tamilnadu

img

மாயா ஆஞ்சலுவின் தனித்துவமிக்க உரிமைக்குரல் - எஸ்.பாலா

மாயா ஆஞ்சலுவின்  “என்றாலும் நான் எழுகிறேன்” கவிதைத் தொகுப்பு ஆர்.சிவக்குமார் அவர்களின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.
இத்தொகுப்பு மாயா ஆஞ்சலுவின் 32 கவிதைகளை தேர்வு செய்து மூன்று தலைப்புகளாக பிரித்து அழகுற வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பகுதி வாழ்க்கையே என்னை தொடு, மென்மையாக அல்ல உட்பட எட்டு கவிதைகளும், இரண்டாவது பகுதி பயணித்தல் என்ற பொருளில் பதினைந்து கவிதைகளுடனும், மூன்றாம் பகுதி “என்றாலும் நான் எழுகிறேன்” என ஒன்பது கவிதைகளுடனும் வந்துள்ளது.
அடிமைத்தனம் தந்த அவலங்களையும் அடக்குமுறைகளையும் உதறி உத்வேகம் மிக்க குரலை எழுப்பியதில் அமெரிக்க கவி மாயா ஆஞ்சலுவின் குரல் தனித்துவமிக்கது.
தனிப்பட்ட வாழ்வு, உறவுகள், சமூகம் உள்ளிட்ட ஒவ்வொரு தளத்திலும் கருப்பின மக்கள் சந்தித்த மனிதாபிமானமற்ற போக்குகளுக்கு எதிரான விடுதலைக் குரல் இவருடையது. 
இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்துள்ள என்றாலும் நான் எழுகிறேன் என்ற கவிதை வரலாற்றின் செவ்விலக்கியத்தில் ஒன்றாகும். 
“கசப்பான, திரிக்கப்பட்ட உங்கள் பொய்களோடு 
வரலாற்றில் என்னை நீங்கள் குறிக்கலாம்; 
புழுதியில் தள்ளி என் மீது நீங்கள் நடக்கலாம் 
என்றாலும், நான் எழுவேன் தூசியைப்போல…
என் தன்னம்பிக்கை உங்களை நிலைகுலைக்கிறதா? 
ஏன் மனவாட்டத்துக்கு ஆட்பட்டுள்ளீர்கள்? பீச்சியடிக்கும் எண்ணெய்க் கிணறுகளை என் கூடத்தில் நான் வைத்திருப்பதைப்போல நான் நடந்துபோவதாலா?
சந்திர சூரியர் போல,

கடலின் ஏற்ற இறக்க நிகழ்வின் உறுதிப்பாட்டோடு, 
நம்பிக்கை துள்ளி உயர எழுவதைப்போல 
இனியும் நான் எழுவேன்.

தாழ்ந்த தலையுடன், கீழ்நோக்கிய கண்களுடன் 
இடிந்துபோய் நான் நிற்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா?
உணர்ச்சிமிக்க அழுகைகளால் பலவீனப்பட்ட 
என் தோள்கள் கண்ணீர்த்துளிகளைப்போல கீழ்நோக்கிச் சரிவதை?

என் இறுமாப்பு உங்களை நோகச் செய்கிறதா? 
அதை அத்தனை கடுமையாக மனம் கொள்ளாதீர்கள். 
என் கொல்லைப் புறத்தில் எனக்குச் சொந்தமான தங்கச் சுரங்கங்கள் தோண்டப்படுவதைப்போல 
நான் சிரிப்பதாலா?

உங்கள் வார்த்தையால் என்னை நீங்கள் சுடலாம், 
உங்கள் கண்களால் என்னை நீங்கள் வெட்டலாம், 
உங்கள் வெறுப்பால் என்னை நீங்கள் கொல்லலாம்,
என்றாலும் நான் எழுவேன் காற்றைப்போல.

என் பாலியல் கவர்ச்சி உங்களை நிலைகுலைக்கிறதா?
என் தொடைகளின் சந்திப்பில் வைரங்களை வைத்திருப்பவள் போல 
நான் நடனமாடுவதைக் கண்டு திகைத்துப் போகிறீர்களா?
வரலாற்றின் அவமானக் குடில்களி லிருந்து நான் எழுகிறேன் 
துயரத்தில் வேர்கொண்ட கடந்த காலத்திலிருந்து 
நான் மீண்டெழுகிறேன் 
நானொரு கருப்புப் பெருங்கடல் 
பாய்ந்து துள்ளும் பரந்தகன்ற பெருங்கடல் 
பொங்கிப் பெருகும் அதன் ஏற்ற இறக்கத்தை 
நிலைகுலையாமல் ஏற்று நடக்கிறேன்.

திகிலும் அச்சமும் தரும் இரவுகளைக் கடந்து மேற்சென்று 
நான் எழுகிறேன்
வியக்கவைக்கும் தெளிவான வைகறையில் 
நான் எழுகிறேன் 
என் மூதாதையர் தந்த பரிசுகளை எடுத்து வருகிறேன் 
அடிமையின் கனவும் நம்பிக்கையும் நான் 
நான் எழுகிறேன் 
நான் எழுகிறேன் 
நான் எழுகிறேன். 
மாயா ஆஞ்சலுவின் ஒட்டுமொத்த கவிதை உலகின் சாராம்சமாக இக்கவிதையை எடுத்துக் கொள்ளலாம்.
இத்தொகுப்பில் உள்ள  இன்னும் சில கவிதைகள் காலத்தால் அழியாதவையாக இருக்கும். 
அதில் ஒன்று, வேலைக்காரப் பெண் ஒருவர்  வரிசையாக ஓய்வின்றி படும்பாட்டை எடுத்துரைத்து இயற்கை அவர்களின் அணைப்பாக இருக்கிறது என்பதை, 
“சூரிய ஒளியே என் மீது சுடர் விடுக
மழையே என் மீது மென்மையாக பொழிக
பனித்துளிகளே என் நெற்றியை மீண்டும் குளிர்வியுங்கள்” என்கிறார்.
இன்னும் ஒரு சுற்று, பயணி, முட்டி மோதி முட்டி மோதி  ஆகிய கவிதைகள் கவனிக்கத்தக்கவை.
தனது கவிதைகளில் காதல், வாழ்வு, உழைப்பு, புறக்கணிப்பு, கடவுள், நினைவிலி மனம் என பல தளத்திலும் பயணித்துள்ளார்.
என்றாலும் நான் எழுகிறேன்
ஆசிரியர் : மாயா ஆஞ்சலு, 
ஆர்.சிவகுமார் (தமிழில்) மொழிபெயர்ப்பு கவிதை 
காலச்சுவடு பதிப்பகம்  / விலை: ரூ.125

;