tamilnadu

img

சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது! - வி.பரமேசுவரன்

புத்துலக இலக்கியப் படைப்பாளிகளில் முன்னணியில் நிற்பவர் மாக்சிம் கார்க்கி. அவரது தாய் நாவலின் முதல் பதிப்பு 1904 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 120 ஆண்டுகளை கடந்த பிறகும் அந்த நாவல் அமர காவியமாய் இன்றும் உலகெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.  ரஷ்ய நாட்டு ஜார் ஆட்சியின் கீழ் தொழிலாளி களும், விவசாயிகளும், இளைஞர்களும் படும் துன்பதுயரங்களை கார்க்கி உயிரோட்டமாக வர்ணிக்கிறார். மக்களின் நெஞ்சங்கள் மெல்ல மெல்ல போராட்டக் கனலை நோக்கி நகர்வதை எதார்த்த வாழ்க்கை நிகழ்வுகளோடு சித்தரிக்கிறார். நாவலில் வரும் கதை மாந்தர்  களின் காட்சிகள் ஒவ்வொன்றும் வாசகர்களுக்கு சிலிர்ப்பூட்டுகிறது. தடை செய்யப்பட்ட புத்தகங்களை மகன் படிப்பதைக் கண்டு தாய் பயப்படுகிறாள். அவள் கடவுளிடம் மண்டியிடுகிறார். தாய்க்கு மகன் நாட்டு நடப்புகளைக் கூறி புரிய வைக்கிறான். நீ பயப்படாமல் இரு என்று தாயை பாசத்துடன் மகன் பாவெல் தேற்றுகிறான். மகனோடு தொழி லாளர்கள் கூட்டங்களுக்கு தாய் செல்கிறார். மகனின் எழுச்சி பொங்கும் உரைகளை தொழி லாளர்கள் செவிமடுப்பது தாயின் உள்ளம் பூரிக்கிறது. காலப்போக்கில் தாயும் புரட்சிக்காரி யாய் மாறுகிறாள். போராட்டக் களத்தில் பெண்களின் அளப்பரிய தியாகம் தாய் நாவலில் அனல் காற்றுப் போல வீசுகிறது.  மகன் பாவெல் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறான். பாவெலின் நண்பன் தாயைக் காண வருகிறான். அவனிடம் தாய் கூறுகிறார். “என் வாழ்க்கையும் மாறிவிட்டது. பயங்களும் மாறிவிட்டன. பணக்காரர்கள் என்று ஒரு வர்க்கம் இருக்கிற வரையில் சாதா ரண மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவ தில்லை. மகிழ்ச்சியோ, நியாயமோ எதுவும் கிடைக்கப் போவதில்லை” என்று தாய் கூறு கிறார். இது போன்று எளிய நடையில் சர்வாதி கார அரசியல் நிகழ்வுகளை கார்க்கி சித்தரிக்கும் அழகே அழகு.

‘பட்டினியிலும், பசியிலும் பாடுபடும் தோழர்களே, துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாருங்கள் தோழர்களே’ என்று தொழிலாளர் கூட்டத்தில் பாவெல் உணர்ச்சிப் பிழம்பாய் முழங்குகிறார். கூட்டத்தை ராணுவம் சுற்றி வளைக்கிறது. “கொள்ளையும், கொலை யும் நடத்தும் ஆட்சியாளர்களின் நிழலில் ராணு வத்தினர் நிற்கிறார்கள். அவர்களும், நம்மைப் போல் மனிதர்கள்தான். நமது கொடியின் கீழ் அவர்களும் விரைவில் அணி வகுத்து நிற்பார்கள்” என்று பாவெல் இடி முழக்கம் செய்கிறார். பாவெல் கதாபாத்திரம் மூலம் கார்க்கி கண்ட கனவு ரஷ்யாவில் நனவானது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு 1914ஆம் ஆண்டு ஜார் மன்னனுக்கு எதிராக பெட்ரோகிராட் நகரில்  லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தெருக் களில் இறங்கிப் போராடினர். ராணுவத்தினரும் மக்களுடன் சேர்ந்து கொண்டனர். மக்களை சுட மறுத்தனர். அதனால் தான் கார்க்கியை மாமேதை லெனின் மிகவும் பாசத்துடன் நேசித்தார். ரஷ்யாவில் அவலம் நிறைந்த மனித வாழ்வை ஊடுருவிப் பார்ப்பதற்கு லெனினுக்கு கார்க்கி மிகவும் தேவைப்பட்டார். அரசியல் களத்தில் உண்மையான இலக்கிய படைப்பாளிகளின் மகத்தான பங்களிப்பை இது உணர்த்துகிறது. 

