articles

img

தியாக சீலர், மார்க்சிய சிந்தனையாளர் தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் - யு.கே.சிவஞானம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  நகரத்தில்  அவருக்கு சொந்தமாக 31 சென்ட் நிலம் இருந்தது. இன்றைக்கு சில கோடி ரூபாய் மதிப்புள்ளது அந்த சொத்து. வங்கியில் அவர் பெயருக்கு 42 லட்சத்து 40 ஆயிரத்து 152 ரூபாய் இருப்பு இருந்தது. மருத்துவரான மனைவியின் சேமிப்பு மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் - என சிறிது சிறிதாக சேமிக்கப்பட்ட தொகை அது. தனது முழு சொத்து மற்றும் சேமிப்புத் தொகையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தம் ஆக்கிவிட்டு கடந்த 2011 இல் தமது 102 ஆவது வயதில்  மறைந்தார் தோழர் சி.எஸ். என்று அழைக்கப்படும் சி.எஸ்.சுப்பிரமணியம். அவர் அளித்த இடத்தில் நான்கு கோடி ரூபாய் செல வில் ‘மார்க்சிய மெய்யறிவு கல்வி நிலையம்’ என்ற அரசியல் பயிற்சிக் கூடத்தை நிறுவி அதற்கு, தியாக சீலர் சி.எஸ்.சுப்பிரமணியம் அரங்கம் என்று பெயர் சூட்டி யுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தோழர் சிங்கார வேலர் பெயரில் மிகச்சிறந்த நூலகமும் இவ்வரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. மார்க்சிய தத்துவார்த்தக் கல்வியில் இளைய தலைமுறை தங்களை மேம் படுத்திக் கொள்ள வகுப்பறை, தங்குமிடம் மற்றும் பெரிய கூட்டரங்கு என சிறப்பான முறையில் நான்கு மாடியில் கட்டிடம் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள் ளது சிறப்புக்குரியது.

சென்னை சதி வழக்கு

இந்திய திருநாட்டை அடிமைப்படுத்தி நீண்ட காலம் ஆண்டு வந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கம் 1940 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி செய்தித் தாள்களில் ஒரு பகிரங்க விளம்பர அறிவிப்பை வெளி யிட்டு இருந்தது. “ 100 ரூபாய் இனாம்! இந்திய பாது காப்பு விதிகளின் கீழ் தேடப்பட்டு வரும் கீழ்க்கண்ட நபர்களை கைது செய்வதற்கு உதவும் வகையில் நம்பிக்கையான தகவலை தரும் எந்த ஒரு நபருக்கும் ரயில்வே துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் சென்னை சிஐடி இலாகா 100 ரூபாய் சன்மானம் தரும்”  1.பி. ராமமூர்த்தி  2.எம்.ஆர்.வெங்கட்ராமன் 3.சுரேந்திர மோகன் குமாரமங்கலம் 4.சி.எஸ். சுப்பிர மணியம் என 4 பெயர்களையும் அத்துடன் அவர்களின் பூர்வீகம் முகவரி மற்றும் அங்க அடையாளங்கள் ஆகிய வற்றையும் அந்த விளம்பர அறிவிப்பில் வெளியிட்டி ருந்தார்கள். அதில் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை நுங்கம்பாக் கத்தைச் சேர்ந்தவர்; ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி  சுந்தரமய்யரின் மகன்; வயது 39 லிருந்து 40க்குள்; உயரம் 5 அடி 7 அங்குலம்; ஒல்லியாக இருப்பார்; உருண்டை முகம்; மாநிறம். இந்த நான்கு பேரை உபசரிப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் இறுதியில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.  இந்த நான்கு நபர்களும் அப்படி என்ன குற்றம் செய்து விட்டார்கள்? இந்த நான்கு நபர்களும் மாட்சிமை தங்கிய மகாராணியின் ஆட்சிக்குட்பட்ட இந்திய அரசாங்கத்தை வன்முறை மூலம் தகர்க்க சதி செய்தார் கள்; சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்கள்; சட்டவிரோதமான பிரசுரங்களை வைத்துள்ளார்கள் என்பதே இவர்களின் மீதான பிரதான குற்றச்சாட்டு. சென்னை சதி வழக்கு என்று பிரபலமாக அழைக்கப் பட்ட இவ்வழக்கில் இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டிஷ் அரசு இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தது.

இந்த வழக்கில் தோழர் சி. எஸ். சுப்பிரமணியம் உட்பட மேற்கண்ட தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 18 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்ற னர். 1942 -இல் விடுதலை பெற்றனர்.

லண்டனில் கிடைத்த  மார்க்சிய ஒளி

தோழர் சி. எஸ். என்று அழைக்கப்பட்டு வந்த சி. எஸ்.  சுப்பிரமணியம் 1910 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி  மயிலாடுதுறைக்கு அருகில் இருந்த கோமல் என்ற சிற்றூரில் பிறந்தவர். அன்றைக்கு மிகப்பெரும் பதவி யாக கருதப்பட்ட மாவட்ட கல்வி அலுவலராக பணி யாற்றிய  சுந்தரம் ஐயர் என்பாரது இரண்டாவது மகன் இவர். அவரது தந்தைக்கு கல்வித்துறை உயர் அதிகாரி என்ற முறையில் மாறுதல்கள் ஏற்பட்டு பல ஊர்களுக்கு சென்றார். எனவே சி. எஸ். அவர்கள் வேலூர் ஊரிஸ் பள்ளியில் படித்து பின்னர் சென்னை மாநிலக் கல்லூரி யில் மேற்படிப்பு என படித்த பின்பு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம். ஏ.  முடித்து ஐ. சி. எஸ் படிக்கத் தொடங்கினார். அங்கு மாணவர் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார் .மாணவர் இயக்கம் பல சாளரங்களை திறந்து விட்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று பிரபல நடிகர் சார்லி சாப்ளின் அங்கம் வகித்த பேபியன் கிளப். அதுதான் சி.எஸ்.க்கு மார்க்சியத்தை அறிமுகம் செய்தது. மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்ட சி .எஸ்., பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். தினசரி கல்லூரி முடிந்த பின்பு கட்சி அலுவலகத்திற்கு செல்லத் துவங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ரஜினி பாமிதத் ஆகியோரோடு நெருங்கிப் பழகினார். லண்டனில் இயங்கிய பிரபலமான அக்டோபர் கிளப்பில் சி.எஸ். இணைந்தார். லண்டன் சென்ற மகன் ஐ. சி. எஸ் முடித்து திரும்பு வான் என்ற பெற்றோரின் நம்பிக்கைக்கு மாறாக ஓர் கம்யூனிஸ்ட் ஆக சி.எஸ்.சுப்பிரமணியம் திரும்பி வந்தார்.

