tamilnadu

அன்றைய குண்டுவீச்சும் இன்றைய காலணி வீச்சும் - ப.முருகன்

அன்றைய குண்டுவீச்சும் இன்றைய காலணி வீச்சும்!

இந்திய விடுதலைக்காய் நாடாளுமன்றத்தில் குண்டுவீசி குரல்கொடுத்தது அந்தக்காலம் சாதிய அடிமைத்தனத்தை தக்க வைக்க நீதிமன்றத்தில் காலணி வீசல் இந்தக் காலம்.  சிறுபான்மையினர் உரிமையைப் பறிக்க மூர்க்கமாய் முயற்சி நடப்பதும் இக்காலம் பிராமணிய மேலாதிக்க சாதிய அமைப்பை காத்திட வக்காலத்து வாங்குது சனாதனம்   உலகமே ஒரு குடும்பம் எனும் அக்கூட்டம் இந்துக்கள் மட்டுமே நம் உறவு என்றிடும் இந்துக்கள் என்றால் எல்லாருமா - அல்ல நால்வருணத்தில் மேல் வருணம் மட்டுமாம்!  எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு சமத்துவ முரசறைந்தார் நம்கவி பாரதி சமம் எப்படி ஆகும் என்றனர் சனாதனிகள்!  இன்றிலிருந்து இந்தியா குடியரசு என்றும் ஒரு மனிதன் ஒரு மதிப்பு சட்டப்படி உறுதிஎன அரசியலமைப்புச் சட்டத்தை அறிமுகம் செய்து அம்பேத்கர் அறிவித்ததை ஏற்க மறுத்தனர்  மனுஸ்மிருதியே நாட்டின் சட்டம் ஆகணும் இது நமது சட்டமல்ல என மறுதலித்தனர் அன்றோ அரசமைப்பை ஏற்க மறுத்தனர் இன்றோ நீதிமன்றில் செருப்பு வீசுகின்றனர்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியா? அவர்ணரை யார் வரவேற்பர் என்று அவமதித்தார் சொந்த மராட்டிய மண்ணில் அதையும் சகித்தார் மாண்பமை கவாய்!  சத்ரபதி சிவாஜிக்கே முடிசூட்ட மறுத்த காகபட்டர்களின் கருவறை நாக்பூர் தானே! அவர்ணர் கவாயையா ஏற்றுக் கொள்ளும் அலட்சியமும் அவமானமும் வெகுமதியாம் கவாய்க்கு!  முதல் குடிமகள் முர்முவையே அவமதித்தவர்கள் கவாய்க்கு எப்படி கவுரவம் செய்வார்கள்? சமத்துவத்தை ஏற்காத சனாதன தர்மம் பிறப்பிலேயே பேதம் கற்பிப்பது அல்லவா!  கோகோய் போல் சந்திரசூட்டை போலே வாகாய் வளைந்து தீர்ப்பு வழங்கிட கவாயும் வசப்படுவார் என்ற எண்ணம் கனவாய் ஆகிட கடுகடுத்தது சிடுசிடுத்தது.  சாமபேத தான தண்ட வழிமுறையில் கவாயின் தாயாரை சிக்க வைக்க ஆர்எஸ்எஸ் விழாவுக்கு அழைப்பு விடுத்தது அம்மாவோ அதற்கு அடிபணிய மறுத்தார்  அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் கூட்டம் அதிரடியாய் இறங்கியது அச்சுறுத்தும் வேலையில் குறி வைத்தும் பொறி வைத்தும் தோற்றுப் போனதால் நேரடியாய் நீதிமன்றத்திலேயே மிரட்டிப் பார்க்கிறது.  நாட்டு மக்களின் கடைசிப் புகலிடமான உச்சநீதிமன்றத்திலேயே புகுந்து மிரட்டுகிறது சனாதனதர்மம் தாக்கப்படுவதை எங்களால் சகிக்க முடியாதென்று சவால் விடுகிறது  எத்தனை உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் எங்கள் காலடிக்கும் கீழ்எனும் இறுமாப்பில் சாதியச் சீழ்பிடித்த சாக்கடைச் சிந்தனையால் காலணியைக் கழற்றி வீசியடிக்கிறது  இந்தியச் சாதியமைப்பின் பிராமணிய குரூரம் ஏகலைவனின் கட்டைவிரல் பறித்த பயங்கரம் எய்தவன் வழக்கறிஞர் போர்வைக் குற்றவாளி கடவுளின் செயல் அது என்கிற கயவாளி!  ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற இந்து முஸ்லிம் ஒற்றுமை விரும்பிய காந்தி மகானை சுட்டுக் கொன்ற கயவன் கோட்சேயின் வார்த்தையும் இதுவே!  இந்த மிரட்டல் எனை எதுவும் செய்யாது எனது பணியைத் தொடர்வேன் என்ற கவாயின் கடமை உணர்வுக்கும் கண்ணியத்துக்கும் உள்ள உறுதிக்கும் ஈடிணை ஏதுமில்லை!  நீதிமன்றம் தன்னில் நியாயத்துக்கே பங்கமா! சட்டத்தை கட்டிக்காக்கும் சபைதனுக்கே சவாலா? சனாதன அதர்மத்தை சமூகத்திலிருந்து அகற்றுவதும் சமத்துவ சமூகத்தை படைப்பதும் காலத்தின் கட்டாயம்.