சிறை மீண்ட பாவெல் தொடர்ந்து தொழி லாளர்கள் கூட்டங்களில் பேசுகிறார். “தோழர் களே, உலகில் இரண்டு மனித இனங்கள்தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம், மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம். பணக்காரர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்கள் தான் தொழிலாளர்களை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய்” என்று பாவெல் பிரகடனம் செய்ததும் தொழிலாளர்கள் ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறார்கள்.  மகன் பாவெல் சிறைக் கொட்டடியில் வாடிய நிலையிலும் தாய் வீராங்கனையாக வீதிகள் தோறும் வலம் வருகிறார். ஆட்சியாளர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்கு பல வேடங்களில் திரிந்து மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்  கிறார். தனது அனுபவ அறிவாலும், சுமூக மாகப் பழகும் தன்மையினாலும் மக்களை சந்திப்பதில் தாய்க்கு பேரானந்தம். உலகத்திலே அமோகமான வளமும், செல்வமும் நிறைந் திருப்பதையும், இந்த செல்வ வளத்திற்கு மத்தி யிலும், மக்கள் அரைப் பட்டினி, குறைப் பட்டினி யாக உயிர் வாழும் அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்கிறார். ‘இனிய பொழில்கள், நெடிய வயல்கள், எண்ணரும் பெரும் நாடு, கனியும் கிழங்கும் கணக்கின்றி தரும் நாடு, நித்தம் நித்தம் கணக்கின்றி தரும் நாடு... தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்” என்று விடுதலை முரசு கொட்டிய பாரதியின் கவிதை வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கது. 

நீதிமன்றத்தில் கூண்டில் நிறுத்தப்பட்ட பாவெல் முழங்குகிறான், ‘சிறு குழந்தைகள் விளையாட்டுக் கருவிகளிலிருந்து பிரம்மாண்ட இயந்திர சாமான்கள் வரை அனைத்தும் எங்கள் உழைப்பின் மூலமே உலகிற்கு படைத்துக் கொடுக்கிறோம். ஆனால் எங்களது மனித கவுர வத்தை காப்பாற்றிக் கொள்ளும் உரிமைகளைக் கூட பறி கொடுத்தவர்களும் நாங்கள் தான். எங்களது கோஷங்கள் தெளிவானவை. “தனிச் சொத்துரிமை ஒழிக”, “உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் மக்கள் கையில்”, “அதிகாரம் அனைத்தும் மக்களிடம்”, “உழைப்பது ஒவ்வொருவரது கடமை”. பாவெலுக்கு ஆயுள் தண்டனை வழங்கப் பட்டு சைபீரியா பனிப் பிரதேச சிறைக் கூடத்திற்கு அனுப்பப்படுகிறான். நீதிமன்ற வாயிலில் கூடிநின்ற தொழிலாளர்கள் பாவெலின் தாயைப் பார்த்து, ‘உங்கள் மகன் எங்கள் அனை வருக்கும் தைரியம் ஊட்டும் சிறந்த உதாரண மாய் விளங்குகிறான்” என்கிறார்கள். ருஷ்ய தொழிலாளர்கள் நீடூழி வாழ்க என்ற முழக்கம் வானைப் பிளக்கிறது. 

மகன் சிறை சென்ற பிறகு அவனது பணியை தாய் கம்பீரத்துடன் தொடர்கிறார். “நமது  பிள்ளைகள் சத்தியமும், அறிவும் உள்ள பாதையில் பயணிக்கிறார்கள். மனித இதயங் களுக்கு அன்பைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். இவ்வுலகத்தை புதிய ஒளி வெள்ளத்தால் ஒளிரச் செய்கிறார்கள்” என்று தாய் உணர்ச்சி பொங்கக் கூறுகிறார். தாய் நாவலின் நிறைவுப் பகுதி வரிகள் தீக் கனல் போன்றவை. “மக்களே ஒன்று திரளுங்கள், ஓரணியில் சக்தியாய் திரண்டு நில்லுங்கள். எதைக் கண்டும் பயப்படாதீர்கள். நீங்கள் இப்போது வாழ்கிற  வாழ்க்கையை விட எதுவும் கொடுமை வாய்ந்த தாக இருக்கப் போவதில்லை.” கைது செய்யப் பட்டு காவலர்களால் தாக்கப்பட்ட நிலையிலும் தாய் கர்ஜிக்கிறார், “இந்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது”.  தாய் நாவலில் மாக்சிம் கார்க்கியின் சர்வாதி காரச் சித்தரிப்புகள் நமது நாட்டிலும் இன்று புதிய வடிவில் அரங்கேறுவதை காண முடிகிறது. சர்வாதிகாரக் கொடுமைகளை எதிர்த்து விவ சாயிகள் நடத்திய அண்மைக்கால போராட்டமும் நமது நாடு கண்ட வீரம் செறிந்த நிகழ்வாகும். அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  பாசிச பாணி எதேச்சதிகாரம் வீழ்ச்சியடைந்தது. மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் எழுச்சி பெற்றுள்ளன. தாய் நாவலில் வரும்  கதை மாந்தர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் வலம் வருகிறார்கள். கால வெள்ளத்தை கடந்து ஒளி வீசும் கார்க்கியின் படைப்புகள் களத்தில் நின்று போரிடும் ஒவ்வொருவருக்கும் எழுச்சியூட்டும் அருமருந்து.

 

;