்தைகளையும் படாதபாடு படுத்துகிறாள். தன் கணவனிடம் சாந்தாவைப் பற்றிப் பொய்ப் புகார்களைக் கூறுகிறாள். சரசாவின் குணத்திற்கேற்ப அவளைத் தீய சிந்தனையில் தூண்டிவிடுகிறாள் குப்பிப்பாட்டி எனும் மூதாட்டி. சாந்தாவின் கணவன் பசுபதி கல்வியறிவில்லாதவன் ஆயினும் இசை ஞானமும் நடிப்புத்திறனும் கொண்டு அவ்வூரில் நடந்துவரும் நாடக சபாவில் சேர்ந்து திறமை காட்டுகிறான். மூத்த சகோதரன் பசுபதி அவ்வூரின் ஜமீந்தாரிடம் மேலாளராகப் பணி செய்கிறான்.  நாடக சபாவுக்காகக் கடன்படும் பசுபதிக்கு நட்டம் ஏற்படுகிறது. கடன் தந்த மார்வாடி அவனது அண்ணன் சபாபதியிடம் முறையிடுகிறான்.

இரு சகோதரர்களுக்குமிடையே முரண்பாடு தோன்ற, பிரச்சனை சொத்துக்களைப் பாகப்பிரிவினை செய்வதில்போய் முடிகிறது.   பசுபதி தன் மனைவி - பிள்ளைகளைப் பிரிந்து சென்னைக்குச் செல்ல நேர்கிறது. வழியில் தன் கைப்பணத்தைப் பறிகொடுக்கிறான். சென்னையில் ஒரு பிச்சைக்காரனைப்போல அலைந்து திரிகிறான். திருட்டுப் பழி சுமக்கிறான். அவன்மீது பழிபோட்ட சாம்பசிவ ஐயர் என்பவர் உண்மைக் குற்றவாளியைப் பிடித்ததும், பசுபதிக்கு இரங்குகிறார். அவனிடமிருக்கும் இசைத்திறனைக் கண்டு வியக்கிறார். வானொலியில் பாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். பசுபதி பிரபலமடைகிறான். நாடகக் கலைஞனாகவும் அவனது கலை வாழ்க்கை ஒளிவீசுகிறது. ஊரில் தனது மனைவிக்குப் பணம் அனுப்புகிறான். அதையும் களவு செய்கிறாள் அண்ணனின் மனைவி. தனியே பிள்ளைகளோடு வாழும் சாந்தாவின் நடத்தையிலும் பழி விழுகிறது. இப்படியே போகிற கதை இறுதியிலும் இறுதியாக இரு சகோதரர்கள் தங்களது முரண்பாடுகளை விடுத்து ஒன்றிணைகிறார்கள். அவர்களது குடும்பங்களும் ஒன்று சேர்கின்றன. தகப்பனின் அறிவுரைப்படி இருவரும் ஒற்றுமையோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள். இப்படியான திருப்பங்கள் நிறைந்த நீண்டதொரு கதையை எழுதியவர் அந்நாளைய சமூகக் கதையாடல்களைத் திறம்படக் கையாளும் சங்ககிரி துரைசாமி சுப்பிரமணிய யோகியார் என்னும் ச.து.சு.யோகி. மிகச் சிறந்த தேசபக்தரான யோகியார் மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க சென்னையில் நடந்த உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றவர். தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பருமான யோகியார் பெரியாருடன் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்றார். விடுதலைப் போராட்டத்தில் ஒன்றரையாண்டுகள் சிறைத் தண்டனையும் பெற்றவர் அவர். திரைப்படங்களுக்குக் கதை, வசனம், பாடல்கள் எழுதியதோடு சில படங்களை இயக்கியுமிருக்கிறார் ச.து.சு.யோகி. யோகியாரின் 14 பாடல்கள் இடம்பெற்ற இப்படத்திற்கு அனந்தராம் - கோபால்சாமி இசையமைத்தனர். குப்பிப் பாட்டி என்கிற கதாபாத்திரம் மிகவும் யதார்த்தமாக அமைய வேண்டும்

என்பதற்காக அலமேலு அம்மாள் என்ற 70 வயது ­மூதாட்டியை நடிக்க வைத்தார் இதன் இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். இந்தப்படத்தில் யோகியாரின் சமூகப் பொறுப்புமிக்க நகைச்சுவைக் காட்சியொன்று அந்நாளில் மிகவும் வியந்து பேசப்பட்டது. அந்தக் காட்சியில் வேலையில்லாதார் மகாநாடு நடக்கிறது. அதற்குத்  தலைமை தாங்கும் பட்டதாரி வாலிபன் ஒருவன் தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்து பேசுகிறான். வேலையில்லாதவர்களுக்கு இலவசச் சாப்பாடு கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும், இரயில்களில் இலவசமாகப் பயணம் செய்ய வழிவகை செய்தல் வேண்டும் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறான். எங்கோ 25 ரூபாய் சம்பளத்திற்குத் தட்டச்சர் வேலை காலியாக இருப்பதாக மகாநாட்டில் தகவல் பரவுகிறது. அதைக் கேட்டமாத்திரத்தில் அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் அந்த வேலையில் சேரக் கிளம்பிவிடுகிறார்கள். மகாநாட்டுப் பந்தல் காலியாகி வெறிச்சோடிவிடுகிறது.  சமூக நடப்பை நையாண்டி செய்யும் இப்படியொரு காட்சி அந்தக் காலத்திலேயே தமிழ் சினிமாவில் இடம்பெற்றிருந்திருக்கிறது என்றால் வியக்காமலிருக்க முடியுமா?

;