world

img

இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கு சிகிச்சை

பொகோடா, ஜூன் 17- இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன குழந்தைகளுக்கு தங்கள் நாட்டில் மருத்துவ சிகிச்சை கொடுக்க தயாராக இருப்பதாக கொலம்பியா இடதுசாரி அரசாங்கம் அறிவித்துள்ளது. தங்கள் நாட்டின் ராணுவ மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்படும்  என அந்நாட்டின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  2023 அக்டோபர் 7 போர் துவங்கியது முதல் இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன குழந்தைகளை குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால் 12 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன குழந்தைகள் படுகொலையானதுடன். ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் தங்கள் கையையோ, காலையோ அல்லது இரண்டையுமோ இழந்து வருகின்றனர்.  இந்நிலையில் காசா பகுதிக்குள் ஐ.நா நிவாரண வாகனங்களை செல்லவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தடுத்து வைத்துள்ளதால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைபாட்டின் காரணமாக மரணத்தின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் குழந்தைகளின் உயிரைக்காக்கும் பொருட்டு கொலம்பியா இடதுசாரி அரசு எடுத்துள்ள முடிவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.  தென்னமெரிக்க நாடுகளில் இஸ்ரேலுடன் இணக்கமான உறவை பேணி வரும் நாடுகளுள் ஒன்று கொலம்பியா. இடதுசாரியான குஸ்தவோ பெட்ரோ 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகும் இஸ்ரேலுடனான உறவில் விரிசல் இல்லாமல் தொடர்ந்து வந்தார்.  காசா மீதான இனப்படுகொலைத் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியவுடன் தனது தூதரை திரும்பப் பெற்றார். கடந்த வாரம் இஸ்ரேலுக்கான நிலக்கரி ஏற்றுமதியையும் நிறுத்தப் போவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

;