முதல் செயலாளர்

சென்னை திரும்பிய சி.எஸ். அவர்கள் துவக்கத்தில் ஒரு வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில்  செயல்பட்டார். அதே வேளையில் அவரது சிந்தனைக் குள் புகுந்த மார்க்சியம் அவரை உழைக்கும் வர்க்கத்தி ற்கு உழைத்திட தூண்டியது. சென்னை பிராட்வேயில் உள்ள கதவு எண்  2/65 என்ற கட்டிடத்தில் ஸ்ட்ரைக் ஆபிஸ் என்று அழைக்கப்பட்ட தொழிலாளர் பாது காப்புக் கழகம் இயங்கி வந்தது. அங்கிருந்த தன்னலம் கருதாத தொழிற்சங்க தலைவர்களுடன் இணைந்து  பணியாற்றினார். சென்னையில் பல்வேறு தொழில்க ளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களது பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல அந்த ஸ்ட்ரைக் ஆபீசுக்கு வந்தனர். சி.எஸ்.சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்கள் பிரச்சனைகளை கேட்டு தலையீடு செய்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில்தோழர் எஸ். வி. காட்டே அவர்களது வழிகாட்டுதலில் தமிழ்நாட்டில் 1936 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ஏற்படுத்தப்பட்டது. தோழர்கள் ப. ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, கே. முருகேசன். சி.பி. இளங்கோ, டி. ஆர். சுப்பிரமணியம், திருத்துறைப்பூண்டி முருகேசன் ஆகியோரைக் கொண்ட கட்சிக்கிளை உருவாக்கப் பட்டது. அந்த முதல் கிளையின் முதல் செயலாளர் ஆக  தோழர் சி. எஸ். அவர்கள் பொறுப்பேற்றார். 1943- 44 காலகட்டத்தில் வங்கத்தில் கடுமையான பஞ்சம் நிலவிய போது சென்னையில் கட்சியின் சார்பில் வங்க  நிதி அளிப்பதற்காக கடும் முயற்சி மேற் கொள்ளப்பட்டது. பஞ்சத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை பதுக்கி முதலாளிகள் கொள்ளை லாபம் பார்த்தனர். பதுக்கப்பட்ட இடங்களில் உள்ள பொருட்களை வெளிக்கொண்டு வந்து கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஊழியர்கள் மக்களுக்கு விநியோகம் செய்தனர். இவ்விரண்டு பணிகளிலும் தோழர் சி. எஸ். சுப்பிரமணியம் பெரும் பங்கு வகித்தார்.

ஜனசக்தி இதழ் துவங்கப்பட்டதில் சி. எஸ். அவர்க ளுக்கு பெரும் பங்கு இருந்தது. அதன் ஆசிரியர் குழுவில் பணியாற்றியதுடன் அச்சக மேலாண்மை போன்ற பொறுப்புகளையும் சி. எஸ். ஏற்றிருந்தார். சி.எஸ் அவர்களது சிறப்புமிக்க பணிகளில் ஒன்று, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குறித்த ‘ஃபர்ஸ்ட் கம்யூனிஸ்ட் இன் சவுத் இந்தியா’ என்ற நூலை முரு கேசன் அவர்களை இணைத்துக் கொண்டு வெளி யிட்டது ஆகும். இந்த நூலுக்கு சி. எஸ். அவர்கள், இந்து, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்களில் வெளி யான செய்திகளை கடும் முயற்சிகளை மேற்கொண்டு திரட்டினார். அத்துடன் சென்னை ஆவணக் காப்பகம், தில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகம் ஆகிய வற்றிற்கும் சென்று தகவல்களை திரட்டினார்.  அவரது மற்றொரு பங்களிப்பு, பாரதியாரின் ‘இந்தியா’ இதழில் வெளியான கட்டுரைகளை தொகுத்து பாரதி தரிசனம் என்ற தலைப்பில் முதல் தொகுதி யினை 1975-இல் பதிப்பித்ததாகும். 1976 ஆம் ஆண்டில் பாரதி தரிசனம் இரண்டாம் தொகுதியாக வந்தது. தமிழ் மண்ணில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு விதை போட்ட தோழர்.அமீர் ஹைதர்கானின் வாழ்க்கை வரலாற்றை ‘தென்னிந்தியாவை கண்டேன்’ என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டார். மேலும், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை  சிறந்த முறையில் எழுதியுள்ளார் சி.எஸ். இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மங்காப் புகழ்பெற்றவர் தோழர் சி.எஸ்.  அவரது புகழை இன்னும் பல நூறாண்டுக் காலம் பறைசாற்றப்போகி றது கோபிசெட்டிபாளையத்தில் எழுந்துள்ள அரங்கம்.  

கட்டுரையாளர் : கோவை  மாவட்ட 
செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 

;